பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர் பேராசிரியர் ஜி.முஹம்மத் ஃபாஸீ (83). தற்போது அமெரிக்காவில் நியூஜெர்ஸி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவர் தன்னிடம் பயின்ற முன்னாள் மாணவர்களை சந்திக்க விரும்பினார். தனது ஆர்வத்தை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பயின்றோர் பேரவை நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரியில் பயின்றோர் பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கல்லூரியின் ஆட்சிக்குழு பொருளாளர் எச்.எம்.செய்கு அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.
தமிழ்த்துறை தலைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மவ்லவீ ஷேக் அப்துல் காதர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பயின்றோர் பேரவை பொதுச் செயலாளர் எம்.கே.எம்.முஹம்மத் வரவேற்றுப் பேசினார். முன்னாள் முதல்வர் ஜி.முஹம்மத் ஃபாஸீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய கல்லூரியின் ஆட்சிக்குழு தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமையுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களான சாயர்புரம் போப்ஸ் கல்லூரி முதல்வர் செல்வகுமார், பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முதல்வர் மு.முஹம்மத் ஸாதிக், முன்னாள் முதல்வர் பீர் முஹம்மத், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பேராசிரியர் ஆசைத்தம்பி, பேராசிரியர்கள் ராமையா, டேனியல், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் - புகழ்பெற்ற கராத்தே சாகச வீரருமான காயல்பட்டினம் ஜாஹிர் ஹுஸைன், காயல்பட்டினம் பிரமுகர்கள் அப்துல் ஹக், ஷேக் சுலைமான், இம்ரான் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முன்னாள் முதல்வர் முஹம்மத் ஃபாஸீயுடனான தமது பழைய நினைவுகளைப் பகிர்ந்து பேசினர். மேலப்பாளையம் அன்னை ஹாஜரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் செய்யித் அப்பாஸ் வாழ்த்திப் பேசினார்.
நிறைவாக முன்னாள் முதல்வர் ஜி.முஹம்மத் ஃபாஸீ சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நான் நமது சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 1971ஆம் ஆண்டு பேராசிரியராகப் பணியை துவக்கி, பின்னர் வணிகவியல் துறையின் தலைவராகவும், 1984 முதல் 1993 வரை முதல்வராகவும் இருந்து பணி நிறைவு பெற்றுள்ளேன்.
எனது மன நிறைவான பணிக்கு உத்வேகமாகவும், முழு காரணமாகவும் இருந்தது காயல்பட்டினம் பிரமுகர்களின் தேர்ந்த கல்லூரி நிர்வாகம்தான். நமது கல்லூரியின் வளர்ச்சி விஷயத்தில் அன்றும், இன்றும் காயல்பட்டினத்து மக்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.
அன்றைய சூழ்நிலையில் நிராதரவாக இருந்த ஏழை மாணவ, மாணவியருக்கு இக்கல்லூரிதான் கை கொடுத்து உதவியது. அவர்களுள் பலர் இன்று பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
இன்றைக்கு நமது கல்லூரி நன்கு வளர்ச்சி பெற்றுத் திகழ்வது எனக்குப் பெருமையாக உள்ளது. ஆனாலும் இன்னும் வளர்ச்சி காண வேண்டியுள்ளது. இதற்காக ஏராளமானோர் தாராளமாக உதவி செய்யவேண்டும். நமது குழந்தைகளை இக்கல்லூரியிலேயே பயிற்றுவிக்க வேண்டும்.
எனது வேண்டுகோளை ஏற்று இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் இருந்து முன்னாள் மாணவர்கள் சுமார் 250 பேர் கலந்துகொண்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்ததால், அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
பயின்றோர் பேரவையின் செயலாளர் முனைவர் மு.கமாலுத்தீன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி அலுவலர் முஸ்தஃபா செய்திருந்தார்.
தகவல் & படங்கள்:
ச.பார்த்திபன்
படங்களுள் உதவி:
A.K.இம்ரான்
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 14:29 / 18.08.2014] |