காயல்பட்டினம் நகராட்சியில் பயோகேஸ் திட்டம்:
உணவுக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பயோகேஸ் திட்டத்தை காயல்பட்டினம் நகராட்சியில் செயல்படுத்திட - தமிழக அரசு கடந்த ஆண்டு அனுமதியளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இத்திட்டத்தைச் செயல்படுத்திட அண்மையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பெறப்பட்ட குறைந்த ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, காயல்பட்டினத்தில் பயோகேஸ் திட்டத்தை அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து நகரில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. முறையான எந்த விபரமும் பெறப்படாமல், திட்டமிட்டும் சில கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.
ஆற்காடு பயோகேஸ் திட்டத்தைப் பார்வையிட்ட காயல்பட்டினம் நகர்மன்ற அங்கத்தினர்:
இந்நிலையில், தமிழகத்தில் முதன்முதலாக இத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் - வேலூர் மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு, காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் தலைமையில் அவர் உள்ளிட்ட 9 உறுப்பினர்களும், காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜும் நேரில் சென்று பயோகேஸ் திட்டத்தைப் பார்த்து, தேவையான விளக்கங்களைப் பெற்றதோடு, திட்டச் செயல்பாட்டைப் பாராட்டி தமது கருத்துக்களையும் பதிவு செய்து வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கும் இத்திட்டத்தைப் பார்த்து, விளக்கங்களைப் பெற்றதோடு, தனது பாராட்டுக் கருத்தையும் பதிவு செய்து வந்துள்ளார்.
ஆற்காடு நகர்மன்ற அங்கத்தினருடன் காயல்பட்டணம்.காம் சந்திப்பு:
காயல்பட்டினம் நகராட்சியில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் காட்டப்படும் தயக்கம், அதற்குக் காரணங்களாக பல்வேறு கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து சரியான விபரத்தைப் பெற்றிடுவதற்காக, வேலூர் மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு - இம்மாதம் 17ஆம் நாள் புதன்கிழமையன்று காயல்பட்டணம்.காம் நேரில் சென்று, பயோகேஸ் ப்ளான்ட் அமைந்துள்ள பகுதியை நேரில் பார்த்தறிந்ததோடு, ஆற்காடு நகர்மன்றத் தலைவர் புருஷோத்தமன், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோரைச் சந்தித்து, தேவையான விளக்கங்களைப் பெற்றுள்ளது.
ஆற்காடு நகர்மன்றத் தலைவர் பேட்டி:
ஆற்காடு நகர்மன்றத் தலைவர் புருஷோத்தமன் தெரிவித்த தகவல்களின் சுருக்கம் வருமாறு:-
>>> இந்த பயோகேஸ் திட்டத்தைச் செயல்படுத்திட தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகளுக்கு அரசால் அனுமதியளிக்கப்பட்டுள்ளபோதிலும், ஆற்காடு நகராட்சி மட்டுமே இத்திட்டத்தைத் துவக்கி, வெற்றிகரமாகச் செயல்படுத்தி, முன்னோடியாகத் திகழ்கிறது...
>>> மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியிலேயே இது அமைந்துள்ளது... இதனால் யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லை...
>>> இவ்விடத்தை, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பார்வையிட்டு, பாராட்டிச் சென்றுள்ளனர்... காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் உட்பட தமிழகத்தின் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் வந்து பார்த்துப் பாராட்டிச் சென்றுள்ளனர்...
>>> பயோகேஸ் திட்டத்திற்கும், குப்பைகளைக் கொட்டும் Composed Yardக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், அவை அருகருகில்தான் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை...
ஆற்காடு நகராட்சியில், குப்பைகளைக் கொட்டுமிடம் - பயோகேஸ் ப்ளான்ட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது...
ஆற்காடு நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்த தகவல்களின் சுருக்கம் வருமாறு:-
>>>பயோகேஸ் திட்டத்திற்குத் தேவையான இடுபொருள், சைவ - அசைவ உணவுக் கழிவுகள் மட்டுமே... இதர குப்பைகள் இதனுடன் சேர்ந்தால் மின்சாரம் உற்பத்தியாகாது... அனைத்தும் வீணாகிவிடும்...
>>> பயோகேஸ் ப்ளான்ட் அமைந்துள்ள இடத்திலிருந்து எவ்வித துர்நாற்றமோ, பெரும் ஒலியோ ஏற்பட வாய்ப்பே கிடையாது... எனவே, இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லை...
>>> பயோகேஸ் ப்ளான்ட்டிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வீண் விரயமின்றியும், தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தும் வினியோகிக்கப்பட வேண்டுமெனில், ப்ளான்ட்டும் - மின் வினியோகத்தைப் பெறும் இடமும் மிக அருகில் இருப்பது நல்லது... தொலைவு அதிகரிக்க, அதிகரிக்க, நகராட்சிக்கு செலவுகள் அதிகரிக்கும்...
>>> பயோகேஸ் திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கேபிள் கம்பிவடம் வழியே மின் வினியோக அமைப்பிற்குக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது... மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்தால், கேபிள்கள் பாதுகாப்பாக இருக்கும்... இல்லையேல் திருட்டு போக வாய்ப்புள்ளது...
>>> ஆற்காடு நகராட்சியில் 3 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பயோகேஸ் திட்டத்தின் மூலம் 250 தெரு விளக்குகள் வரை எரிவதற்கு மின்சாரம் உற்பத்தியாகிறது... காயல்பட்டினத்தில் 5 மெட்ரிக் டன் வாங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அப்படியானால், நீங்கள் 400 தெரு விளக்குகளையாவது எரியச் செய்யலாம்...
ஆற்காடு நகர்மன்றத் தலைவர் நேர்காணலின் அசைபடப் பதிவு:
ஆற்காடு நகர்மன்றத் தலைவர் புருஷோத்தமனுடனான நேர்காணலின் முழு அசைபடப் பதிவைக் காண கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
நேர்காணலில் நகர்மன்றத் தலைவர் தெரிவித்த கருத்துக்கள்:
நேர்காணலில் அவர் தெரிவித்த தகவல்களின் முழு வாசகம் வருமாறு:-
குடியிருப்புப் பகுதியில் பயோகேஸ் திட்டம்:
ஆற்காடு பயோகேஸ் திட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகளும், ஆற்காடு நகராட்சி மனைப்பிரிவுக்குட்பட்ட – திருமண மண்டபம் உள்ளிட்ட குடியிருப்புகளும் இருக்கும் பகுதியில், 4 ஆயிரம் சதுர அடி (சுமார் 10 செண்ட்) பரப்பளவில் அமைந்துள்ளது.
மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் சீரிய திட்டங்களுள் ஒன்றான நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சுகாராத்தைப் பேணிக் காக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
அவற்றின் மூலம், ஆற்காடு நகராட்சியில் - பொதுமக்களின் பங்களிப்புடன் தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் தமிழகத்திலேயே முதன்முறையாக சைவ - அசைவ உணவுக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அம்மா அவர்கள் 09.05.2013 துவக்கி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திரு. அஜய் யாதவ் அவர்கள், “இத்திட்டத்தை சிறப்புற செயல்படுத்தினால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை மிகவும் தூய்மையாக வைத்துக்கொள்ள இயலும்...
மொத்தம் செலவாகும் 45 லட்சத்தில், 23 லட்சத்தை நகராட்சி செலுத்த வேண்டும்...” என்று கூறி தூண்டுதல் கொடுத்தார்.
எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. சீனிவாசன் அவர்கள், வணிகர்கள் சங்கம், ஜெயின் சங்கம், பெருவணிகர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோரை அணுகியும், தன் சொந்தச் செலவிலிருந்து 6 லட்சம் ரூபாயைத் தந்தும் மொத்தம் 23 லட்சம் ரூபாயை இரண்டே நாட்களில் திரட்டித் தந்தார்.
நகர்மன்றத் தலைவராகிய நான், துணைத்தலைவர் அவர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் யாவரும் இணைந்து 2 லட்சம் ரூபாய் பங்களிப்பு செய்துள்ளோம்.
மொத்தத்தில், இத்திட்டத்தை தமிழகத்திலேயே முதன்முறையாக எங்கள் நகராட்சியில் செயல்படுத்திட எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழிவகுத்துத் தந்துள்ளார்கள்.
நகர்மன்ற அங்கத்தினர் அனைவரின் ஒற்றுமை:
எங்கள் நகராட்சியில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த 30 கவுன்சிலர்களும் எங்களுக்கு முழு ஆதரவளித்துள்ளனர்.
இந்த பயோகேஸ் ப்ளான்ட் - மக்கள் அதிகம் வசிக்கின்ற - அரசு மற்றும் ஆற்காடு நகராட்சியின் ஹவுஸிங் போர்ட் - ஆற்காடு நகராட்சியின் மனைப்பிரிவு அமைந்துள்ள இடத்தில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது. ப்ளான்ட் அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 முதல் 150 அடி தொலைவில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றன.
இது மிகவும் சுகாதாரமாகவும், நல்ல நிலையிலும் இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எவ்வித சிறு தொல்லையும் கிடையாது. சிறிய அளவில் கூட வாசனையோ, பெரும் ஒலியோ வராது.
அன்றாடம் 3 டன் வரை கழிவுகள் தேவைப்படுவதால், நகராட்சிப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை அப்படியே ப்ளான்ட்டில் செலுத்தி விடுகிறோம். இதனால், கழிவுகளை வேறெங்கும் கொட்டி வைக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.
காய்கறிச் சந்தை, இறைச்சிக் கடைகள், திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் கழிவுகளைச் சேகரிப்பதற்காக Bin கொடுத்துள்ளோம். அவற்றில் அவர்களே கழிவுகளைத் தரம் பிரித்து தந்து விடுவதால், அவற்றை அப்படியே கொண்டு வந்து ப்ளான்ட்டில் கொட்டி விடுகிறோம்.
ப்ளான்ட் அமைந்துள்ள இடம் பார்ப்பதற்கு அழகிய பூங்கா போன்று இருக்கும். வீடுகள், திருமண மண்டபம் சுற்றி அமைந்திருக்கும் பகுதியில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாளொன்றுக்கு 285 யூனிட் மின்சாரத்தை இதன் மூலம் உற்பத்தி செய்கிறோம். இந்த மின்சாரம் மூலம் 240 முதல் 300 வரை தெரு விளக்குகள் நான்கைந்து வார்டுகளில் எரிகின்றன.
இத்திட்டத்தின் பயனாக நகராட்சிக்கு நல்ல வருவாய் கிடைப்பது மட்டுமின்றி, நகரை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள முடிகிறது.
இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பெல்லாம், காய்கறிச் சந்தைகளிலிருந்து போடப்படும் கழிவுகளால் சுற்றுப்புறப் பகுதிகளில் துர்நாற்றம் வீசும். ஹோட்டல்களிலுள்ள கழிவுகளை கால்வாயில் கொட்டும் நிலையிருந்தது. இறைச்சிக் கடைகளின் கழிவுகளை ஆங்காங்கே ஒதுக்குப் புறங்களில் கொட்டி வந்தனர்.
ஆனால் இன்று, நாங்கள் ஒரு நாளைக்கு 3 விடுத்தம் சென்று அக்கழிவுகளைச் சேகரித்துச் செல்வதால், ஆற்காடு நகரத்தையே நாங்கள் சுகாதாரமாக வைத்திருக்கிறோம்.
சேவை வரி:
இத்திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்துவதற்காக, இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கு சேவை வரியாக 250, 500, 1000 ரூபாய் என வரி வசூலித்து, அதன் மூலம் பயோகேஸ் திட்ட பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்கிறோம். இதன் காரணமாக, நகராட்சிக்கு வருவாய்தானே தவிர இழப்பு என்று எதுவுமில்லை.
பயோகேஸ் கழிவுகளைக் கொட்ட தனி இடம் தேவையில்லை:
பயோகேஸ் ப்ளான்ட்டும், அதில் கொட்டப்படும் கழிவுகளும் அருகருகில்தான்தான் இருக்க வேண்டும் என்று எதுவுமில்லை. வாகனங்கள் மூலம் கழிவுகளை நேரடியாகவே எடுத்து வந்து ப்ளான்ட்டில் கொட்டுவதால், கழிவுகளைச் சேகரிக்க என தனி இடம் தேவைப்படவில்லை.
