நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டும், நோன்புப் பெருநாளை முன்னிட்டும், வெளியூர் - வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்களுக்காக, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, DCW ஆலை மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
வெளியூர் - வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்கள் பலர், நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டும், நோன்புப் பெருநாளை முன்னிட்டும் ஊர் வந்துள்ளனர். காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPAவின் பணிகள் குறித்து அவர்களுக்கு விளக்குவதற்காக, சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, நேற்று (ஜூலை 26 சனிக்கிழமை) 17.00 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
எஸ்.ஐ.புகாரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹிஷாம் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தலைமை தாங்கிய - KEPA தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில், KEPAவின் இதுநாள் வரையிலான பணிகள் குறித்து சாளை பஷீர் விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் - அரசின் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை சிறிதும் மதிக்காமல் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு அரசு அனுமதியளித்துள்ளதை எதிர்த்து KEPA தொடர்ந்துள்ள வழக்கு மற்றும் அதன் தற்போதைய நிலவரம் குறித்து, KEPA துணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
KEPAவின் தற்போதைய தேவைகள் குறித்து, அதன் துணைத் தலைவர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், துணைச் செயலாளர் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோர் பேசி, ஒத்துழைப்பு கோரினர்.
பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கேட்ட கேள்விகள், எழுப்பிய சந்தேகங்களுக்கு KEPA சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
KEPA செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48) நன்றி கூற, அதன் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆ இறைஞ்ச, ஸலவாத் - கஃப்பாராவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மஃரிப் வேளையை அடைந்ததும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரீத்தம்பழம், தண்ணீர், கறிகஞ்சி, வடை வகைகள், குளிர்பானம், பழ வகைகள் உள்ளிட்ட பதார்த்தங்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், வெளியூர் - வெளிநாடுகளிலிருந்து காயல்பட்டினம் வந்துள்ள ஆண்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடு காலத்தின் கட்டாயம் என்று கூறிய அவர்கள், தேவையான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டதாகவும், தாங்கள் சார்ந்த அமைப்புகளிடம் இதுகுறித்து விளக்கி, தேவையான அனைத்து ஆதரவுகளையும் பெற்றுத் தருவதாகக் கூறியதுடன், தமது தனிப்பட்ட பங்களிப்பையும் வழங்கினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, KEPA துணைத்தலைவர் என்.எஸ்.இ.மஹ்மூது, செயற்குழு உறுப்பினர் ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |