காயல்பட்டினத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் ரமழான் இரவு தராவீஹ் - சிறப்புத் தொழுகையை வழிநடத்த, திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ்கள் பிரத்தியேகமாக நியமிக்கப்படுவர்.
ரமழான் கடைசி நாட்களில் இவர்கள் தராவீஹ் தொழுகையில் திருக்குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த பின்னர், கடைசியாக தமாம் (நிறைவு) செய்யப்பட்டு, அன்றைய தொழுகை நிறைவுற்ற பின்னர் அவர்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படும் வழமை உள்ளது.
இந்நிகழ்ச்சியின்போது பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், ஜமாஅத்தார் தன்னார்வத்தோடும் - தொழுகை நடத்திய ஹாஃபிழ்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்துவர்.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் புதுப்பள்ளிவாசலில் இம்மாதம் 25ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று - ரமழான் 27ஆம் இரவு நடைபெற்ற தராவீஹ் தொழுகையின்போது, திருக்குர்ஆன் தமாம் செய்யப்பட்டது.
அதனையடுத்து, தராவீஹ் தொழுகையை வழிநடத்திய பள்ளியின் இமாம் ஹாஃபிழ் செய்யித் நூஹ், பிலால் பண்ணை அபுல் காஸிம், தராவீஹ் தொழுகைக்கான சிறப்பு இமாம்களான மவ்லவீ ஹாஃபிழ் எம்.டி.முஹம்மத் அப்துல் காதிர், ஹாஃபிழ் எம்.எம்.எஸ்.கிதுரு முஹம்மத் மஃபாஸ், ஹாஃபிழ் எஸ்.எச்.அலீ ஃபஹத் ஆகியோரையும், அவர்களுக்கு அனைத்து நாட்களிலும் துணையாக இருந்த ஹாஃபிழ் எஸ்.ஏ.இன்ஸாஃப் சுலைமான், ஹாஃபிழ் பி.எச்.அப்துர்ரஹீம், புதுப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மஸ்ஜித் ஷெய்கு ஸலாஹுத்தீன் - மேலப்பள்ளியின் இமாம் மவ்லவீ ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ ஆகியோரை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் மூத்த உறுப்பினர் ஓ.ஏ.உவைஸ், துணைத்தலைவர்களான ஹாஜி எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, ஹாஜி ஷேக் ஸலாஹுத்தீன் மற்றும் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக, பள்ளி நிர்வாகத்தின் சார்பில், இமாம் - பிலால், தராவீஹ் இமாம்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டதுடன், பணமுடிப்பும் வழங்கப்பட்டது. பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் அவற்றை இமாம்களுக்கு வழங்கினார்.
புதுப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் - பள்ளி மாணவர்களுக்கான மார்க்கக் கல்வி நிறுவனம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை சார்பிலும் இமாம்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சியின்போது, மஹல்லாவாசிகள் பள்ளி நலனுக்காக நன்கொடைகளை வாரி வழங்கினர்.
பின்னர், பள்ளியின் பாரம்பரிய வழமைப்படி முரசு (டங்கா) முழங்க, அரபி பாடல்களைப் பாடியவாறு நகர்வலமாக இமாம்கள் அவர்களின் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, இமாம்களின் இல்லத்தினர் சார்பில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தாருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
நிகழ்வுகள் அனைத்திலும், புதுப்பள்ளி மஹல்லாவாசிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். 27ஆம் இரவை முன்னிட்டு, பள்ளியின் முகப்புப் பகுதி வண்ணச் சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தகவல் & படங்கள்:
A.S.அஷ்ரஃப்
புதுப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ரமழான் மாதம் 27ஆம் நாளன்று நடைபெற்ற இமாம்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
புதுப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |