காயல்பட்டினத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவிடுவதென - ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அண்மையில் காயல் மாநகரில் பெய்த அடாத மழையிலும், வெள்ளத்திலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணிகளில் துபை காயல் நல மன்றமும் உரிய உதவிகளைச் செய்யும் என்று துபையில் நடந்த மன்ற செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 12.12.14 வெள்ளியன்று மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திற்கு மன்றத்தின் மூத்த உறுப்பினர் சகோ. எம்.இ. ஷேக் அவர்கள் தலைமை தாங்கினார். சகோ. முத்து முஹம்மத் அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இச்செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு, கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
1. மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மன்றம் எந்தெந்த வகையில் உதவலாம் என்று ஆய்ந்தறிய ஊரிலுள்ள மன்ற உறுப்பினர்கள் ஊரில் கூடி கலந்தாலோசனை செய்ய வேண்டும்.
2. காயல் ஷிஃபா அவசர கால உதவி நிதிக்கு ரூ. 5000 மன்றத்தின் பொது நிதியிலிருந்து கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
3. தொடர்படியான நோய் சம்பந்தமான மருத்துவ உதவிக்கு பூர்வீக காயலர்களுக்கு மன்றம் உதவி செய்யும் என்று முடிவெடுக்கப்பட்டது.
4. அமீரகவாழ் நமது குழந்தைகளுக்கு தமிழ் படித்துக்கொடுக்க சிறப்பு டியூஷன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. சகோ. முத்து ஃபரீத் இதுகுறித்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அடுத்த கூட்டத்தில் அறிவிப்பார். அதன் பின்னர் முடிவெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
5. நமது மன்றத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் செயலாளரும், தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான சகோ. எம்.இ. ஷேக் அவர்கள் நிரந்தரமாக தாயகம் திரும்புகிறார்கள். அவர்களின் மேலான செயல்பாடுகள் மன்றத்திற்கு மிக்க பலனுள்ளதாக இருந்தது. அவர்களின் சேவைகளை மன்றம் நினைவுகூர்ந்து அவர்களுக்கு பாராட்டுதலையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டது. அவர்களின் வாழ்க்கை நனிசிறக்க துஆ செய்யப்பட்டு, பிரியாவிடை அளிக்கப்பட்டது.
6. பொதுக் குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அதனை அப்டேட் செய்து தரவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறைப்பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.S.அப்துல் ஹமீத்
துபை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |