இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு புதிதாக வாங்கப்படவுள்ள நிலத்தில் சொந்தக் கட்டிடம் கட்ட சிறப்புக் குழுவை நியமித்து, அதன் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 31.07.2014 வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில், கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை காயல் நல மன்ற தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான், ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையுரை:
ரியாத் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.எஸ்.நயீமுல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - இக்ராஃ துணைத்தலைவரும், கத்தர் காயல் நல மன்றத் தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அனைவரையும் வரவேற்றுப் பேசி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கிப் பேசினார். உரையின் உள்ளடக்கம் வருமாறு:-
>> அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்கள் வழமை போல பதிவிறக்கம் செய்யப்பட்டு, தேவைப்படும் மாணவ-மாணவியருக்கு தகுந்த வழிகாட்டுதல்களுடன் வழங்கப்பட்டு, விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 75க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> கத்தர் மற்றும் ரியாத் காயல் நல மன்றங்கள் அனுசரணையில், இக்ராஃ ஒருங்கிணைப்பில், நடப்பு கல்வியாண்டிற்கான - ஏழை மாணவ-மாணவியருக்கான பள்ளிச் சீருடைகளும், ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் அனுசரணையில் பாடக் குறிப்பேடுகளும் இக்ராஃ அலுவலகத்தில் வைத்து வினியோகிக்க ஆவன செய்யப்பட்டுள்ளது.
>> நடப்பு கல்வியாண்டில் புதிதாக கல்வி உதவித்தொகை கோரி 69 விண்ணப்பங்கள் மாணவ-மாணவியரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. ரமழான் மாதம் குறுக்கிட்டதால் உடனடி விசாரணை மேற்கொள்ள இயலவில்லை. எனவே, அடுத்த சில தினங்களில் விண்ணப்பங்கள் மீதான விசாரணையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
>> இக்ராஃ வருடாந்திர நிர்வாக செலவின வகைக்காக, அமைப்புகள் மற்றும் தனி நபர்களிடமிருந்து இதுவரை பெறப்பட்டுள்ள நன்கொடைத் தொகை விபரம் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. ரூபாய் 50 ஆயிரம் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்றோர் தனி நபர்களாகவும், அவர்கள் சார்ந்த அமைப்புகளின் சார்பிலும் அந்த நிலுவைத்தொகையைப் பகிர்ந்துகொள்வதாக உறுதியளிக்க, தேவை பூர்த்தியானது.
>> இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் (2014-15) இதுவரை பெறப்பட்டுள்ள அனுசரணை (Scholarship Sponsor) விபரம் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
>> கடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட படி, உலக காயல் நல மன்றங்களால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகளை ஒருங்கிணைந்த முறையில் ஒரே இடத்திலிருந்து வழங்குவதற்கேற்ப விண்ணப்பப் படிவம் ஆயத்தம் செய்யப்பட்ட பின், அனைத்து காயல் நல மன்றங்களின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
>> கல்வி உதவித்தொகைக்காக இவ்வாண்டு ரூபாய் 2 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் ஜகாத் நிதியாகப் பெறப்பட்டுள்ளது. வழங்கியோர் மற்றும் பெறப்பட்ட தொகை குறித்த விபரங்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. இந்த ஜக்காத் நிதியை பெறுவதற்கு தகுதியான மாணவர்கள் கூடிய விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டு உடனடியாக இத்தொகை அவர்களுக்கு வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்படும்.
>> இக்ராஃ ஆயுட்கால உறுப்பினர்களாக இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள், அவர்களிடமிருந்து பெறப்பட்ட சந்தா தொகை, பெறப்பட வேண்டிய தொகை குறித்த விபரங்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு இக்ராஃ நிர்வாகி உரையின் உள்ளடக்கம் அமைந்திருந்தது.
‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சியை இணைந்து நடத்தல் பற்றி...
அடுத்து ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014’ நிகழ்ச்சிக்கான வரவு-செலவு கணக்கறிக்கையை இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் கூட்டத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியை இக்ராஃவும் இணைந்து தொடர்ந்து நடத்துவது குறித்து, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஸலீம் கேள்வியெழுப்பினார். வருடாவருடம் மாநிலத்தின் முதன்மாணவர் என வெளியூரிலிருந்து அழைப்பதைத் தவிர்த்து, உள்ளூர் மாணவ-மாணவியருக்கு அதிக ஊக்கமளிக்கலாம் என்றும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சிறிது நேரம் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட இலங்கை காயல் நல மன்ற தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “இது ஓர் அழகிய நிகழ்ச்சி கட்டமைப்பு; வெறுமனே உள்ளூர் மக்களை மட்டும் பாராட்டுவது என்று முடிவு செய்தால் அது மாணவ-மாணவியரை பெரிய அளவில் ஊக்கப்படுத்தாது என்பதோடு, செய்தி ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் அளிக்காது என்பதால், தற்போதைய கட்டமைப்பின் படியே இந்நிகழ்ச்சியைத் தொடரலாம்” என்று கூறினார்.
நிறைவில் - இந்நிகழ்ச்சி யாருக்காக நடத்தப்படுகிறதோ அந்த மாணவர்களிடமிருந்து - பள்ளிகளிலிருந்து இதுகுறித்த கருத்துக்களை கேட்டறிந்து, அதன்படி செயல்படலாம் என - கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட ஜித்தா காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி எம்.ஏ.செய்யித் இப்றாஹீம் கருத்து தெரிவிக்க, அது ஏற்கப்பட்டு அதனடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
சொந்தக் கட்டிடம் கட்டுவது குறித்து கலந்தாலோசனை:
தொடர்ந்து இக்ராஃவுக்கு வாங்கப்படவுள்ள இடத்தைப் பதிவு செய்தல், அதில் சொந்தக் கட்டிடம் கட்டுதல் உள்ளிட்டவை குறித்து விரிவாக கலந்தாலோசனை செய்யப்பட்டது.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
கூட்டத்தில் பங்கேற்ற இக்ராஃ செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதுடன், விளக்கம் தேவைப்பட்ட அம்சங்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் போதிய விளக்கமளிக்கப்பட்டது.
ரியாத் காயல் நல மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி கூஸ் எஸ்.ஏ.டி முஹம்மத் அபூபக்கர் பேசுகையில்.
''நிர்வாகச் செலவினங்களுக்கு பொருளாதார நெருக்கடி உள்ளதாக இங்கு எடுத்துக் கூறப்பட்டது.இது நாமெல்லாம் வருத்தப்பட வேண்டிய விஷயம்.காரணம் தற்காலத்தில் அவ்வளவாக அறியப் படாத, சாதாரண - சிறிய அளவிலான அமைப்பினர் கூட பொதுமக்களை அணுகி பல லட்சங்களை நன்கொடையாகப் பெறும் நிலையிருக்க, தரமான கட்டமைப்போடும்,ஏராளமான செல்வந்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை நிர்வாகிகளாக கொண்டும் இயங்கி வரும் இக்ராஃவால் ஏன் அது முடியாது. அப்படியானால் தற்போதைய நமது நடைமுறையில் எங்கோ குறை உள்ளதாக தெரிகிறது. அதனை ஆய்ந்து குறைகளை கண்டறிந்து, களைந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து முழு வீச்சில் முயற்சித்தால் நிச்சயமாக நமது இலக்கை அடைந்து விடலாம்.
இக்ராஃ கல்வி உதவித்தொகைக்காக ஆண்களை மட்டுமே நம்பியிராமல், இவ்விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டுள்ள பெண்களையும் முறைப்படி அணுகினால், தேவையை இலகுவாகப் பூர்த்தி செய்ய இயலும். இனி உள்ளூர் அளவிலேயே இது விஷயத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிராமல், கார்ப்பரேட் தரத்தில் இதைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது!
“இக்ராஃவின் நிர்வாகப் பணிகள் ஏராளமாக இருந்துகொண்டிருக்க, அனைத்துப் பணிகளையும் இன்னமும் நிர்வாகி மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் சூழல் விரைவாக மாற்றப்பட வேண்டும்; நிர்வாகிக்கு உடல் நலன் குன்றினாலோ அல்லது சொந்த அலுவல் ஏதேனும் குறுக்கிட்டாலோ, நிர்வாக நடவடிக்கைகள் முடங்கும் நிலை தற்போது உள்ளது; இக்குறையைப் போக்க, நிர்வாகிக்குக் துணையாக இன்னொரு பணியாளரை நியமித்து, பணிகளை மேலும் தரமாகவும், விரிவாகவும் செய்திட வேண்டியது காலத்தின் கட்டாயம்; அதற்கான ஏற்பாடுகள் குறித்து போர்க்கால அடிப்படையில் கலந்தாலோசிக்க வேண்டிய நிலையிலுள்ளோம்” என்று கூறிய அவர், இவையனைத்தையும் தனது தனிப்பட்ட கருத்தாகவே தெரிவிப்பதாகவும் கூறினார்.
கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட நகரப் பிரமுகர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, இலங்கை காயல் நல மன்ற பொருளாளர் ஹாஜி எஸ்.எம்.பி.இஸ்மாஈல், ரியாத் காயல் நல மன்ற துணைத்தலைவர் ஏ.எச்.முஹம்மது நூஹு, மற்றும் எஸ்.எம்.நயீமுல்லாஹ் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கருத்து தெரிவித்துப் பேசினர்.
தீர்மானங்கள்:
நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
தீர்மானம் 1 - ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014’ வரவு செலவு கணக்கறிக்கை:
பொருளாளரால் தாக்கல் செய்யப்பட்ட ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014’ நிகழ்ச்சியின் வரவு-செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒப்புதலளிக்கிறது.
தீர்மானம் 2 - ச.மா.முதன்மாணவரை நிகழ்ச்சி குறித்து பள்ளிகளின் கருத்தறிதல்:
‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சியின் பயன்கள் குறித்து நகரின் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் முறைப்படி கருத்துக்களைப் பெற்று, அவற்றின் அடிப்படையில் அடுத்தடுத்த கூட்டங்களில் இது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 3 - கட்டிடக் குழு நியமனம்:
இக்ராஃவுக்கு வாங்கப்பட்டுள்ள சொந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு, கடந்த 2013ஆம் ஆண்டு பொதுக்குழுவின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட,
(01) ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
(02) ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல்
(03) ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்
(04) ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால்
(05) ஹாஜி எஸ்.ஏ.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்
(06) ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
(07) ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி
(08) ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது
(09) ஹாஜி குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன்
(10) ஜனாப் ஜெ.மஹ்மூதுல் ஹஸன்
(11) ஜனாப் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத்
ஆகியோருடன்,
(12) ஹாஃ பிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ்
(13) ஜனாப் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம்
(14) ஹாஜி டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ்
ஆகிய - இக்ராஃவின் நடப்பு தலைவர் மற்றும் துணைத்தலைவர்களையும், கட்டிடக் குழுவிற்கான கூடுதல் உறுப்பினர்களாக இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 4 - நிர்வாகிக்கு உதவியாக மற்றொரு பணியாளர்:
இக்ராஃ நிர்வாகிக்கு உதவியாக ஒரு பணியாளரை நியமிக்க இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், யாரைத் தேர்ந்தெடுப்பது, எவ்வளவு ஊதியம் அளிப்பது என்பதை முடிவு செய்ய நிர்வாகிக்கே இக்கூட்டம் அதிகாரமளிக்கிறது.
தீர்மானம் 5 - ச.மா.முதன்மாணவரை நிகழ்ச்சி செலவினங்களுக்கு கல்விசாரா தனியார் நிறுவனங்களை அணுகல்:
இனி வருங்காலங்களில், ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சியை நடத்துகையில், அதற்கான செலவினங்களுக்காக கல்வி சாரா தனியார் நிறுவனங்களை அணுகி அனுசரணை பெற, முயற்சி மேற்கொள்ள இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 - பற்றாக்குறையைப் போக்கியோருக்கு நன்றி:
இக்ராஃ வருடாந்திர நிர்வாகச் செலவின வகைக்கான பற்றாக்குறைத் தொகைக்கு நடப்பு கூட்டத்தில் பங்களிப்பு செய்தோருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்ராஃ நிர்வாகியின் நன்றியுரைக்குப் பின், இக்ராஃ துணைச் செயலாளர் அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் மதியம் 01:45 மணியளவில் இனிதே நிறைவுற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில், ரியாத் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ,, கத்தர் காயல் நல மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ், அபூதபீ காயல் நல மன்ற தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ, இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், அதன் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத், தம்மாம் காயல் நல மன்றத்தைச் சேர்ந்த ஹாஜி எம்.ஏ.பஷீர் அலீ, ஜனாப் சாளை எஸ்.எம்.ஏ.இல்யாஸ், ஜனாப் அப்துல் ரஸ்ஸாக் ஆகிய சிறப்பழைப்பாளர்கள் உட்பட, இக்ராஃவின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம்
இக்ராஃ கல்விச் சங்கத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |