ஜூலை 26 அன்று இங்கிலாந்து நேரப்படி இரவு 10:41 மணிக்கு அமாவாசை ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை
அதிகாலை 4:11. மேலும் ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் நேரம் ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை காலை 8:41. எனவே அமாவாசை தினம்
என ஒரு குறிப்பிட்ட தினத்தை கூற முடியாது என்பதனை இதில் இருந்து காணலாம்.
அமாவாசை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் நிகழ்வு என்பதால் உலகின் ஒரு சில பகுதிகளில் ஜூலை 26 அமாவாசை தினமாகும். வேறு
பகுதிகளில் ஜூலை 27 அமாவாசை தினமாகும்.
அமாவாசை தினம் எனக்கூறப்படும் தேதியில் - அமாவாசை நிகழும் நேரத்தை பொறுத்து, உலகின் சில பகுதிகளில் தேயும் பிறையையோ அல்லது
உலகின் சில பகுதிகளில் வளரும் பிறையையோ காணலாம் என்பது விஞ்ஞானப்பூர்வமான உண்மை.
இதனை உணர்த்தவே காயல்பட்டணம்.காம், ஜனவரி 29, 2014 அன்று செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் ஜனவரி 30 (இங்கிலாந்து நேரப்படி அமாவாசை தினம்) அன்று தேயும் பிறையை காணலாம் என்ற செய்தியையும், ஜனவரி 31 அன்று அவ்வாறு ஈரான் நாட்டில் காணப்பட்ட செய்தியையும் வெளியிட்டிருந்தது.
அமாவாசை தினம் எனக்கூறப்படும் நாளில் பிறையை காண ஜூலை 26 மற்றொரு வாய்ப்பினை தருகிறது.
அன்று காலை - ஆஸ்திரேலியா, பிஜி, நியூசிலாந்து பகுதிகளில் தேயும் பிறையை எளிதாகவும், தென் கிழக்கு ஆசியா, தென் இந்தியா, அரேபியா தீபகற்பத்தின் தென் கோடி, ஆப்ரிக்கா கண்டத்தின் தென் பகுதி ஆகியவற்றில் - வானிலை சூழல் தோதுவாக இருந்தாலும், தேயும் பிறையை காணலாம்.
அன்றைய தினம் (ஜூலை 26), ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் காலை 5:36 மணிக்கு சந்திரன் உதயமாகிறது. அன்று அங்கு சூரிய உதயம் - 6:33 மணிக்கு. மேலும் சந்திரன் - சூரியன் இடைவெளி (ELONGATION) சுமார் 13 டிகிரி.
அன்றைய தினம் (ஜூலை 26), காயல்பட்டினத்தில் காலை 5:27 மணிக்கு சந்திரன் உதயமாகிறது. அன்று சூரிய உதயம் - 6:08 மணிக்கு. மேலும் சந்திரன் - சூரியன் இடைவெளி (ELONGATION) சுமார் 11.5 டிகிரி.
காயல்பட்டினத்தின் கிழக்கு திசையில் சந்திரன் 5:27 மணிக்கு உதயமானவுடன் - வானிலை சூழல் தெளிவாக இருந்தால், தேயும் பிறையை காணலாம்.
கீழே காணும் படம், காயல்பட்டினத்தில் ஜூலை 26 அன்று அதிகாலை 5:27 மணியளவில் தேயும் பிறையை காண வேண்டிய திசையை விளக்குகிறது.
|