பார்த்துப் பாராட்டிச் சென்றோர்:
எங்கள் பயோகேஸ் ப்ளான்ட்டை,
15 பேர் கொண்ட Training IAS குழுவினர் வந்து பார்த்துச் சென்றுள்னர்.
சில நாட்களுக்கு முன், கர்நாடக மாநிலத்திலிருந்து அங்குள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் (CMA), நகராட்சி ஆணையர்கள் 50 பேர் உள்ளிட்டோரடங்கிய குழுவினர் ஒரு சிறப்புப் பேருந்தில் வருகை தந்து, இத்திட்டத்தைப் பார்த்துச் சென்றுள்ளனர்.
மாநகராட்சி மேயர்கள் 10 பேர் வந்து பார்த்துச் சென்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த - ஏறத்தாழ 25 நகராட்சி தலைவர்கள் வந்து பார்த்துச் சென்றுள்ளனர்.
ஆம்பூர், விழுப்புரத்தைச் சேர்ந்த ஆணையர்கள் கூட சில நாட்களுக்கு முன் வந்து பார்த்துச் சென்றனர்.
தமிழக தலைமைச் செயலாளர் சபீதா மேடம் வந்து பார்த்துச் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டிலேயே ஆற்காடு நகராட்சியில்தான் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதால், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநரே (CMA) எங்கள் ஊருக்கு வந்து இத்திட்டத்தைப் பார்த்துச் செல்ல - தேவையுடையோருக்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார். அவரும் வந்து பார்த்துச் சென்றுள்ளார்.
இத்திட்டத்தைத் துவக்குவதற்கு முன் இதுகுறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. நகரில் தேங்கும் கழிவுகளைக் கண்ட எங்கள் மாவட்ட ஆட்சியர் திரு. அஜய் யாதவ் அவர்கள்தான் இத்திட்டம் குறித்து எங்களுக்கு விளக்கி, தூண்டுதல் கொடுத்தார்.
இத்திட்டத்தைத் துவக்குவதற்கு முன்பு வரை பொதுமக்கள் எங்களிடம் இதுகுறித்து கேட்கத்தான் செய்தனர். என்றாலும் அவர்களுக்கு முறையாக விளக்கிய பிறகு, அனைவரின் ஒத்துழைப்போடு - எவ்வித பிரச்சினையுமின்றி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆற்காடு நகராட்சியில் பயோகேஸ் திட்டம் துவக்குவதற்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக, எங்கள் நகராட்சி ஆணையர் - பெங்களூருவில் தனியார் வேளாண்மைக் கல்லூரியிலுள்ள இதே போன்ற ப்ளான்ட்டைப் பார்த்து வந்தார்.
பயோகேஸ் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர்கள் அவசியமில்லை:
பயோகேஸ் ப்ளான்ட்டிற்காக கூடுதலாக பணியாளர்கள் அமர்த்தப்படவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏற்கனவே பணியிலிருப்போர்தான் இதைச் செய்கின்றனர். முன்பு மொத்தமாக ஓரிடத்தில் அவர்கள் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டினர். தற்போது கழிவுகளை மட்டும் இந்த ப்ளான்ட்டில் கொட்டுகின்றனர். அவ்வளவுதான்!
காயல்பட்டினம் நகர்மன்ற அங்கத்தினர் பாராட்டு:
காயல்பட்டினம் நகராட்சியிலிருந்து, சில மாதங்களுக்கு முன்பு நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் துவக்கமாக வந்து பார்த்துச் சென்றனர். அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்த அவர்கள், “இந்த இடம் மிகவும் நன்றாக உள்ளது. மக்கள் வாழும் பகுதியில்தான் இருக்கிறது. இந்தளவுக்கு நன்றாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு சிறப்பான திட்டம்” என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் அவர்களும் வந்து ப்ளான்டைப் பார்த்துவிட்டு, புகழ்ந்து பேசியுள்ளார். இவர்கள் மட்டும் இல்லை; இங்கு யார் வந்து பார்த்தாலும், “நன்றாக உள்ளது” என்று கூறாமல் சென்றதில்லை.
இது அம்மா அவர்களது கையால் திறக்கப்பட்ட திட்டம் என்பதாலும், எங்கள் பொறுப்புக் காலத்தில் திறக்கப்பட்டது என்பதாலும், எங்கள் பொறுப்புக்காலம் முடியும் வரை பொறுப்புடன் பராமரிக்க உறுதியுடன் உள்ளோம்.
