“மாநில - மாவட்ட அளவில் சாதனை மாணவராக வேண்டும் என்பதை நோக்கமாகக் கொள்ளாமல், கேள்வித்தாளில் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் முழுமையான - சரியான விடையளிப்பதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு படித்தால், சாதனைகள் தானாக நம்மை வந்து சேரும்” என, காயல்பட்டினத்தில் நடைபெற்ற - நகர பள்ளி மாணவ-மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, 2013-2014 கல்வியாண்டில் ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.சுஷாந்தி பேசினார். இந்நிகழ்ச்சி குறித்த சுருக்கச் செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளன.
அந்த வரிசையில், நடப்பு 9ஆம் ஆண்டின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” நிகழ்ச்சி, 21.06.2014 சனிக்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் மைதானத்தில் நடைபெற்றது.
நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.சுஷாந்தி இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டார்.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்க, எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் எம்.இ.எல்.நுஸ்கீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மாணவர் ஹாஃபிழ் எஸ்.எம்.எச்.முஹம்மத் ஃபரீதுத்தீன் இறைமறை குர்ஆனிலிருந்து சில வசனங்களை கிராஅத்தாக ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, நிகழ்ச்சி தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
சாதனை மாணவி குறித்து - இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துநர் குறித்து இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் ஆகியோர் அறிமுகவுரையாற்றினர்.
பின்னர் துவங்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஏ.எம்.தவ்ஃபீக் நேர்காணல் செய்தார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகரைச் சேர்ந்த சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்றனர். மாணவ-மாணவியருள் பலரும், பெற்றோர் மற்றும் பார்வையாளர் சிலரும் மாநில சாதனை மாணவியிடம் படிப்பு குறித்த பல்வேறு கேள்விகளைக் கேட்க, அவற்றுக்கு போதிய தகவல்களுடன் அவர் விளக்கமளித்தார்.
சாதனைகள் புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் படிக்காமல், தேர்வில் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான – முழுமையான விடையளிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு பயிலுமாறும், தான் அவ்வாறே பயின்றதாகவும், மாநிலத்தின் முதன்மாணவி ஆவதற்காக எந்த நோக்கமும் வைத்திருக்கவில்லை என்றும், மாநிலத்தின் முதன்மாணவி எஸ்.சுஷாந்தி கூறினார்.
இந்தப் பாடம் முக்கியம், அந்தப் பாடம் அவசியமில்லை என்றெல்லாம் பிரிக்காமல், அனைத்துப் பாடங்களுமே ஒருவருக்கு முக்கியம் என்ற அடிப்படையில்தான் அரசு எல்லாப் பாடத்திட்டங்களையும் அமைத்துள்ளது என்பதைப் புரிந்துகொண்டு, அனைத்திற்குமே சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் அவர். பின்னர், மாநில சாதனை மாணவர்களின் பெற்றோரும் சில கருத்துக்களைக் கூறினர்.
குழந்தைகளுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஊட்டி, அதற்கேற்றவாறு வீட்டுச் சூழலை அமைத்துக்கொள்ளவும், தேவை ஏற்பட்டால், தமது விருப்பங்களை தியாகம் செய்யவும் பெற்றோர் முன்வந்தால்தான் மாணவர்கள் தமது முழுத்திறனைக் காண்பிக்க முடியும் என்றும், அந்த வகையில் தம் மகளுக்கு தாங்கள் நல்ல வீட்டுச் சூழலையும், நிறைவான ஒத்துழைப்புகளையும் வழங்கியதாகவும் அவர்கள் கூறினர்.
இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ.புகாரீ நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சி இடைவேளையின்போது மாணவ-மாணவியருக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
கடந்தாண்டு (2013) நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ - கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |