தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் சார்பில் அந்நாட்டின் சுற்றுலாத் தலங்கள் பலவற்றுக்கு ஆண்டுதோறும் இன்பச் சுற்றுலா செல்வது வழமை. அதனடிப்படையில், நடப்பாண்டு நடைபெற்ற இன்பச் சுற்றுலா குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இன்பச் சுற்றுலா:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
தாய்லாந்து காயல் நல மன்றத்தின் வருடாந்திர இன்பச் சுற்றுலா பாங்காக்கிற்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் சந்தபுரி மாகாணத்திலுள்ள காவ் சோய் டாவ் மலை நகரின் அடிவாரத்தில் அமைத்துள்ள சமவெளி சுற்றுலாத்தளத்தில் சென்ற ஆகஸ்டு மாதம் 29-30-31 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெற்றது. காயலர்கள் 60 பேர் கொண்ட இச்சுற்றுலாவில் 10 பேர் தம் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
லேட் லதீபுகள்:
வெள்ளிக்கிழமை மாலையில் ஏற்படும் வழமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் மாரிக் காலமாக இருப்பதால் அவ்வப்போது பொழிந்து கொண்டிருக்கும் மழையின் தாக்கம் காரணமாக இம்முறை காலையிலேயே கிளம்ப வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில், வெள்ளிகிழமை காலை 9 மணிக்கே அனைவரும் புறப்படும் இடத்திற்கு வந்து விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
என்னதான் சட்டம் போட்டு அறிவுறுத்தப்பட்டாலும் பழக்கத்தை மாற்ற முடியாத சில லேட் லதீபுகளின் தாமத வருகையினால் 10 மற்றும் 12 இருக்கைகள் அமைந்த 4 வேன்களில் 44 பேர் கொண்ட முதற்குழு காலை 10 மணிக்குத்தான் புறப்பட்டது.
எளியோர் நிர்வகிக்கும் பள்ளிவாசலுக்கு நிதியுதவி:
இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்தபுரி நகருக்கு முன் கிளாங் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள இரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் ஊழியர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பள்ளியில் எதேச்சையாகத் தொழச் சென்ற நம் காயலர்களிடம் அம்மக்கள் ஒலி அமைப்புச் சாதனங்கள் மற்றும் வயர்கள் பழுதடைந்துள்ளதால் ஒலி வாங்கி மூலம் பாங்கு சொல்ல இயலவில்லை என்ற குறையைச் சொல்ல, உடனேயே நம் சகோதரர்கள் தக்வா உறுப்பினர்களுக்கு இந்தச் செய்தியை வாட்ஸ் அப் ஊடகம் மூலம் தெரிவிக்க, அக்கணமே ஒவ்வொருவரும் தத்தம் பங்களிப்பைச் சொல்ல, அவர்களுக்குத் தேவையான 30,000 தாய் பாட் (சுமார் 60,000 ரூபாய்) அவ்விடத்திலேயே வசூலாக, அந்தத் தொகையை அப்போதே வழங்கிவிட்டனர்.
ஒரு வாரத்திற்குள் இந்த வேலைகளை முடித்து விடுவதாக சொன்னதால், நம்மவர்கள் அடுத்த 12 நாளில் செல்லவுள்ள சுற்றுலா தளத்திற்கு செல்லும் போது வந்து பார்த்துப் போவதாக சொல்லி வந்தனர்.
அதன் அடிப்படையில் 10 மணிக்குப் புறப்பட்ட அந்த 4 வேன்களும் 160 கி.மீ.தொலைவில் உள்ள அந்த இரப்பர் தோட்டத்துப் பள்ளியை நோக்கிப் புறப்பட்டன. புறப்படுதலில் ஏற்பட்ட தாமதத்தினால் ஜும்மாவிற்கு போய் சேரமுடியுமா என்ற அச்சம் ஏற்பட்டதால் முற்கூட்டியே அந்த ஜமாத்தர்களிடம் பேசியபோது 15 நிமிடங்கள் மட்டும் நமக்காக தாமதிக்க முடியும் என்று சொன்னார்கள். அல்ஹம்துலில்லாஹ். ஜும்மா உரையின் இறுதிப் பகுதியில் அனைவரும் சென்றடைந்து ஜமாஅத்துடன் கலந்து கொண்டனர். ஒலி வாங்கி சீரமைப்பு செய்யப்பட்டு நன்றாக செயல்பட்டது மன மகிழ்வாக இருந்தது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
இரப்பர் தோட்ட உலா:
கண்ணெட்டும் தூரம் வரை பசுமை நிறைந்து பரந்து விரிந்த இரப்பர் தோட்டம். மேனியைத் தழுவும் குளுகுளு காற்று. இதமான சாரல் மலை. மலைப் பாங்கான பகுதிகள். இவைகளை ரசித்த நம்மவர்கள் இது அசப்பில் இலங்கை இரத்தினபுரியை ஒத்துள்ளது என்றும் இன்னும் சிலர் கேரளப் பகுதியைப் போன்று உள்ளது என்றும் போற்றினர்.
முற்கூட்டியே தயாரித்து தனித்தனியாக பொட்டலமிடப்பட்டிருந்த நெய்ச்சோறு, சிக்கன் 65, தைக்காச்சம்பல் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
உள்ளூர் மக்களின் மனமுவந்த வரவேற்பு:
நம் கூட்டத்தைக் கண்ட அம்மக்களுக்கு ஆனந்தமோ ஆனந்தம். நாம் இவ்வளவு பேர் வருவோம் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு கை கால் ஓடவில்லை. “அது வேண்டுமா - இது வேண்டுமா - நீங்கள் ஏன் உணவு கொண்டு வந்தீர்கள் - இதோ அரை மணி நேரத்தில் சமைத்துத் தந்து விடுகிறோம் - உங்களுக்காக கிடா அறுத்து தயாராக வைத்துள்ளோம்” என மிகுந்த அன்புடன் கூடிய அவர்களின் வற்புறுத்தல் தாங்க முடியவில்லை. எவ்வளவோ மறுத்தும் 8 கிலோ கிடாக் கறி, பழங்கள், காபி, தேநீர் என அள்ளித்தந்தனர். பெற்றுக்கொண்டு நன்றி கூறி அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சுற்றுலாத் தளத்திற்குப் புறப்பட்டோம்.
சுற்றுலாத் தலத்திற்குப் புறப்பாடு:
மாலை 4 மணியளவில் மலை அடிவாரத்தில் அமைந்திருந்த குடிலை அடைந்தோம். சாரல் மழை சாமரம் வீசி வரவேற்றுக் கொண்டிருந்தது.
எங்கு நோக்கினும் பச்சைப்பசேலன நன்கு பராமரிக்கப்பட்ட மெல்லிய புல்தரை. ஆங்காங்கே அழகுற அமைந்திட்ட சிறு சிறு பாறைகளின் திட்டுக்கள், கண்கவர் பூக்கள், கலை நயனங்களுடன் வடிவமைக்கப்பட்ட வண்ண வண்ணச் செடிகள் மற்றும் குடை போன்ற அலங்கார மரங்கள் , ஓங்கி ஒய்யாரமாக வளர்ந்துள்ள ஓவிய மரங்கள், வானம் பாடிகளின் கவின்மிகு கீதங்கள், சுற்றிலும் மேகத்தைத் தாங்கிய மலைகள், நுழைவாயிலின் கீழே அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் சிற்றோடை என, மனதைக் கொள்ளை கொள்ளும் அனைத்துக் காட்சிகளையும் கண்ட நம் சிறார் மற்றும் பெண்கள் வாகனத்தை விட்டு இறங்கியும் இறங்காததுமாக இயற்கையில் தங்களை இழந்தவர்களாக நிழற்படங்கள் எடுக்க ஓடிவிட்டனர்.
முன்பதிவு செய்யப்பட்டிருந்த எழில்மிகு குடில்களில் குடும்பத்தினர்கள் தனித்தனியாகவும், ஒத்த வயதினர் மற்றும் மூத்தோர் எனவும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடிலிலும் நான்கைந்து பேர் என அறையின் அளவிற்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட்டனர்.
5 நட்சத்திர தரத்தில் அமைந்திருந்த சமையல் கூடத்தில் அரை மணி நேரத்தில் அனைவருக்கும் சுடச்சுட கடலை மாவு பக்கோடா, இஞ்சி தேநீர் சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது.
இதனிடையே ஜும்மா தொழுகைக்குப் பின் புறப்பட்ட 12 பேர் கொண்ட இரண்டாவது குழுவினரும் வந்து சேர்ந்து கொண்டனர்.
அணிகள் பிரிப்பு:
மக்ரிப் தொழுகைக்குப் பின் அனைவரும் கூடத்தில் ஒன்று கூடினர். துவக்கமாக, தலா 7 நபர்களைக் கொண்ட 6 அணிகளாக பிரிக்கப்பட்டனர். பிரிக்கப்பட்ட அணியினருக்கு 6 வண்ணங்களில் தக்வா பெயர் கொண்ட டி-ஷர்டும், அரைக்கால் டிரௌசரும் வழங்கப்பட்டன.
20 வினாக்கள் விநோத விளையாட்டு:
ஆரம்பமாக, "20 வினாக்கள் வினோத விளையாட்டு" நடைப்பெற்றது. இதில் ஒரு அணியிலிருந்து ஒருவர் அழைக்கப்பட்டு அவரிடம், ஒரு நபரின் பெயர் ரகசியமாக சொல்லப்படும். அந்த நபர் பற்றிய விவரங்களை அந்த அணியினர் 20 கேள்விகளுக்குள் கேட்டு சரியான பதிலைத் தரவேண்டும். 10 சுற்றுகள் நடந்த இப்போட்டியில் இளம் பச்சை நிற சட்டை அணி வெற்றி வாகை சூடியது.
பலகுரல் மிமிக்ரி:
பின்னர் மெல்லிசை மற்றும் பலகுரல் மன்னர்கள் தங்கள் திறமையின் மூலம் கூடியிருந்தோரைப் பரவசப்படுத்தினர். இரவு 9 மணியளவில் புரோட்டா, கோழிக்கறியாணம், பாதம் பால், பழங்கள் வழங்கப்பட்டன. இரவு நன்றாக மழை பெய்தது.
அசன் இழு; உசேன் தள்ளு!
அடுத்த நாள் காலை பிஸ்கட் சாப்பிட்டு, தேநீர் அருந்திவிட்டு, தங்கும் விருந்தினர்களுக்கென அங்கேயே இலவசமாக உள்ள மிதிவண்டிகளை எடுத்துக்கொண்டு சிறுவர்கள், இளைஞர்கள், மூத்தோர்கள் என பலரும் சுமார் 30-40 ஏக்கர் அளவு பரப்புள்ள அந்த சுற்றுலாத்தலத்தைச் சுற்றியும் போடப்பட்டுள்ள மேடு பள்ளங்கள் நிறைந்த சிமெண்ட் ரோட்டில் மிதித்து ஒட்டி, நீண்ட காலம் ஒட்டாமல் போன சைக்கிள் பயிற்சியை இளைக்க இளைக்க ஒட்டி சிலர் சுற்றி முடித்ததும், இன்னும் சிலர் ஒட்டவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்ததும் பார்க்க படு தமாஷாக இருந்தது.
9 மணியளவில் இட்லி, வடை, சாம்பார், சட்னியுடன் கூடிய சிற்றுண்டி அருந்திவிட்டு அங்கிருந்து சுமார் 40 கி.மீ.தொலைவில் உள்ள கிராந்திங் அருவிக்கு குளிக்கப் புறப்பட்டனர்.
இடைச்செருகல்:
இதனிடையே, வேலையின் நிமித்தம் வெள்ளி புறப்பட இயலாத அறுவர் குழு ஒன்று காரில் புறப்பட்டு இந்த அருவியில் வந்து நம்முடன் சேர்ந்து கொண்டனர்.
கிராதிங் அருவி, கோ சோய் டாவ் தொடர்ச்சி மலையில் உள்ள பல அருவிகளுள் ஒன்றாகும். இதன் உள்ளே ஒரு தேசிய பூங்கா மற்றும் விலங்கின காப்பகமும் உள்ளன. 13 தளங்கள் உள்ள இந்த அருவியில் தற்போது 8 தளங்கள் வரை சென்று குளிக்க அனுமதியுண்டு. கரடுமுரடான பாதை என்றாலும் பாதுகாப்பானவை.. வழிநெடுகிலும் பாதுகாப்பிற்காக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
எட்டாம் தளத்தில் அருவிக் குளியல்:
பெண்களும், சிறுவர்களும் கீழ் தளத்தில் மறைவான ஒரு பகுதியில் குளிக்கச் சென்றுவிட, மலையேறப் பயந்தவர்களும், ஏற இயலாதவர்களும் 2 வது தளத்தில் குளிக்கச் சென்றுவிட்டனர். இளைஞர்களும், துணிந்தவர்களும் 8ஆவது தளத்தில் உள்ள அருவியில் குளித்தும் கபடி விளையாட்டுப் போட்டி நடத்தியும் ஆனந்தமடைந்தனர்.
தெளிவான நீர்வீழ்ச்சி, அதிகக் கூட்டமில்லாத அமைதியான சூழல், அவ்வப்போது பன்னீர் தெளிக்கும் சாரல், நூறு அடிக்கும் மேலாக நிமிர்ந்து நிற்கும் கிளைகளற்ற மரங்கள், தூய்மையான சுற்றுப்புறங்கள், குரங்குகளின் தொல்லைகளோ, பொருட்கள் களவு போய்விடும் என்ற அச்சமோ இல்லாத ஒரு வித்தியாசமான சூழலைப் பார்க்க விந்தையாகவே இருந்தது.
இஸ்த்தல்:
குளித்த களைப்பில் எடுத்த பசிக்கு கள்ளப் பண்டம், பொறித்த அன்டிக்கொட்டையும், கேக்கும் சாப்பிட்ட பின், அருவியிலிருந்து புறப்பட்டனர். பகல் 2 மணியளவில் தங்கும் இடம் வந்து, மீன் பிரியாணி, கட்டா, பாயாசம் இஸ்திவிட்டு சிலர் தூங்கச் சென்றுவிட, இன்னும் சிலர் தாம் தள்ளு, டேபிள் டென்னிஸ், க்ரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறுவர்களும், குழந்தைகளும் பட்டு போன்ற புல்தரையில் கால்பந்து, சைக்கில், ஓட்டப் போட்டி வைத்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். பல வண்ணங்களில் குழந்தைகளுக்கு பலூன் காற்றடித்துக் கொடுக்கப்பட்டது.
கால்பந்துப் போட்டி:
மாலை 5 மணிக்கு, குடை மிளகாய், வெங்காய பஜ்ஜி, தேநீருக்குப் பின், லீக் முறையில் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. சந்தடி சாக்கில், பேரன்-பேத்தி கண்ட சில பெருசுகளும், இளசுகளுடன் இணைந்து கால்பந்து விளையாடுவது போல் நடிக்கத் துவங்கினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், வெள்ளை சட்டை அணி வெற்றி பெற்றது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை பேருவளை மாணிக்க வணிகர் ஜனாப் ஹாரூன் ஹாஜியார் வெற்றிபெற்ற அணிக்கு பரிசை வழங்கினார்.
வினாடி-வினா போட்டி:
மக்ரிப் தொழுகைக்குப் பின், பொறித்த முந்திரியுடன் பாலில்லாத இஞ்சித் தேநீர் விநியோகிக்கப்பட்டது. பின்னர், வினாடி வினா போட்டி நடைபெற்றது. ஆன்மிகம், அரசியல், அறிவியல், வரலாறு, விளையாட்டு போன்ற தலைப்புகளில் தலா 5 வினாக்கள் கேட்கப்பட்டு முதலில் சொல்பவர்க்கு 10 மதிப்பெண்களும், பிறகு சொல்பவர்களுக்கு 5 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. இறுதியில் பச்சை சட்டை அணி வெற்றி பெற்றது.
சூட்டுக்கறி:
இரவு உணவில் சூட்டுக் கோழிக்கறி (BARBEQUE CHICKEN), சிக்கன் பட்டர் மசாலா, காய்கறி பிரைட் ரைஸ் பரிமாறப்பட்டது.
கம்போடியா எல்லையில் அருவிக் குளியல்:
ஞாயிறு காலை பூரி மசாலா, சாம்பாருடன் பசியாறிவிட்டு காவ் சோய் நகரிலிருந்து 30 கி.மீ. தெற்கே கம்போடியா நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள அருவிக்கு குளிக்கச் சென்றனர். இது சற்று உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தொலைத்தொடர்பு கருவிகள் ஏதும் செயல்படவில்லை. விலங்கின நடமாற்றம் மற்றும் விஷ ஜந்துக்கள் மிகையானப் பகுதி என எச்சரிக்கைப் பலகை அறிவுறுத்தியது.
அருவிக்குப் போகும் பாதை செங்குத்துத்தாவும், ஏறுவதற்குப் ஏதுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் இல்லை என்பதால் பெண்களும் சிறுவர்களும் ஏற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
மேலே ஏற ஏற ஆழமான பள்ளங்கள் மிகவும் ஆபத்தாக தெரிந்ததாலும், மேலும் அருவிக்கு 2 கி.மீ. ஏற வேண்டும் என்று அங்கிருந்த பாதுகாப்பாளர்கள் சொன்னதாலும், இதற்கு மேல் செல்வது சூதானம் இல்லையென எல்லோரும் இறங்கிவிட்டனர்.
கடுப்பேற்றிய இளசுகள்:
கீழே வந்தபின் ஆட்களை எண்ணினால் 5-6 இளைஞர்களைக் காணவில்லை. சமிக்ஞை இல்லாததால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ஏற்கனேவே ஏறி இறங்கி வந்தவர்களில் ஒருவருக்கு அட்டைப் பூச்சி ஓட்டியதால் இரத்தம் கொட்டியதைப் பார்த்த பின் யாருக்கும் ஏறிப்போய்ப் பார்க்கத் துணிவில்லை. பெற்றோர்கள் கவலை கொள்ள ஆரம்பித்துவிட்டனர். ஒரு மணி நேரம் வரையும் காத்திருந்தும் அவர்கள் வராததால், இரண்டு வேன்களை மட்டும் தங்கும் இடத்திற்கு அனுப்பிவிட்டோம்.
இரண்டு மணிநேரம் கழித்து அந்தப் பிள்ளைகள் மேலே அருவியில் குளித்துவிட்டு ஆயாசமாக வந்து, “என்ன, நீங்களெல்லாம் குளிக்கலையா” என அசால்ட்டாக நம்மிடம் கேட்டதைப் பார்த்து, அவர்களை அடிப்பதா, உதைப்பதா என்று தெரியவில்லை. அந்தப் பெற்றோர்களுக்கும் அப்போதுதான் உயிரே வந்தது. இதனிடையே புறப்படலாம் என இருந்தபோது, நாங்கள் தேடாத மேலும் இருவர் குளித்துவிட்டு இறங்கி வந்தது தான் அதைவிட பெரிய காமடி (கொடுமை)யாக இருந்தது.
அதிகமானோர் குளிக்க முடியாத ஏமாற்றத்துடன் தங்குமிடம் திரும்பினர்.
மதிய உணவு நெய்ச்சோறு, களரிக்கறி, கத்திரிக்காய் மாங்காய் சாப்பிட்ட பின், குடில்களைக் காலி செய்துவிட்டனர்.
பொதுக்குழுக் கூட்டம்:
மாலை 4 மணிக்கு தக்வாவின் பொதுக்குழுக் கூட்டம், கூடத்தில் நடைபெற்றது. விளக்கு நூர் முஹம்மது ஹாஜி தலைமைத் தாங்கி தலைமையுரை ஆற்றினார். 3 நாட்கள் அடைந்த இந்த மகிழ்ச்சிக்கு உழைத்த அனைவரையும் பாராட்டிப் புகழ்ந்து பேசினார்.
குலுக்கல் பரிசுகள்:
சுற்றுலாவில் கலந்துகொண்டோரைக் குஷிப்படுத்துவதற்காக வழமையாக நடைபெறும் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஓயாது உழைத்தோர்:
இந்த சுற்றுலா இவ்வளவு சிறப்பாக நடைபெற உழைத்த சகோதரர்கள் M.H.புஹாரி, கம்பல்பக்ஷ் இர்பான், சூபி ஹுசைன், காதர் சாஹிப், M.I.முஹம்மது நூஹு, அப்துல் வஹாப் ஆகியோருக்கு செயலாளர் M.S.செய்யது முஹம்மது நன்றி கூறினார். அமீர் சுல்தான் ஹாஃபிழ் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பொட்டலமாக இரவுணவு:
இரவு உணவிற்காக தயார் செய்யப்பட்டிருந்த குஷ்கா சாப்பாடு பொட்டலமிடப்பட்டு ஒவ்வொரு வேனிலும் ஏற்றப்பட்டது. மாலை 5.30 மணியளவில் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு பாங்காக் வந்தடைந்தனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து - பாங்காக்கிலிருந்து...
செய்தியாக்கம்:
M.S.செய்யித் முஹம்மத்
படங்கள் & பதிவேற்ற உதவி:
M.H.புஹாரி
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட வருடாந்திர இன்பச் சுற்றுலா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |