பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இத்தீர்ப்பைக் கண்டித்தும், ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரியும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (அக்டோபர் 07) தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து தனியார் பள்ளிகளும் வழமை போல இயங்கும் என்றும், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் டி.சி.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
காயல்பட்டினத்தில், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே. மேட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களை காயல்பட்டணம்.காம் தொடர்புகொண்டு வினவியபோது, மேற்படி அறிவிப்பை மேற்கோள் காட்டி, பள்ளிகள் வழமை போல இயங்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். |