காயல்பட்டினம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு மற்றும் மாணவர்களுக்கான பெருநாள் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியில், அப்பள்ளிக்கு மையவாடி அமைப்பதற்கான நிலம் வாங்கிட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துளள் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் இஃப்தார் - நோன்பு துறப்பு மற்றும் பள்ளியின் மக்தப் மாணவ-மாணவியருக்கு பெருநாள் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி, இம்மாதம் 22ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 17.30 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்முறை:
வாவு எஸ்.அப்துல் கஃப்பார் தலைமை தாங்கினார். ஏ.கே.பீர் முஹம்மத், வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி உள்ளிட்ட பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தீனிய்யாத் பிரிவு மாணவர் ஆஷிக் இறைமறை குர்ஆனிலிருந்து சில வசனங்களையோதி, நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைவர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான் வரவேற்புரையாற்றினார்.
மையவாடிக்கு நிதி கோரிக்கை:
எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் மரணிப்போரை இதுநாள் வரையிலும் குருவித்துறைப்பள்ளியிலேயே அடக்கம் செய்து வருவதாகக் கூறிய அவர், அதற்காக அப்பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.
மழைக்காலங்களில் மரணம் நிகழ்ந்தால், ஜனாஸாவைத் தூக்கிச் செல்வதில் பெரும் அவதி உள்ளதாகவும், பள்ளிவாசல் அருகிலேயே மையவாடி அமைந்தால் இது தவிர்க்கப்படும் என்றும் கூறிய அவர், அவ்வாறு அமையும்போது இப்பகுதி மக்களுக்கு ஜியாரத் செய்வதன் முறைமைகளும் விளங்கிட வாய்ப்பேற்படும் என்றும் கூறினார்.
பள்ளிவாசலுக்கு அருகில் 20 சென்ட் பரப்பளவில் நிலம் விலைக்கு வருவதாகவும், பொதுமக்களிடமிருந்து தாராள நன்கொடை எதிர்பார்க்கப்படுவதாகவும், போதிய நிதி கிடைக்கப்பெற்றால் இப்பள்ளிக்கென தனி மையவாடி அமையும் என்றும் அவர் கூறினார்.
சிறப்புரை:
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ சிறப்புரையாற்றினார். இப்பள்ளியில் நடைபெறும் வணக்க வழிபாடுகள் மற்றும் மக்கள் நல செயல்பாடுகளைப் புகழ்ந்துரைத்ததோடு, மற்ற பள்ளிகளைப் போலல்லாமல் - முழுக்க முழுக்க காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் நம்பியிருக்கும் இப்பள்ளிக்கு அவசரத் தேவையாக இருக்கும் மையவாடி விரைவில் அமைவதற்கு பொதுமக்கள் தாராளமாக உதவிட முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
முஸ்லிம் லீக் சார்பில் ரூ. 1 லட்சம் நன்கொடை:
அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.
பள்ளிவாசலையொட்டி மையவாடிக்கு நிலம் வாங்கும் வகைக்காக, தம் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் 1 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் என்று, நகர தலைவரின் அனுமதியுடன் அறிவிப்பதாக அவர் கூறினார்.
கட்டணமின்றி ஹாமிதிய்யாவில் கல்வி:
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, பொதுவாக மத்ரஸாக்களில் மாணவர்களிடம் கட்டணம் என பெரிதாக பெறப்படுவதில்லை என்றும், சிற்சில சூழல்களில் நிர்ப்பந்தம் காரணமாக பெறப்படும் கட்டணம் கூட, இப்பகுதியிலிருந்து ஹாமிதிய்யாவில் பயில வரும் மாணர்வகளிடமிருந்து பெறப்படாது; முற்றிலும் இலவசமாகவே பயிற்றுவிக்கப்படும் என்று கூறினார்.
பட்டப்படிப்பு வரை முழுச் செலவினத்திற்கும் ஐக்கிய சமாதானப் பேரவை பொறுப்பேற்பு:
அடுத்து உரையாற்றிய ஐக்கிய சமாதானப் பேரவையின் தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, இப்பகுதியிலிருந்து பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களின் மேற்படிப்பு வரையிலான செலவினங்களுக்கு தமது அமைப்பு முழுப் பொறுப்பேற்றுக்கொள்ளும் என அறிவித்தார்.
புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி:
உரைகளைத் தொடர்ந்து, இப்பள்ளியின் தீனிய்யாத் - மார்க்கக் கல்விப் பிரிவில் பயிலும் மாணவ-மாணவியருக்கு பெருநாள் புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேடையில் முன்னிலை வகித்தோர் - அவற்றை மாணவ-மாணவியருக்கு வழங்கினர்.
மேடையில் அங்கம் வகித்த அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ நன்றி கூற, துஆவுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இஃப்தார் நிகழ்ச்சி:
தொடர்ந்து இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவருக்கும் கறி கஞ்சி, வடை வகைகள், குளிர்பானம், கேக், பழ வகைகள் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த பிரமுகர்கள், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் நன்கொடையாளர்கள், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பின்னர் மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. தொழுகை நிறைவுற்ற பின்னர் அனைவருக்கும் தேனீர் பரிமாறப்பட்டது.
ஏற்பாடு:
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |