மன்றச் செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்டு, ஏழைகளின் நலன்களுக்காக உழைத்திட முன்வருமாறு, துபை காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அம்மன்றத் தலைவர் இளைஞர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல் மாநகர மக்களுக்காக பல்வேறு நலப் பணிகளை முன்னோடியாக இருந்து செய்து வரும் துபை காயல் நல மன்றத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 15.08.2014 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற இக்கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் சகோ. கத்தீப் எஸ். இப்றாஹீம் காக்கா அவர்கள் தலைமை தாங்கினார். சகோ. பிரபு ஸுல்தான் ஜமால்தீன் அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
கடந்த ஈதுல் ஃபித்ர் பெருநாளுக்குப் பிறகு காயல் மாநகரம் சென்று வந்த மன்றத் தலைவர் தான் ஊரில் அவதானித்த பல விஷயங்கள் குறித்தும், நமதூரின் நிலைமைகள் குறித்தும் உரை நிகழ்த்தினார்.
“நலப் பணிகள் செய்வதற்கு ஊரில் நிறைய இருக்கின்றன. மன்றத்தின் இளைய தலைமுறையினர் முன்வந்து பொறுப்புகளை எடுத்துச் செய்தால் இன்னும் பல்வேறு நலப் பணிகளை நாம் செய்யலாம். நாம் வழக்கமாக செய்து வரும் நலப் பணிகள் போக புதிதாக நமதூர் ஏழைகளுக்கு உதவிடும் வகையில் என்னென்ன பணிகள் செய்யலாம் என்று ஆலோசியுங்கள். நமது உதவிகள் துரிதமாகவும், எந்தவிதத் தாமதமின்றியும் உரியவர்களுக்கு சென்று சேர்ந்திடும் வகையில் அமைந்திட வேண்டும்...” என்று தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் காயல் சொந்தங்களுக்காக மன்றம் கடந்த ரமலானில் செய்த பல்வேறு நலப் பணிகள், மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவிகள் குறித்த Feedbackகள் அலசப்பட்டன.
நமதூர் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கூட அலுவலக ஊழியர்களுக்கும் இலவச மருத்துவ முகாம் நடத்துவதற்குள்ள ஏற்பாடுகள் குறித்து விடுமுறைக்காக ஊர் சென்றிருக்கும் செயற்குழு உறுப்பினர்களிடம் தொலைபேசியில் கலந்தாலோசிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்த செயற்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.S.அப்துல் ஹமீத்
துபை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |