காயல்பட்டினம் நகராட்சியால், நகரிலுள்ள கடைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 4.5 கிலோ தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தம் ஆயிரத்து 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைப் பொறியாளர் குணசேகரன் தலைமையில், காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் தலைமையிலான குழுவினர், நகரிலுள்ள கடைகளில் இம்மாதம் 25ஆம் நாள் திங்கட்கிழமையன்று (நேற்று) மாலையில் திடீர் சோதனை நடத்தினர்.
மொத்தம் 42 கடைகளில் நடத்தப்பட்ட இச்சோதனையில், 6 கடைகளிலிருந்து - 40 மைக்ரானுக்கும் குறைவான அளவில் தயாரிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் மற்றும் கோப்பைகள் வணிகர்களால் பயன்படுத்தப்படுவதைக் கண்டறியப்பட்டு, 4.5 கிலோ எடை அளவிலான உடனடியாக கைப்பற்றப்பட்டதுடன், இக்கடைகளுக்கு மொத்தமாக ஆயிரத்து 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இச்சோதனையில், காயல்பட்டினம் நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி மற்றும் பணியாளர்கள் இணைந்து பணியாற்றினர்.
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் அண்மைக்காலமாக அவ்வப்போது இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதால், ப்ளாஸ்டிக் பைகள் பயன்பாடு வெகுவாகக் குறைந்து வருகிறது. ஒரு மளிகைக் கடையில் சோதனையிட்டபோது, தாங்கள் அரசு விதிமுறைகளின்படியே செயல்பட விரும்புவதாகவும், ஒரு கடையில் ப்ளாஸ்டிக் பை இல்லா நிலையில், அருகிலுள்ள மற்றொரு கடையில் அது கிடைக்குமானால், வாடிக்கையாளர்கள் தங்களிடம் குறைபட்டுக் கொள்வதாகவும் கூறிய கடை உரிமையாளர், அடிக்கடி இதுபோன்ற சோதனைகளை நடத்தி, தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை எந்தக் கடையிலும் பயன்படுத்த இயலாத அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே இத்திட்டம் வெற்றி பெறும் என்றும் கூறினார்.
நடைபாதையில், தள்ளுவண்டியில் பழங்களை விற்றுக்கொண்டிருந்த ஒரு வணிகரைச் சோதனையிட்டபோது, அவர் - பழைய செய்தித்தாள் காகிதத்தில் செய்யப்பட்ட பைகளைப் பயன்படுத்துவதைப் பார்த்து, அதிகாரிகள் அவரைப் பாராட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
நகராட்சியின் திடீர் சோதனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |