காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட தென்னக ரெயில்வே பணியாணை வெளியிட்டுள்ளதாக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள்:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், இந்திய தொடர்வண்டித் துறை இணையமைச்சராக இருந்த இ.அஹ்மத் மூலமாக கடந்த 2009ஆம் ஆண்டில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பலனாக மேம்பாட்டுப் பணிகள் துவங்கின.
பணிகள் இடைநிறுத்தம்:
பல்வேறு காரணங்களால் மேம்பாட்டுப் பணிகள் அரைகுறையாக நின்று போனதையடுத்து, முஸ்லிம் லீக் உள்ளிட்ட நகரின் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வந்தனர். இருந்தும் அவை பொருட்படுத்தப்படாதிருந்தது.
நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட பணியாணை:
பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - நகரின் அனைத்து அரசியல் கட்சிகளோடு இணைந்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பலனாக தற்போது நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட பணியாணை பெறப்பட்டுள்ளது.
முஸ்லிம் லீக் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி:
இத்தகவலை முறைப்படி அறிவிக்கும் நோக்குடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நலக்கமிட்டிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, இம்மாதம் 21ஆம் நாள் திங்கட்கிழமையன்று 17.30 மணியளவில் காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்பட்டது.
கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும், பிற அரசியல் கட்சிகள் - பொதுநல அமைப்புகளுடன் இணைந்தும் முன்வைத்த கோரிக்கைகள், போராட்ட நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் விளக்கிப் பேசினார்.
அனைத்துக் கட்சிகள் சார்பில் முஸ்லிம் லீகிற்கு நன்றி:
அடுத்து, மதிமுக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசிய தலைவரும், அப்போதைய மத்திய அமைச்சருமான இ.அஹ்மதை அணுகி, தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிக்காக ரூபாய் 70 லட்சம் வரை நிதி பெற்றுத் தந்தமைக்கும்,
துவங்கி இடைநிறுத்தப்பட்ட - நிலுவைப் பணிகளை மீண்டும் தொடர, நகரின் அனைத்து அரசியல் கட்சிகள் - பொதுநல அமைப்புகளைக் கொண்டு போராட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தமைக்கும்,
அதன் பலனாக நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட தற்போது பணியாணை பெறப்பட்டுள்ளதை முறைப்படி அறிவிப்புச் செய்திட - இந்த இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கும், நகரின் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
நடைமேடையை உயர்த்தவும் கோரிக்கை:
தற்போதைய பணியாணையின் படி, நடைமேடை விரிவாக்கப் பணிக்கு மட்டுமே உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், இது முதல் வெற்றி என்றாலும், நடைமேடையை உயர்த்தும் பணிக்கு நிதியொதுக்கீடு செய்திட மத்திய அரசு சார்ந்த கட்சிகளும், அதற்குத் தூண்டுதல் கொடுத்திட மாநில அரசு சார்ந்த கட்சிகளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த காளிமுத்து, அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் ஆகியோர், நடைமேடையை உயர்த்தும் பணிக்கு தமது ஒத்துழைப்பை உறுதிசெய்து பேசினர்.
அடுத்து பேசிய முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்தும், ஒவ்வொரு தேவைக்கும் திருச்செந்தூரிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கே செல்ல வேண்டிய நிலையுள்ளதாகவும், இதனால் பெரும் அலைச்சலும், அவதியும் ஏற்படுவதாகவும், அதைத் தவிர்த்திட - காயல்பட்டினத்திலேயே துணை வட்டாட்சியர் அலுவலகம் அமைய வேண்டியது அவசியம் என்றும், அதற்கான முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.
சமத்துவ மக்கள் கட்சியின் காயல்பட்டினம் நகர தலைவர் அப்துல் அஜீஸ், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பிரபு சுல்தான் ஆகியோர், தொடர்வண்டி நிலைய நிலுவைப் பணிகள் நிறைவேற்றப்பட உழைத்த அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் உரை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நிறைவுரையாற்றினார்.
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நிலுவைப் பணிகள் நிறைவேற்றப் படுவதற்கான பணியாணை விபரத்தை அவர் கூட்டத்தில் முழுமையாக விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் தவிர, எஞ்சிய நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதற்காகவே தற்போது நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நிலுவைப் பணிகள் நிறைவேற்றப்பட முஸ்லிம் லீகுடன் இணைந்து உழைத்த - நகரின் அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து ஜமாஅத்தினர் மற்றும் பொதுநல அமைப்பினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி:
முஸ்லிம் லீக் நகர பொருளாளர் எம்.ஏ.ஹஸன் நன்றி கூற, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ துஆ இறைஞ்ச, இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. ஏற்பாடுகளை, முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
பங்கேற்றோர்:
இந்நிகழ்ச்சிகளில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதிமுக, மதிமுக, சமக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், உலக காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகள், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர்மன்ற அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்விடத்தையொட்டியுள்ள மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளியில் மஃரிப் தொழுகையை கூட்டாக நிறைவேற்றிய பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |