இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ள பலர் - காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தேர்வானோர் தங்கள் பயணத்தை ரத்து செய்வது காரணத்தினாலும், அரசிடம் இதர ஒதுக்கீடு மூலமாக நிரப்பவேண்டிய இடங்கள் காலியாக உள்ளது மூலமும் - காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் இடங்கள் குறித்து இது வரை - இந்திய ஹஜ் குழு மூலம், 4 முறை - அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. பயண காலம் நெருங்குவதால் - ஆகஸ்ட் 14 அன்று இந்திய ஹஜ் குழு புது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதில் - ஒவ்வொரு மாநிலத்திலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணியரிடம் இருந்து, முற்கூட்டியே அவர்களின் பாஸ்போர்ட்டினை பெற்றுக்கொள்ள, மாநில ஹஜ் குழுக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு - தமிழக ஹஜ் குழுவின் காத்திருப்போர் பட்டியலில் 228ம் இடம் முதல் 307ம் இடம் வரை உள்ள 76 விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தும்.
அவர்களின் தேர்வு உறுதி இல்லை என்றும், இறுதி நேரத்தில் ரத்தாகும் இடங்களை உடனடியாக வழங்க செய்யப்படும் ஏற்பாடு இது என்றும், அந்த பயணியர் தற்போது மீதி தொகையை செலுத்த தேவை இல்லை என்றும், இடம் உறுதியான பிறகே மீதி தொகையை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பயணியர் - மாநில ஹஜ் குழுக்களிடம் தங்கள் பாஸ்போர்ட்டினை சமர்ப்பிக்கும் போது - தான் காத்திருப்போர் பட்டியலில் தான் உள்ளேன், இடம் கிடைக்காவிட்டால் - நீதிமன்றம் செல்லமாட்டேன் என உறுதி மொழியும் வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|