காயல்பட்டினத்தில் சமீப காலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்தும், DCW தொழிற்சாலையின்
விரிவாக்கத் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்தும் தினகரன் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது:
தினகரன் (நெல்லை பதிப்பு) - ஆகஸ்ட் 16, 2014
காயல்பட்டினம் பகுதியில் ஒரே மாதத்தில் 16 பேர் புற்று நோயால் இறந்ததால் அப்பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் புதிய யூனிட்
தொடங்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் உள்ள 9 ஆயிரம் வீடுகளில் கடந்த 2011ல் சர்வே நடத்தப்பட்டது. இதில் 450 பேர் 20 வகை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு சுவாச கோளாறு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நோய்க்கான
காரணம் குறித்து அறியும் ஆர்வம் அதிகரித்தது. அருகில் உள்ள ஆலையில் வெளியாகும் வெண்ணிற புகை நெடியுடன் நகரை சூழ்வதும், செந்நிற
கழிவு கடலில் கலப்பதும் பொதுமக்களை கலக்கமடையச் செய்தது. நகரையொட்டியுள்ள சிங்கித்துறை கொம்புத்துறை மீனவக் கிராமங்களில் வசிக்கும்
மக்களுக்கும் இவ்வித பாதிப்புகள் இருந்தன. அவர்கள் கடலில் இறங்கி வேலை செய்ததால் தோலில் அரிப்பும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மக்கள் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை (கெப்பா) தொடங்கி அரசுக்கு மனுக்கள் அனுப்பினர். இந்நிலையில்,
2011ல் அருகில் உள்ள ஆலையில் சில யூனிட்களை விரிவாக்கம் செய்யவும், புதிய யூனிட் உருவாக்கவும் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில்
புதிய உருவாக்கமும், விரிவாக்கமும் கூடாது என்று காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காயல்பட்டினத்துக்கும் ஆறுமுகநேரிக்கும் நடுவே ஓடி கடலில் கலக்கும் உப்பாற்று ஓடை தண்ணீர் தொழிற்சாலைக் கழிவால் செந்நிறத்துடன்
காணப்படுகிறது. இந்த மாசுபட்ட நீரால் கடற்கரையில் செழித்து வளர்ந்திருந்த சதுப்புக்காடு அழிந்துவிட்டது. அப்பகுதியில் படகுகளை நிறுத்தி தொழில்
செய்த மீனவர்கள் வேறிடத்துக்கு சென்று விட்டனர். ஆண்டு முழுவதும் தேங்கிய நீரை குறிப்பிட்ட காலகட்டத்தில் மொத்தமாக திறந்து விடுவதால் பல
மைல் சுற்றளவுக்கு மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறக்கின்றன. இப்பகுதியில் இயற்கையாக வளரும் கடற்பாசியும்
கருகிவிடுகிறது.
முன்பு இத்தொழிற்சாலைக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வினைல் குளோரைட் மோனோமர் என்ற வேதிப்பொருள் டேங்கர் லாரிகளில் கொண்டு
வரப்பட்டது. இது கசிந்தால் அப்பகுதியில் வாழும் உயிர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவது உறுதி என்பதால் பல ஊர் மக்களும் திரண்டு தடுத்தனர்.
அதன்பின்பு அந்த வேதிப்பொருளை கொண்டு வருவதை நிறுத்தியதாக கூறினாலும், காற்றில் கலந்துவரும் நச்சுக்கசிவால் தங்களுக்கு இன்னமும் கண்
எரிச்சல் ஏற்படுவதாக சிவன் கோயில் அருகே உள்ள மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் கூறினர்.
இது குறித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் பஷீர் கூறுகையில், எங்கள் பகுதியில் கடலோரம் அமைந்துள்ள தொழிற்சாலையில்
டிரை குளோரோ எத்தலின், பிவிசி, சிபிவிசியும் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரி மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக
அக்டோபர் முதல் டிசம்பர் வரை இங்கிருந்து குரோமியம், காட்மியம், அயன் ஆக்சைட் உள்ளிட்ட கழிவுகள் கடலில் கலந்து விடப்படுகின்றன.
இதனால் மீன் வளம் குறைந்ததோடு, கழிவை உண்ட மீன்கள் மூலம் மக்களுக்கு புற்றுநோய் வருகிறது. மேலும், கடலில் இறங்குவதால் கண்
எரிச்சலும், புகையை சுவாசிப்பதால் தோல் நோயும் பரவுகின்றன. இப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2001 & 2002ல் காஸ்டிக் சோடா தயாரிப்பில் உருவாகும் பிரதான கழிவான குளோரின் வாயு மேகமூட்டம் போல் திரண்டு பெருவாரியானவர்களுக்கு
சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அதேபோல், முன்பு தொழிற்சாலையிலிருந்து வெளியான பாதரசக்கழிவை நிறுத்திவிட்டதாக நிர்வாகம் கூறினாலும், அதன் பாதிப்பு நீண்ட நாள்
இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொழிற்சாலையின் புகைக்கூண்டுகள் உயரம் குறைவாக இருப்பதால் அதிகாலை 4, 5 மணிக்கு புகை
பக்கத்து ஊர்களை சூழ்கிறது. இது குறித்து பொதுமக்கள் போராடியதன் விளைவாக 2012ல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு நிபுணர் குழுவை அனுப்பி
ஆய்வு செய்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்களே வசிக்க முடியாது
இது குறித்து தமிழன் முத்து இஸ்மாயில் கூறுகையில், புதிய திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அறிக்கையை அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு மூலம் தொழிற்சாலை தயாரிக்க வில்லை. மக்களிடம் முழுமையாக கருத்து கேட்கப்படவில்லை. ஏற்கனவே கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு நிலவுகிறது. புதிய யூனிட் தொடங்கினால் இப்பகுதியில் மக்களே வசிக்க முடியாது. எனவே தீவிரமான போராட்டத்தில் ஈடுபட அனைவரும் தயாராகி வருகின்றனர் என்றார்.
28ம் தேதி பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நிபுணர் குழுவின் ஆய்வில் சுற்றுச்சூழல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டும் கூடுதல் உற்பத்தி மற்றும் புதிய
யூனிட்களை தொடங்க அந்த தொழிற்சாலைக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில்
முறையிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் இறந்த 16 பேருக்கு புற்றுநோய் அறிகுறி இருந்துள்ளது. வரும் 28ம் தேதி பசுமை தீர்ப்பாயத்தில்
நடக்கும் விசாரணையில் இந்த மருத்துவ ஆய்வறிக்கையை காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் அளிக்க உள்ளனர். காயல்பட்டினம்
தவிர, பக்கத்து ஊர் உப்பளத்தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்களும் புதிய யூனிட்டை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள்
அனுப்பியுள்ளனர்.
|