மக்களின் உடல்நலனைப் பாதிக்கும் DCW ஆலை குறித்து தமிழக சட்டப்பேரவையில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யக் கோரி வருகிற 30ஆம் நாளன்று ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக, தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. அவைகளுக்கு சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தினால் ஒட்டுமொத்த தூத்துக்குடி மாவட்டத்தில் நீர், நிலம், காற்று மாசுபட்டு வருகிறது. மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
காயல்பட்டினம் அருகே பல வருடங்களாக செயல்பட்டு வரும் டிசிடபிள்யூ தொழிற்சாலை, ஆபத்தான ரசாயன கழிவுகளை ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆலைக்கு அருகே உள்ள கடலில் ரகசியமாக கலந்து விடுகிறார்கள். இதனால் ஆலையை சுற்றியுள்ள காயல்பட்டினம், ஆறுமுகநேரி, புன்னக்காயல், சேர்ந்தமங்கலம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு புற்றுநோய், சுவாச கோளாறு, தோல் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. சிலர் மனநோயாளிகளாகி உள்ளனர்.
கடந்த 2007இல் இருந்து 2011 வரை எடுக்கப்பட்ட கள ஆய்வின் படி, இந்த தொழிற்சாலையால் 162 பேர் கேன்சர் நோயால் உயிரிழந்துள்ளனர். எனவே, மக்களின் உடல் நலத்திற்குக் கேடு விளைவித்து, நிலம், நீர், காற்றினை மாசுப்படுத்தி வருகிற இந்த தொழிற்சாலை பற்றிய வெள்ளை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய கோரி, வருகிற 30ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட பொறுப்பு தலைவர் மெளலவி அஸ்ரப் அலி பைஜி தலைமை வகிக்கிறார். கட்சியின் மாநில தலைவர் தெஹலான் பாகவி, அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், முகிலன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர். இதில் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினர் உஸ்மான்கான், தூத்துக்குடி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மெளலவி அஸ்ரப் அலி பைஜி, செயலாளர் முகம்மது தாஹிர், உறுப்பினர்கள் காதர் மைதீன், முகம்மது அப்துல் காதர், முன்னாள் மாவட்ட பொருளாளர் கெளது ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்
எஸ்.டி.பீ.ஐ. தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |