ஐக்கிய அரபு அமீரகம் - துபை நகரில், ஆண்டுதோறும் புனித ரமழான் மாதத்தில், அகில உலக திருக்குர்ஆன் மனனப் போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழமை. 18ஆம் ஆண்டாக இவ்வாண்டு ரமழான் முதல் நாள் முதல் 20ஆம் நாள் வரை, துபை சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிட கேளரங்கில் நடைபெற்ற போட்டியில், உலகின் 87 நாடுகளிலிருந்து - திருமறை குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ் மாணவர்கள் பங்கேற்றனர்.
ரமழான் 21ஆம் நாளன்று போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், நைஜீரிய நாட்டு மாணவர் 250,000 திர்ஹம்களை முதல் பரிசாகப் பெற்றார். இது தவிர, சிறந்த குரல் வளம், உச்சரிப்பு, கிராஅத் என பல வகைகளில் சிறப்புப் பரிசுகளும் சாதனை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இப்போட்டியில், இலங்கை மாவனல்ல - வளவுவத்த என்ற ஊரைச் சேர்ந்த முஹம்மத் முபாரக், மீரா பேகம் தம்பதியின் 15 வயது மகனான ஹாஃபிழ் முஹம்மத் ஸாபிர் பங்கேற்றார்.
இம்மாணவரது தாயாரின் தந்தையான மர்ஹூம் ஷேக் அப்துல் காதிர் என்பவர், காயல்பட்டினம் நெசவுத் தெருவைச் சேர்ந்த முஹம்மத் அலீ என்பவரின் மகனும், அதே தெருவைச் சேர்ந்த ஹஸன் இக்பால் என்பவரின் உறவினருமாவார்.
போட்டியில் பங்கேற்று, 80 விழுக்காடுகளுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற பிரிவில் இம்மாணவரும் இடம்பெற்றதால், அவருக்கு 30,000 திர்ஹம்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற அகில உலக திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினம் தொடர்புடைய மாணவர் பங்கேற்ற செய்தியறிந்து, காயல்பட்டினத்தைச் சேர்ந்த துணி உமர், டீ.ஏ.எஸ்.மீரா ஸாஹிப், சாளை ஷேக் ஸலீம் ஆகியோர் மாணவரை அவர் தங்கியிருந்த அறைக்கு நேரடியாகச் சென்று பாராட்டி, வாழ்த்திப் பிரார்த்தித்து வந்தனர்.
திருமறை குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்கள் காயல்பட்டினத்தில் ஆயிரக்கணக்கில் இருந்து வரும் நிலையில், இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பதற்கேற்ப அவர்களின் தரத்தை மேம்படுத்த மத்ரஸா நிர்வாகங்கள் முயற்சிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அக்காயலர்கள் கூறினர்.
தகவல்:
துபையிலிருந்து...
சாளை ஷேக் ஸலீம் |