ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற அரசு சான்றிதழ்களைப் பெற, பொதுமக்கள் பொதுவாக திருசெந்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை நாட வேண்டிய நிலையுள்ளது. காயல்பட்டினத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திலும் சில சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என்ற வசதியும் உள்ளது. இருப்பினும் - இவ்வழிகள் மூலம் சான்றிதழ்களைப் பெறுவதில் காலதாமதம் ஆவது உண்டு.
இச்சான்றிதழ்களை - அரசு அலுவலகங்களைத் தவிர, அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்களின் மூலமும் பெறலாம் என்ற வசதியை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அண்மையில் அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக ஆறுமுகநேரி போன்ற ஊர்களில் வங்கிகள் இச்சேவையை வழங்க முன்வந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகளில் ஒரு நகராட்சியான காயல்பட்டினத்திலும் இச்சேவை அறிமுகம் செய்யப்படவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமாரை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சந்தித்த நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா ஷேக் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றித் தரும்படி மாவட்ட ஆட்சியர் அவ்வேளையில் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்தாண்டு செப்டம்பர் மாத நகர்மன்ற கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் (தீர்மானம் எண் 598) நிறைவேற்றப்பட்டது
தீர்மான நகல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டதையடுத்து - நவம்பர் 28 அன்று - தூத்துக்குடி மாவட்ட கேபிள் தொலைகாட்சி சம்பந்தமான சிறப்பு தாசில்தார் ராமசாமி, இச்சேவையை காயல்பட்டினத்தில் துவங்க தேர்வு செய்யப்பட்டுள்ள - காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலுள்ள இடத்தைப் பார்வையிட்டார்.
இதற்கு முன் குடிநீர் கட்டணம் வசூலிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த அறையில் சில பராமரிப்புப் பணிகளை உடனடியாகச் செய்து முடித்தால், இச்சேவையை காயல்பட்டினத்தில் விரைவில் துவக்கலாம் என அவர் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, மேற்படி பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளி கோரி, 13.12.2013 அன்று வெளியான தினத்தந்தி நாளிதழில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட அவ்விடத்தில் இன்று பொதுச்சேவை மையம் இயங்கத் துவங்கியுள்ளது.
இப்பொதுச் சேவை மையம் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்த விபரம் வருமாறு:-
|