உலக காயல் நல மன்றங்களின் மருத்துவக் கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் அலுவலகத் துவக்க விழா மற்றும் மூன்றாவது செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் நிர்வாகி கண்டி ஸிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
செயற்குழுக் கூட்டம்:
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் புதிய அலுவலகத் துவக்க விழா மற்றும் 3ஆவது செயற்குழுக் கூட்டம் 02.08.2014 ஞாயிற்றுக்கிழமையன்று 18.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் கதவிலக்கம் 289 A - அஹ்மத் நெய்னார் பள்ளிக்கு எதிரில் புதிதாக அமையப்பெற்றுள்ள ‘பிரபு மன்ஸில்’ என்ற வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்றது.
அமைப்பின் 2ஆவது செயற்குழுக் கூட்டம் நடைபெற்று மூன்று மாதம் ஆகியபடியாலும்; தற்போது அதிகளவில் செயற்குழு உறுப்பினர்கள் ஊரிலிருப்பதால் கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதைக் கருத்திற்கொண்டும், நடப்பு கூட்டத்தை 3ஆவது செயற்குழுவாக நடத்திடுவதென - நடப்பு கூட்டத் தலைவர் மற்றும் கூட்டத்தில் பங்கேற்றோரின் ஒப்புதலின் பேரில் தீர்மானிக்கப்பட்டு, கூட்டம் நடைபெற்றது.
ஷிஃபா துணைத்தலைவர் ஜெ.செய்யித் ஹஸன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
விண்ணப்பங்களின் நடப்பு நிலை:
மருத்துவ உதவி கோரி ஷிஃபா விண்ணப்பங்களைப் பெறும் முறை, அவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் முறைகள் குறித்து, கூட்டத் தலைவர் அனைவருக்கும் விளக்கிப் பேசினார். அதன் சுருக்க விபரம் வருமாறு:-
மருத்துவ உதவி கோரி ஷிஃபா மூலம் இதுவரை பெறப்பட்டுள்ள மொத்த மனுக்கள் 111 அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட மனுக்கள் 100 நிறைவு செய்யப்பட்ட மனுக்கள் 81 மற்றும் மருத்துவரின் குறிப்புக்காக காத்திருக்கும் மனுக்கள் 6 விசாரணைக்காக காத்திருக்கும் மனுக்கள் 5 ஆகும்.
மருத்துவ நிதியுதவியாக காயல் நல மன்றங்கள் இதுவரை வழங்கியுள்ள மருத்துவ நிதியுதவித் தொகை (Medical Aid Amount) குறித்தும் அவர் விபரமாக விளக்கிக் கூறினார்.
விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முறை:
விண்ணப்பங்களைத் தர வருவோரை வரவேற்று, துவக்கமாக அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கனிவுடன் பெறப்படுவதாகவும், அம்மனுக்களின் உண்மை நிலை குறித்து முறையான விசாரணை நடத்திய பின்னர், ஷிஃபாவின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜாஃபர் ஸாதிக் அவர்களிடம் அம்மனுக்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறிய அவர், டாக்டர் அவர்கள் நோயாளிகளை நேரடியாகப் பரிசோதனை செய்து, அதனடிப்படையில் அவர்களது விண்ணப்பத்தில் தனது பரிந்துரையைத் தெளிவாகக் குறிப்பிட்டு ஷிஃபாவிடம் அளிப்பார் என்றும், அதன் பிறகு ஷிஃபாவின் மருத்துவக் குழு அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து, உதவித் தொகைக்காக முறைப்படி வெளியிடும் என்றும் அவர் கூறினார்.
நிர்வாகச் செலவினங்களுக்கு கா.ந.மன்றங்களின் பங்களிப்பு:
ஷிஃபா வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக தமது பங்களிப்பைச் செலுத்திய காயல் நல மன்றங்களின் பெயர் மற்றும் தொகை விபரங்களை அவர் வெளியிட்டார். இதுவரை பங்களிப்புத் தொகையை செலுத்தாத 3 காயல் நல மன்றங்கள் விரைவில் தமது பங்களிப்பைத் தந்து, ஷிஃபாவின் பணிகள் தொய்வின்றித் தொடர ஆவன செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
புதிய அலுவலகத்திற்கான தேவைகள்:
ஷிஃபாவிற்கு புதிய அலுவலகம் அமையப்பெற்றுள்ளதையடுத்து, அதற்குத் தேவையான Furniture பொருட்கள் வாங்கப்பட்டு வருவதாகவும், அதற்காக அன்பளிப்புகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஷிஃபா நிர்வாகி கூட்டத்தில் தெரிவித்தார். அதனையடுத்து, ரியாத் காயல் நல மன்றம் சார்பில் மின் விசிறி வாங்க, அதை நிறுவத் தேவையான அனைத்து செலவினங்களுக்கும் என ஆறு ஆயிரம் ரூபாயை செயற்குழு உறுப்பினர் சகோதரர் முஹம்மத் நூஹ் கூட்டத்தின்போதே வழங்கினார். அவருக்கு ஷிஃபா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அரசுப் பதிவு:
ஷிஃபாவிற்கு புதிய அலுவலகம் அமையப்பெற்று, முறையான முகவரி கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து, விரைவில் அமைப்பை அரசுப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூட்டத்தில் பங்கேற்றோர் வலியுறுத்த, அது ஏற்கப்பட்டது.
ஆண்டுச் சந்தா:
ஷிஃபாவால் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுள்ள மருத்துவ உதவி கோரும் விண்ணப்பப் படிவங்களின் மாதிரி கூட்டத்தில் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. அத்துடன், அமைப்பின் உறுப்பினர் ஆண்டுச் சந்தாவாக ரூபாய் 300 தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ள விபரமும் தெரிவிக்கப்பட்டது.
ஷிஃபாவின் செயல்பாடுகள் - இதில் இணைந்துள்ள அனைத்து காயல் நல மன்றங்களின் நிறைவான ஒத்துழைப்புகளோடு நிறைவாக செய்யப்பட்டு வருவதாகவும், மன்றங்கள் இன்னும் ஊக்கத்துடன் தமது ஒத்துழைப்புகளை உடனுக்குடன் வழங்கியுதவ வேண்டும் என்றும் நிர்வாகி கேட்டுக்கொண்டார்.
அவசர கால மருத்துவ உதவி நிதி (EMERGENCY FUND):
அவசர கால மருத்துவ உதவித் தொகையிலிருந்து (EMERGENCY FUND) பயனாளிகளுக்குக் கொடுக்கப்படுகையில், அத்தொகைக்குண்டான விண்ணப்பத்தை வழமை போல வெளியிட்டு, அதனடிப்படையில் பெறப்படும் நிதித்தொகையை மீண்டும் Emergency Fundல் சேர்ப்பதென, விவாதங்களுக்குப் பின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், அனைத்து காயல் நல மன்றங்களும் தமது Emergency Fund தொகையை ஸதக்கா நிதியிலிருந்தே தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மருத்துவ பரிசீலனைக் குழுவில் கூடுதலாக மூவர்:
மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்கள் மீதான விசாரணை உடனுக்குடன் செய்யப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டால்தான் உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு உதவிகள் சென்று சேரும் என்ற அடிப்படையில், விசாரணையை இன்னும் துரிதப்படுத்தும் நோக்குடன், மருத்துவ பரிசீலனைக் குழுவில்
(1) சகோதரர் எஸ்.அப்துல் வாஹித் (ஹாங்காங் பேரவை உள்ளூர் பிரதிநிதி)
(2) சகோதரர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் (குவைத் கா.ந.மன்ற உள்ளூர் பிரதிநிதி)
(3) சகோதரர் பி.எஸ்.ஜெ.செய்யித் முஹ்யித்தீன் (ஜெய்ப்பூர் கா.ந.மன்ற உள்ளூர் பிரதிநிதி)
ஆகிய மூவர் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில், அவ்விண்ணப்பங்களின் முக்கியத்துவம் அறிந்து - அவற்றை முறைப்படுத்தி, Priority Code ஐ பரிசீலனைக்குழு வெளியிட தீர்மானிக்கப்பட்டது.
மன்றங்களுக்கு வேண்டுகோள்:
காயல் நல மன்றங்கள் காயல்பட்டினத்தில் நடத்த திட்டமிடும் மருத்துவ முகாம்கள் குறித்து, ஷிஃபாவிடம் முற்கூட்டியே கலந்தாலோசித்த பின்னர் தேதியை முறைப்படி அறிவிக்குமாறு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஓமன் கா.ந.மன்றமும் ஷிஃபாவில் இணைவு:
இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட ஓமன் காயல் நல மன்றத் தலைவர் சகோதரர் எஸ்.எச்.பாதுல் அஸ்ஹப், கூட்ட நடவடிக்கைகளையும், ஷிஃபாவின் செயல்பாடுகளையும் தான் நன்கு அவதானித்து அறிந்து கொண்டதாகவும், தமது மன்றமும் ஷிஃபாவில் இணைவதாகவும் அறிவித்ததோடு, வருடாந்திர பங்களிப்புத் தொகையாக ரூபாய் பத்தாயிரம் வழங்குவதாகவும் அறிவித்தார்.
துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சகோதரர் சாளை S.ஸலீம் நன்றி கூற, அபூதாபீ காயல் நல மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் நிர்வாகி கண்டி ஸிராஜ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |