திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஆக. 23) நடைபெறும் கல்விக்கடன் முகாமில் மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பயனடையலாம் என ஆட்சியர் ம. ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வட்டங்கள் அளவில் கல்விக்கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு ரூ. 15 கோடி அளவில் கல்விக்கடன் வழங்கப்பட்டது. இதேபோல நிகழாண்டில் கல்விக் கடன் முகாம் திருச்செந்தூரில் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் காலை 9.30 மணி முதல் நடைபெறும் இம்முகாமில், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பயனடையலாம்.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், கல்விக்கடன் பெற விரும்புவோர் முகாமில், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, மாணவ, மாணவியரின் 2 புகைப்படம் மற்றும் பெற்றோரின் 2 புகைப்படம், மதிப்பெண் சான்றிதழ் (10 மற்றும் பிளஸ் 2) கல்லூரி முதல்வரின் சேர்க்கைக்கான சான்றிதழ், குடும்ப அட்டை நகல், கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிக்கான சேர்க்கை ஆணை நகல், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
கல்விக்கடன் பெற பான் கார்டு அவசியம் என்பதால், விண்ணப்பதாரர் மற்றும் அவரின் தகப்பனார் கண்டிப்பாக பான் கார்டு கொண்டுவர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் சான்றுகளை (வருமானம், இருப்பிடம், ஜாதி) உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
கல்விக்கடன் விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட இணையதள முகவரியில் (www.thoothukudi.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், கடன் தொடர்பான விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
தகவல்:
தினமணி |