காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்ப வானிலை பல மாதங்களாக நிலவி வந்ததால், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வந்தது. மழை பெய்யாததால் காயல்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களில் பொதுமக்களுக்கு அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருநத நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது இதமான மழை பெய்து வருகிறது. எனினும், பொதுமக்கள் தேவைக்கு இம்மழை போதாது என்ற நிலையுள்ளது.
இவ்வாறிருக்க, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில், வாரந்தோறும் ஜும்ஆ தொழுகையின்போது மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இம்மாதம் 03ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகையை வழிநடத்திய அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ ஜும்ஆ தொழுகையில், மழை வேண்டி குனூத் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (அக்டோபர் 10) நடைபெற்ற ஜும்ஆ தொழுகையின்போது, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஜும்ஆ தொழுகையில் - மழை வேண்டி குனூத் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.
மழைப் பிரார்த்தனையை உள்ளடக்கிய இத்தொழுகையில் சுமார் ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டனர்.
மழை வேண்டி சிறிய குத்பா பள்ளியில் இதற்கு முன் பிரார்த்தனை நடத்தப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |