காயல்பட்டினம் நகராட்சியால், நகரிலுள்ள கடைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 24 கிலோ தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் தலைமையிலான குழுவினர், நகரிலுள்ள கடைகளில் இம்மாதம் 14ஆம் நாளன்று காலையில் திடீர் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில், 40 மைக்ரானுக்கும் குறைவான அளவில் தயாரிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் வணிகர்களால் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்து, அவற்றைக் கைப்பற்றினர். மொத்தம் 24 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
40 மைக்ரானுக்கும் குறைந்த அளவில் பைகளைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளதாகவும், ப்ளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் எளிதில் தாக்கும் நிலையுள்ளது என்றும், பொதுமக்கள் இதனை உணர்ந்து, பொருட்களை வாங்கச் செல்லும்போது கையில் துணிப்பை அல்லது பாத்திரத்தை எடுத்துச் செல்லுமாறும் சுகாதார ஆய்வாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ப்ளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பது குறித்து, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் நகர வணிகர்களுக்கு ஏற்கனவே விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படம்:
M.ஜஹாங்கீர்
நகராட்சியின் திடீர் சோதனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |