காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியை நிர்வகித்து வரும் துளிர் அறக்கட்டளை சார்பில், பெண்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி, இம்மாதம் 23ஆம் நாள் புதன்கிழமை 17.30 மணியளவில், துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்றது.
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட கவுரவ செயலாளர் அ.வஹீதா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். சமூக ஆர்வலர் எஸ்.ஓ.பி.ஆயிஷா முன்னிலை வகித்தார். துளிர் பள்ளியின் மேலாளர் சித்தி ரம்ஸான் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் பேராசிரியை ராபியா ரோஷன் சித்தீக்கிய்யா - “ரமழானின் மாண்புகள்” என்ற தலைப்பிலும், எம்.எஸ்.எல்.பீவி ஃபாத்திமா முஅஸ்கரிய்யா - “ஸதக்காவின் சிறப்புகள்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
மஃரிப் நேரத்தை அடைந்ததும், மாணவர் நூர் முஹம்மத் பாங்கு ஒலிக்க, இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், கறிகஞ்சி, வடை வகைகள், குளிர்பான வகைகள், கடற்பாசி, பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பரிமாறப்பட்டன.
இஃப்தார் நிகழ்ச்சி நிறைவுற்ற பின், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,
மஃபதுல் ஹஸனாத் பெண்கள் தைக்கா,
அரூஸுல் ஜன்னஹ் பெண்கள் தைக்கா,
நஹ்வி அப்பா தைக்கா,
மவ்லானா அப்பா சின்ன கல் தைக்கா,
ஸாஹிப் தைக்கா,
ஹிழ்ரு தைக்கா,
ஆனா கானா தைக்கா,
ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தைக்கா,
பாத்திமா நாயகி தைக்கா,
கவ்து முஹ்யித்தீன் தைக்கா,
வாவு தைக்கா,
நுஸ்கிய்யா தைக்கா
ஆகிய - நகரின் பல்வேறு ஜமாஅத்துகளைச் சேர்ந்த பெண்கள் தைக்காக்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்ட அங்கத்தினர் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் வழங்கும் ஜகாத் - ஸதக்கா தொகைகளை துளிர் பள்ளிக்கும் வழங்கி, அதன் பணிகள் தொய்வின்றித் தொடர உதவிடுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, துளிர் நிறுவனர் வழக்குறைஞர் எச்.எம்.அஹ்மத் அறிவுறுத்தலின் படி, துளிர் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
துளிர் அறக்கட்டளை சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட மகளிருக்கான இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துளிர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |