| 
 புற்றுநோய்க்கு ஆளானோரின் நலனுக்காக, புனித ரமழான் மாதத்தில் இறைவனிடம் இறைஞ்சுமாறு - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) நகர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை:- 
  
கண்ணியமிக்க காயல்வாசிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ  பரக்காத்துஹ்! 
  
கடந்த 10 வருடங்களாக நமதூரில் புற்று நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே வந்துள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை புற்று நோயாளிகளின் இறப்பு விகிதம் மாதம் 02 அல்லது 03 பேர் வரை என இருந்தது. ஆனால் மிக அண்மைக்காலமாக இந்த விகிதம் மிக அபாயகரமான அளவில் அதிகரித்து வருகின்றது. 
  
புனித ரமழானுக்கு சற்று முன்பிருந்து இன்றைய தினம் வரை நமதூரில் காலமானவர்களின் எண்ணிக்கையானது  32 ஆகும். இதில் புற்று நோயின் கொடூர தாக்குதலினால் வலியும் வேதனையும் மிகுந்து இறந்தவர்களின் எண்ணிக்கை  கிட்டதட்ட பாதி  ஆகும்.   
  
மிகுந்த பொருட்செலவும், உடல் வேதனையும், மன உளைச்சலும், அலைச்சலும் உண்டாக்கும் இந்த புற்று நோயினால் பச்சை பாலகன் முதல் தள்ளாடும் முதியவர் வரையுள்ள அனைத்து  வயதுப்பிரிவினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 
  
தினசரி சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக நமதூர் மக்களின் புற்று நோய் இறப்பு விகிதம் கூடுதலாகிக்கொண்டு வருகின்றது. 
  
பாவங்கள் அழிக்கப்பட்டு பிரார்த்தனைகள் ஏற்கப்படும் இந்த புனித மிகு ரமழான் மாதத்தில் நமதூரின் மீதான புற்று நோயின் தாக்குதலுக்கு எதிராக வல்லோன் அல்லாஹ்விடம் முறையிடுவோம். 
  
துஆக்கள் மிக அதிகமாக ஏற்கப்படும் ஸஹர், இஃப்தார் வேளைகளில் இது வரை நமதூரில் புற்று நோயால் உயிர் நீத்தவர்களின் பாவ மன்னிப்பிற்கும், புற்று நோயால் தற்சமயம் அவதிப்படுவோருக்கு விரைவில் குணம் கிடைக்கவும் புற்று நோயாளிகளுடைய குடும்பத்தினரின் மன நிம்மதிக்கும் இனிமேல் புதியதாக யாருக்கும் இந்த நோய் தாக்காமல் இருக்கவும் நாம் அனைவரும் உள்ளம் உருகி பிரார்த்திப்போம். 
  
வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்! 
  
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  
தகவல்:  
சாளை பஷீர்
  
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!  |