காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் கே.எம்.டி. மருத்துவமனைக்கு அருகிலுள்ள சாலையோரத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென கோவில் ஒன்று அமைக்கப்பட்டது. இது குறித்த சர்ச்சை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு அதன் ஓலைக் கூரை கட்டுமானம் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் ஹாலோ ப்ளாக் கற்கள் கொண்டு ஒரு சிலர் உடனடியாக கோயிலைக் கட்டியுள்ளனர். தகவலறிந்து காவல்துறையினரும் நிகழ்விடம் வந்து குவிந்தனர். எனினும் கட்டிடப் பணிகள் உ.டனடியாக நிறுத்தப்படவில்லை.
இதனைக் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட பொருளாளர் வாவு ஷம்சுத்தீன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர தலைவர் வாவு நாஸர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் ஆஸாத், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகி ஜப்பான் சுலைமான் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தார்.
இரு தரப்பிலும் ஆறு பேர் அழைக்கப்பட்டு, திருச்செந்தூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் 11.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் மு.தமிழ்ராஜன், வட்டாட்சியர் நல்லசிவன், நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியாளர் திருவேங்கட ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒரு தரப்பில், வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பிரபு சுல்தான், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர தலைவர் ஷம்சுத்தீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர நிர்வாகி ஷம்சுத்தீன் ஆகியோரும்,
மறு தரப்பில், காயல்பட்டினம் நகர்மன்ற 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், அதன் நிர்வாகி பி.பி.சக்திவேல், ஜெயசிங், மனோகரன், மகேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இச்சமாதானக் கூட்டத்தின் நிறைவில்,
“காயல்பட்டினம் தென்பாகம் கிராமம், புல எண் 494 நெடுஞ்சாலைத் துறை புறம்போக்கில் அமைந்துள்ள மாவு இசக்கியம்மன் கோவில் மற்றும் திரு. வாவு செய்யது அப்துல் ரஹ்மான் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள மதில் சுவரையும், நெடுஞ்சாலைத் துறை மூலம் இன்றே அகற்றிட கீழே கையொப்பமிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.”
என ஒப்பந்த வாசகம் வடிவமைக்கப்பட்டு, இரு தரப்பினரும் அதன் கீழ் கைச்சான்றிட்டனர்.
ஒப்பந்த நகல்
நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நிகழ்விடத்தில் இருந்தனர்.
பதட்டம் துவங்கியதிலிருந்து, பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை, திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் வழியாக வர வேண்டிய பேருந்துகள் அனைத்தும் அடைக்கலபுரம் வழியாக திருப்பி விடப்பட்டதும், பதட்டத்திற்குட்பட்ட பகுதியைச் சுற்றி காவல்துறையினரால் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
படங்களுள் உதவி:
A.K.இம்ரான்
மற்றும்
ஹாஃபிழ் S.A.ஃபைஸல்
[கூடுதல் தகவல்களும், படங்களும் இணைக்கப்பட்டன @ 19:48 / 23.08.2014]
கடைசிச் செய்தி: ஒப்பந்தப் படி, இன்று 16.00 மணிக்குத் துவங்கி, 17.15 மணி வரை, ஆக்கிரமிப்பிலுள்ள கோட்டைச் சுவர் மற்றும் கோயில் ஆகியன முற்றிலும் இடித்து அகற்றப்பட்டன. (படங்களுடன் கூடிய விபரம் தனிச்செய்தியாக வெளியிடப்படும்.) |