இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் இன்று காலை 08.30 மணியளவில் விடுதலை நாள் விழா நடைபெற்றது.
பள்ளி தாளாளர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் விழாவிற்குத் தலைமை தாங்கி தேசிய கொடியேற்ற, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பள்ளி தலைமையாசிரியை மு.ஜெஸீமா வரவேற்புரையாற்றினார். முன்னதாக, இவ்விழாவை முன்னிட்டு மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப்போட்டி என பல போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவியருக்கு விழா தலைவர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
பின்னர், அவர் விடுதலை நாள் விழா உரையாற்றினார். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனுப்பித் தரப்பட்டுள்ள அவரது உரை வாசகம் வருமாறு:-
எல்லாம் வல்ல இறைவனின் அருள்நாடி புகழ்பாடி!
பட்டறிவும், பண்பும் மிக்க தலைமையாசிரியை அவர்களே! ஆற்றலும், அறிவும் மிக்க ஆசிரியைகளே ! முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு அப்துல் கலாமைப் போல் கனவு கண்டு அளப்பரிய சாதனை புரியத் துடிக்கும் மாணவக் கண்மணிகளே! அன்பிற்குரிய பெற்றோர்களே! உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், நற்ஸலாத்தையும் கூறிக் கொள்கிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
வரலாற்றுப் புகழ்மிகு காயல்பதியில் சீரோடும், சிறப்போடும் செயல்பட்டு வரும் நமது சாதனை பள்ளியான சுபைதா மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு சுதந்திர தின கொடியேற்று விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நம் நாடு விடுதலை பெற்று இன்று ஏறத்தாழ 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதே வெள்ளிக்கிழமையன்றுதான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. 68ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட நாமெல்லாம் கூடியுள்ளோம்.
சும்மா கிடைக்கவில்லை இந்த சுதந்திரம்! சுதந்திர பேராட்ட வீரர்கள் பலரின் உயிர் தியாகத்தால் கிடைத்ததாகும். சுதந்திர இந்தியாவில் கல்வி தொழில், வர்த்தகம், தொழில் நுட்பம், அறிவியல், அணு ஆராய்ச்சி போன்ற பலதுறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இருந்தாலும் வளர்ச்சி அடைந்த நாடு என்னும் பிரிவில் நம் நாடு இன்னும் இடம் பெறவில்லை. காரணம் எல்லா துறைகளிலும் இன்னும் தன்னிறைவு பெறவில்லை. அதற்குக் காரணம் இந்தியாவில் 26 விழுக்காடு பேர் பாமர மக்கள் அதாவது எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கிறார்கள். கல்வியின் நிலையும் தரமும் உயர வேண்டும்.
அடிப்படைக் கல்வி, உயர்கல்வி, மேல்நிலைக் கல்வி என்று ஒவ்வொருவரும் குறைந்தது பட்டப்படிப்பாவது கற்க வேண்டும் . மாணவிகளாகிய நீங்கள் உங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்டு ஆசிரியைகள் சொல்வதைக் கவனித்துப் புரிந்து படிக்க வேண்டும்.
கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக திகழ்ந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நற்பெயர் வாங்கித் தர வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக நமது பள்ளிக்கூடம்தான் காயல்பட்டினத்திலேயே சிறந்த பள்ளியாகத் தேர்வு பெற்றுள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. ஆகவே 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் நான் உறுதிமொழியை எதிர்பார்க்கிறேன். இவ்வருட கல்வியாண்டிலும் நம் பள்ளிதான் முதன்மையான பள்ளியாக வர வைப்போம் என்பதை மனதில் பதிய வைத்து, அதற்கான முயற்சிகளை இப்பொழுதே ஆரம்பிக்கும் படி உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். செய்வீர்களா?
(இவ்வாறு அவர் கேட்டதும், மாணவியர் அனைவரும் அவ்வாறு செய்வதாக உறுதியளித்தனர்.)
இறுதியாக ஒன்றைக் கூறி எனது உரையை முடிக்கிறேன்.
“AIM HIGH;
But Sky is not your limit”
நன்றி! அஸ்ஸலாமு அலைக்கும்.
இவ்வாறு சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி சார்பில் பெறப்பட்டுள்ள - அப்பள்ளி தாளாளரின் சுதந்திர தின உரை அமைந்திருந்தது.
நடப்பாண்டு சுதந்திர விழா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |