நீர், நிலம், வனம் என்ற தலைப்பில் - தமிழக கடலோரத்து
பிரச்சனைகள் குறித்து தி இந்து தமிழ் நாளிதழில், அப்பத்திரிக்கையின் மூத்த
எழுத்தாளரான சமஸ் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
அவ்வரிசையில் - 26வது பாகமாக - காயல்பட்டினத்தில் பெரிய அளவில் புற்று நோய்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து, அரசே...
அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா? என்ற தலைப்பில் சமஸ் எழுதிய கட்டுரை ஆகஸ்ட் 14
அன்று வெளிவந்தது.
27வது பாகமாக - இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா? என்ற தலைப்பில், DCW தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள்
குறித்து சமஸ் எழுதிய கட்டுரை - ஆகஸ்ட் 18 அன்று வெளிவந்தது.
ஆகஸ்ட் 18 கட்டுரை தொடர்பாக DCW தொழிற்சாலையின் நிர்வாக உதவித் தலைவர் (பணியகம்) ஆர்.ஜெயக்குமார் வழங்கிய விளக்க கடிதம் - தி இந்து நாளிதளின் இப்படிக்கு இவர்கள் என்ற வாசகர் கடிதம் பகுதியில் இன்று வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆலை விளக்கம்
இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா? கட்டுரையில் வெளியான தகவல்கள் குறித்து எங்கள் விளக்கம்:
டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை.
மேலும், உலகத் தரக் கொள்கையான மறு சுழற்சி மற்றும் மறுபயன்பாடு என்ற கொள்கையைக் கடைபிடிப்பதுடன், அதிநவீனத் தொழில்நுட்பம் வாய்ந்த நேனோ மற்றும் மாறுநிலை சவ்வூடு பரவுதல் மற்றும் பூஜ்ய நிலைக் கழிவு நீர் வெளியேறும் ஆலையாக எங்கள் ஆலை திகழ்கிறது. மேலும், இவ்வாறு சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி மூலம் மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்துகிறது.
கட்டுரையோடு வெளியான சில படங்கள் எங்கள் நிறுவனத்தை எதிர்ப்பவர்களால் எடுக்கப்பட்டவை.
அதே போல், சுற்றியுள்ள பகுதியில் உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளன என்று குறை கூறுபவர்களுக்கு, டி.சி.டபிள்யூ நிறுவனம் எந்த வழியிலும் பொறுப்பல்ல என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
- இரா.ஜெயக்குமார், நிர்வாக உதவித் தலைவர் (பணியகம்), டி.சி.டபிள்யூ ஆலை, சாஹூபுரம், தூத்துக்குடி மாவட்டம்
தி இந்து (ஆகஸ்ட் 21, 2014 பதிப்பு)
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 12:50 pm / 21.08.2014] |