காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளது.
9ஆம் ஆண்டு நிகழ்ச்சி, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” எனும் தலைப்பில், 21.06.2014 சனிக்கிழமையன்று காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குறித்த சுருக்கச் செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
கலந்துரையாடல் நிகழ்ச்சி:
அன்று 17.00 மணிக்கு, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருடன் மாநில சாதனை மாணவர்கள் சந்திக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பரிசளிப்பு விழா:
அன்று 19.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா ஷேக் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி...
நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.சுஷாந்தி இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ, தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பா.ரெத்னம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலக உதவி ஆய்வாளர் சங்கரய்யா, இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான வாவு எஸ்.அப்துல் கஃப்பார், எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, எம்.ஏ.எஸ்.ஜரூக், வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஜெஸீமா, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மீனா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் எஸ்.எம்.எச்.முஹம்மத் ஃபரீதுத்தீன் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரை:
தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரையைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றினார்.
அவருக்கு இக்ராஃ - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில், வாவு எஸ்.அப்துல் கஃப்பார் நினைவுப் பரிசு வழங்கினார்.
அமைப்புகள் குறித்து அறிமுகவுரை:
இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தும் இக்ராஃ கல்விச் சங்கம் - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் குறித்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் பி.ஏ.புகாரீ ஆகியோர் முறையே அறிமுகவுரையாற்றினர்.
மாலையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்திய ஏ.எம்.தஃபீக்குக்கு, தி காயல் ஃபர்ஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நினைவுப் பரிசு வழங்கினார்.
மாநிலத்தின் முதன்மாணவிக்கு பரிசு:
இவ்விழாவின் சிறப்பழைப்பாளரான - மாநிலத்தின் முதன்மாணவி குறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் அறிமுகவுரையாற்ற, சாதனை மாணவி எஸ்.சுஷாந்திக்கு நினைவுப் பரிசும், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் ரூபாய் 10 ஆயிரம் பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் ஜி.எம்.அக்பர் அலீ அவற்றை சாதனை மாணவியிடம் வழங்கினார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சாதனை மாணவிக்கு, “சாதிக்க ஆசைப்படு” எனும் தலைப்பிலான நூலை பரிசாக வழங்கினார்.
சாதனை மாணவி ஏற்புரை:
தொடர்ந்து, மாணவி எஸ்.சுஷாந்தி ஏற்புரையாற்றினார்.
மாலையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியும், தன் தந்தைக்கு அறிமுகமான உயர் நீதிமன்ற நீதிபதி அவர்களது கைகளால் பரிசுகளைப் பெற்றதும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளதாகவும் கூறிய அவர், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் சுமார் 9 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இவ்விழாவின் பலனாக, காயல்பட்டினத்திலிருந்து மாநில அளவில் சாதனை புரியும் மாணவர்கள் விரைவிலேயே உருவாக வேண்டும் என்று தான் ஆவலுறுவதாகவும் அவர் தனதுரையில் கூறினார்.
சிறப்பு விருந்தினர்கள் உரை:
சிறப்பு விருந்தினரான - தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பா.ரெத்னம் வாழ்த்துரை வழங்கினார். நிறைவில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ குறித்து, இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அறிமுகவுரையாற்ற, அவருக்கு இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் நினைவுப் பரிசை வழங்கினார்.
பின்னர், சிறப்பு விருந்தினர் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ சிறப்புரையாற்றினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளபோதிலும், மாணவர்களது கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்குடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.
பரிசளிப்பு:
பின்னர், நகரின் சிறந்த பள்ளிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 10ஆம், 12ஆம் வகுப்புகளில் நகரளவில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. (பரிசு பெற்றோர் விபரங்கள் தனிச்செய்தியாக வெளியிடப்படும்.)
சிறந்த பள்ளிகளுக்கான பரிசுகளைப் பெற்ற சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா, எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் ஆகியோர் ஏற்புரையாற்றினர்.
நன்றியுரைக்குப் பின், துஆ - ஸலவாத் - கஃப்பாரா - நாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது.
கலந்துகொண்டோர்:
இவ்விழாவில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கல்வி ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், மாணவ-மாணவியரின் பெற்றோர், பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடு:
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், அதன் மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ உட்பட - அவ்வமைப்புகளின் அங்கத்தினர் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
நடப்பாண்டு நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ - கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ - பரிசளிப்பு விழா நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |