ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு தமாம்,ரியாத் ஜித்தா,மக்கா மதீனா ஆகிய ஊர்களின் காயலர்கள் குதுகூலத்துடனும்,தங்கள் குடும்ப சகிதததுடனும் இனிமைமிகு யான்போவில் சங்கமமாகி குவியத் தொடங்கினார்கள். பெருநாளின் முந்திய இரவிலிருந்தே யான்போவில் காயலர்களின் புகலிட இல்லமாகிய சகோதரர் "கலவா" இபுறாகீம் அவர்களின் "காயல்ஹவுஸ்" களைகட்ட ஆரம்பித்து விட்டது. மேலே உள்ள ஊர்களிலுள்ளவர்களும், உள்ளூர் காயலர்களும் குவியத் தொடங்கி விட்டார்கள்.
பெருநாள் தொழுகை முடிந்ததும் "காயல்ஹவுஸில்" நமதூர் புகழ்மிகு பெருநாள் உணவு வகையான வட்டிலப்பம் முதல் அனைத்து அறுசுவை உணவும் பரிமாறப்பட்டது.
ஜித்தாவில் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு அன்று மதியம் சிற்றூந்துகளில் யான்போ பயணமான காயல் குடுபத்தவர்கள்,வழியில் தங்கள் மதிய உணவை எல்லோரும் கூட்டாக வெட்டவெளியில் இதமான இயற்கை சூழலில் சந்தோஷ உரையாடலுடன் உண்டுமகிழ்ந்த பின்னர் யான்போ வந்தடைந்தனர்!
அவர்களை யான்போ சார்பாக சகோதரர் "கலவா "இபுறாகீம் மற்றும் சகோதரர்கள் வரவேற்றார்கள்! அன்று இரவு கேரளா மாநிலத்து மக்களோடு நம் "காயல்ஹவுஸ் "சகோதரர்களின் தோழமை கால்பந்தாட்டப்போட்டி மின்னொளியில் நடைபெற்றது, அதை நம்மக்கள் பார்த்து ரசித்தனர்.இரவு உணவு கடல் உணவு வகைகளான மீன். இரால் விருந்து யான்போ கடற்கரை பூங்காவில் பரிமாறப்பட்டது.
பெருநாளின் அடுத்த நாள் யான்போவின் புகழ்பெற்ற கடல் சொகுசுபடகு பயணத்தை அனைத்து காயலர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் நூறு காயல் சகோதரர்களும் , குடும்பத்தார்களும் அப்படகில் பயணமானார்கள். ரம்மியமான தென்றல் காற்றையும், கடல் நீரையும் கிழித்துக்கொண்டு சென்ற அந்த பெரிய சொகுசு படகில் முதல் மாடி, மேல்மாடி என்ற தளங்கள் சிறிய கப்பலைப்போல் வடிவமைக்கப் பட்டிருந்தது.
அந்த இனிமையான ஒருசில மணித்துளி பயணத்தில் எல்லா சகோதரர்களும் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அவர்கள் வயது வித்தியாசத்தைக்கூட பாராமல் ஒவ்வொருவரும் சிறு பிள்ளைகளாய் மாறிய காட்சியை கண்டு அனைவரும் அகம் மகிந்தனர்!
படகு பயணத்தை முடித்துக்கொண்டு அன்றைய மதிய உணவாகிய அறுசுவை பிரயாணி பிரித்யோகமாக காயல்ஹவுஸிலிருந்து தயாரித்துவந்ததை அனைவர்களுக்கும் அங்குள்ள பூங்கா நிழலில் பரிமாறப்பட்டது!
இரண்டு நாட்கள் தமாம், ரியாத், ஜித்தா, மக்கா மதீனா ஆகிய ஊர்களில் இருந்து வந்த காயல் சகோதரர்களின் இன்ப சுற்றுலா இனிதே முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்! இந்த இரண்டு நாட்களில் நாங்கள் பெற்ற இனிமையான பயண அனுபவம் வாழ்வில் எந்நாளும் மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சி சுவடாய் எங்கள் இதயத்தில் பதிந்து விட்டதாக வந்த அனைவர்களும் பாராட்டினர்!
நூற்றுக்கு மேற்ப்பட்ட நமது காயல் பந்தங்களை பரிவோடு வரவேற்று அவர்களுக்கு எல்லா வசதிகளையும்,செலவு அனுசரணைகளையும் செய்த "கலவா" இபுறாகீம் அவர்களுக்கு அனைவர்களும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்தார்கள்!
சகோதரர் "கலவா" இபுறாகீம் அவர்களோடு அனைத்து நிகழ்வுகளையும் நெரிமுகப்படுத்தி நேர்த்தியாக வழிநடத்திச்சென்ற சகோதரர் முகம்மது ஆதம் சுல்தான் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த யான்போ காயல் சகோதரர்கள் அனைவர்களுக்கும் வந்திருந்த காயல் சொந்தங்கள் தங்களின் அன்பொழுகும் நன்றியை தெரிவித்து விடைபெற்றார்கள்!
தகவல்:
சகோதரர் ஹமீத் ரிபாய்
புகைப்பட உதவி:
சகோதரர் ஜஃபர் சாதிக்
சகோதரர் சல்மான் பாரிஸ்,
|