“காயல்பட்டினத்தின் வரலாற்றைப் பாதுகாக்க ஓர் அருங்காட்சியகத்தை அமைக்கலாமே?” என இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராக சில நிமிடங்கள் கலந்துகொண்ட - ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தலையங்கப் பக்க ஆசிரியர் சமஸ் கேள்வியெழுப்பினார். விரிவான விபரம் வருமாறு:
-
இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் சார்பில் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 13ஆம் நாள் புதன்கிழமையன்று 11.00 மணியளவில், காயல்பட்டினம் துளிர் பள்ளியின் குளிரூட்டப்பட்ட சிற்றரங்கில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஷாதுலீ இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் உமர் ஃபாரூக் அஃழம் மஹ்ழரீ மார்க்க அறிவுரைகள் வழங்கினார்.
இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவின் இதுநாள் வரையிலான நகர்நலப் பணிகள் குறித்த செயல் அறிக்கையை மன்றச் செயலாளர் பி.எம்.ரஃபீக் கூட்டத்தில் வாசித்தார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காவாலங்காவின் மூத்த உறுப்பினர் மக்கீ நூஹுத்தம்பி, அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், வாழ்த்துரையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ், அதன் நடப்பு செயலாளர் செய்யித் அஹ்மத், உறுப்பினர் டி.செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களுள், ஹாங்காங் அப்துல் அஜீஸ் துவக்கமாக வாழ்த்துரை வழங்கினார்.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின்போது காவாலங்காவுடன் இணைந்து நிவாரண நிதி வழங்கியதை செயலர் அறிக்கையில் சுட்டிக்காட்டியமைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
அடுத்து பேசிய வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், தக்வாவின் முன்னெடுப்பில் வழமை போல நடப்பாண்டும் நகர பள்ளிவாசல்களின் இமாம் - பிலால்களுக்கு வழங்கப்பட்ட நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகையில் தமது பங்களிப்பையும் நிறைவாகச் செய்தமைக்காக காவாலங்காவுக்கும், பங்கேற்ற அனைத்து காயல் நல மன்றங்கள் மற்றும் தனி ஆர்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெற்ற துளிர் பள்ளியின் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை பேசினார்.
துளிர் பள்ளியின் நடப்புத் தேவைகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், நிறைய கட்டிட வசதிகள் உள்ளமையால் இது ஒரு தன்னிறைவு பெற்ற நிறுவனம் என தவறான கண்ணோட்டம் மக்களிடையே உள்ளதாகவும், அக்கட்டிடங்கள் அனைத்துமே உலக காயல் நல மன்றங்களும், தனி ஆர்வலர்களும் அன்பளிப்பாகக் கட்டிக் கொடுத்தவைதான் என்றும், தேவையான அளவுக்கு கட்டிடங்களும், வாகனங்களும் கிடைக்கப்பெற்ற பிறகுதான் நிர்வாகச் செலவினங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
துளிருக்கு என்ன தேவை என இலங்கைக்கு தான் சென்றிருந்த இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது காவாலங்கா சார்பில் கேட்கப்பட்டதை நினைவுகூர்ந்துப் பேசிய அவர், தேவைகள் பல இருக்கின்றபோதிலும், பள்ளியின் சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதற்காக வெளியூர்களிலிருந்து வரும் ஆசிரியையர் தங்குவதற்காக இடம் ஒன்று அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறியதாகவும், உடனடியாக அதனை ஏற்று - தங்கள் மன்றத்தின் முதல் செயல்திட்டமாகவே அதை எடுத்துக்கொண்டு கட்டித் தந்தமைக்காக துளிர் அறக்கட்டளை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியின் துவக்கம் முதல் நிறைவு வரை - காவாலங்கா செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ.புகாரீ நெறிப்படுத்தியதோடு உறுப்பினர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்தார். காவாலங்கா உறுப்பினர்களான எம்.ஐ.மஹ்மூத் சுலைமான், ஏ.டி.ரியாஸுத்தீன், எம்.எம்.அப்துல்லாஹ் ஆகியோர் இக்கருத்துப் பரிமாற்றத்தில் தம் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற கலவரங்களின்போது தாம் பட்ட அவதிகளையும், அந்நேரத்தில் பிற பகுதிகளிலிருந்த காவாலங்கா அங்கத்தினர் தமக்கு அளித்த ஆறுதல்களையும் நினைவுகூர்ந்துப் பேசிய அவர்கள், எக்காலமும் அந்நாட்டிலிருந்தவாறு பொருளீட்டும் நாம், இத்தருணத்தில் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்காக தாராளமாக உதவிட வேண்டியது கட்டாயக் கடமை என்றும், அதற்காக காவாலங்கா முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தலையங்கப் பக்க ஆசிரியர் சமஸ், தனது செய்திப் பணி சார்ந்த விபரங்கள் சேகரிப்பிற்காக காயல்பட்டினம் வந்துள்ளதையடுத்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராக சில நிமிடங்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
காயல்பட்டினத்தின் சரித்திரங்கள், கலாச்சார பண்பாடுகள், மதம் கடந்த மனிதநேயம் உள்ளிட்டவை குறித்து கடந்த இரண்டு நாட்களில் தான் நிறைய அறிந்து வைத்துள்ளதாகவும், சொந்த ஊரின் நலனுக்காக பல்வேறு சேவைகளை மனமுவந்து செய்யும் அரிய பணியை இங்கு தான் கண்டுகொண்டதாகவும், அவர்களின் விடுபட்ட சேவையாகக் கருதி - இந்த ஊரின் சரித்திரத்தைப் பாதுகாக்க அருங்காட்சியகத்தை விரைவாக அமைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவருக்கு காவாலங்கா சார்பில் அதன் செயலாளர் நினைவுப் பரிசை வழங்கி கண்ணியப்படுத்தினார்.
அடுத்து, கூட்ட நிகழ்விடமான துளிர் பள்ளியின் சேவைகள் குறித்த புகைப்படங்கள் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அசைபட விரிதிரை துணையுடன் அனைவருக்கும் படங்கள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் காவாலங்கா உறுப்பினர்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி இடைவேளையின்போது அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
நிறைவாக, காவாலங்கா சார்பில் துளிர் பள்ளிக்காக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் தங்கும் விடுதியை சுற்றிப்பார்த்த அவர்கள், அக்கட்டிட முகப்பில் நின்றவாறு குழுப்படம் எடுத்துக்கொண்டவர்களாகக் கலைந்து சென்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காவாலங்கா செயற்குழு உறுப்பினர் ஓ.எல்.எம்.ஆரிஃப் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
படங்களுள் உதவி:
HYLEE
காவாலங்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது. ஒரு படம் அகற்றப்பட்டது @ 23:53 / 15.08.2014] |