இந்தியாவிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளிலேயே புனே நகரில் முதலாவதாகவும், ஆற்காடு நகராட்சியில் இரண்டாவதாகவும் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது எங்களுக்குப் பெருமை தரும் விஷயம்.
ஆற்காடு நகராட்சி பொறியாளர் நேர்காணலின் அசைபடப் பதிவு:
ஆற்காடு நகராட்சி பொறியாளர் கார்த்திகேயனுடனான நேர்காணலின் முழு அசைபடப் பதிவைக் காண கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
நேர்காணலில் நகராட்சி பொறியாளர் தெரிவித்த தகவல்கள்:
நேர்காணலில் அவர் தெரிவித்த தகவல்களின் முழு வாசகம் வருமாறு:-
ஆற்காடு நகராட்சியில் இத்திட்டம் துவங்குகையில் இதன் செலவு மதிப்பீடு 45 லட்சம் ரூபாய். இதில் பாதியளவுக்கு மக்களது பங்குத் தொகையையும் கொண்டு இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. எங்கள் நகராட்சி அமைந்துள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. அஜய் யாதவ் அவர்கள் இதற்கு தூண்டுகோலாய் இருந்தார். அவரது தூண்டுதல் படி, எங்கள் நகராட்சி நிர்வாக ஆணையர் உள்ளிட்டோர் ஆலோசித்து இத்திட்டத்தைத் துவக்கியுள்ளோம்.
நகரே சுத்தமாக உள்ளது...
இத்திட்டம் துவக்கப்படுவதற்கு முன்பு வரை, காய்கறிக் கழிவுகள் கண்ட இடங்களிலும் கொட்டப்பட்டுக் கிடக்கும். அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்களும் அவற்றை மிதித்து மிதித்துச் சென்று, அவ்விடமே அசிங்கமாகவும், துர்நாற்றத்துடனும் காணப்படும்.
இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தினசரி சந்தைகளைச் சேர்ந்தோர், ஹோட்டல் நிறுவனங்களைச் சேர்ந்தோர், திருமண மண்டபங்களைச் சேர்ந்தோர், பொதுமக்கள் என ஒவ்வொரு தரப்பினரும் தனித்தனியே அழைக்கப்பட்டு - போதுமான விளக்கங்களும், அறிவுரைகளும் வழங்கப்பட்டனர்.
மக்களின் முழு ஒத்துழைப்பு:
இத்திட்டம் துவக்கப்பட்ட பின், ஒவ்வொரு கடைக்கும் Bin கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் அவர்கள் கழிவுகளைப் போடுவர். ப்ளான்ட்டில் செலுத்த இயலாத காகிதங்கள், பாலிதீன் பொருட்களையெல்லாம் அவர்கள் அதில் கொட்டுவதே இல்லை. இப்பழக்கத்தை அவர்களாகவே தமக்குள் உருவாக்கிக் கொண்டுள்ளனர். நாங்கள்தான் சென்று கழிவுகளைப் பிரித்தெடுக்க வேண்டும் என்ற அவசியமே எங்களுக்கு ஏற்படவில்லை. எங்கள் பணியாளர்கள் வாகனங்களில் சென்று, கழிவுகள் நிரப்பப்பட்ட Binகளை எடுத்துக்கொண்டு, மாற்று Binகளை வழங்கி வருவர். இது ஒரு வழமையான நடவடிக்கையாகும்.
குப்பைகளுக்கும், இந்தக் கழிவுகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. சாலைகளிலும், வீடுகளிலும் கூட்டிப் பெருக்கப்படும் குப்பைகளை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில்தான் கொட்டுகின்றனர். அவற்றை இந்தக் கழிவுகளுடன் சேர்ப்பதில்லை.
ஒருவேளை குப்பைகளும், கழிவுகளும் ஒன்றாகக் கலக்கப்பட்டிருந்தால், அவற்றை ப்ளான்ட்டில் கொட்டும்போது, பயோகேஸ் உருவாகாது. அதனால் எந்தப் பயனும் கிடைக்காது என்பதால், அனைவரின் ஒத்துழைப்போடும் கழிவுகள் பிரித்தே பெறப்படுகிறது.
குப்பை வேறு; கழிவு வேறு:
இன்னும் பல நகராட்சிகளில், ”குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கிறார்கள்” என்றே கூறுகின்றனர். அந்த சொல்லே பயன்படுத்தப்படக் கூடாது. குப்பை வேறு; கழிவு வேறு. கழிவுகள் என்பது உணவுக் கழிவுகள். குப்பை என்பது காகிதம், ப்ளாஸ்டிக் போன்றவை. இவ்விரண்டும் ஒன்றல்ல. குப்பைகள் நகராட்சியின் மூலம் தனியாக எடுத்துச் செல்லப்படும். உணவுக் கழிவுகள் தனியாக எடுத்துச் செல்லப்படும்.
இந்த ப்ளான்ட் 3 டன் கொள்ளளவில், 45 லட்சம் ரூபாய் செலவு மதிப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது அது 60 லட்சம் ரூபாயை அடைந்திருக்கலாம்.
இந்த பயோகேஸ் ப்ளான்ட் மூலம் உருவாகும் மின்சாரத்தை, மின்சார வாரியத்தின் மின் வினியோகத்துடன் இணைக்கும் முயற்சியில்தான் எங்களுக்கு ஒரேயோர் அவதி இருந்து வந்தது. “அவ்வாறு இணைக்கப்படும்போது எங்கள் மின்சாரமும், உங்கள் மின்சாரமும் ஒன்றாகக் கடந்து சென்றால் சேதமாகும் வாய்ப்புள்ளது” என்று மின்சார வாரியத்தால் தெரிவிக்கப்பட்டது. அதனாலேயே எங்களுக்கு அவர்களின் அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டது.
பின்னர், புனேயிலிருந்து ஏற்கனவே இத்திட்டத்தை செயல்படுத்தும் நிபுணர்களை வரவழைத்து, மின்வாரியத்தினருடன் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடச் செய்த பிறகு, அவர்களின் அறிவுரைப்படி, பயோகேஸ் மின்சாரத்தை தனி கேபிள் போட்டு, இந்த மின்சாரத்தால் இயங்கும் தெரு விளக்குகளை தனி வண்ணக் குறியீடு கொடுத்து அடையாளப்படுத்தி, இயக்கி வருகிறோம்.
தற்போது 100 தெரு விளக்குகள் எரிகின்றன. மேலும் 150 விளக்குகளை எரியச் செய்வதற்கான அனுமதியைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்குள் அது கிடைத்துவிடும். அவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்று, 250 தெருவிளக்குகளை எரியச் செய்துவிட்டால், அது பெரும் வெற்றியாகும்.
அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியப்படும்:
இத்திட்டத்தைப் பொருத்த வரை, உயரதிகாரிகள், அதிகாரிகள், பொறியாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவரும் ஒற்றுமையுடன் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியப்படும். இதில் யார் ஒருவர் ஒத்துழைப்பு செய்யாவிட்டாலும் பணியில் பாதிப்பு ஏற்படும்.
இதை வெறுமனே வருவாய் ஈட்டுவதற்கான திட்டமாகப் பார்க்காமல், சேவைத் திட்டமாகப் பார்க்க வேண்டும். கழிவுகள் தேக்கத்தால் ஏற்படும் துர்வாடை, சுகாதாரக் கேடுகளைத் தவிர்க்கும் நல்லதொரு சேவைத் திட்டமே இது.
தென் மாவட்டங்களுக்கு காயல்பட்டினம் நகராட்சி முன்னோடியாகத் திகழட்டும்!
இந்தப் பகுதியில் நாங்கள் நல்ல முறையில் செய்து வருகிறோம். உங்கள் தென்பகுதியிலும் சிறிய நகராட்சியான நீங்கள் நல்ல முறையில் இத்திட்டத்தை செயல்படுத்தினால், சுற்றுவட்டாரங்களிலுள்ள பெரிய நகராட்சிகளிலும் இதைச் செய்ய முன்வருவர்.
தற்போது, ஆற்காடு பயோகேஸ் திட்டம் மூலம் 4 ட்ரான்ஸ்ஃபார்மர்களுக்கு மின் வினியோகிக்கப்படுகிறது. எனவே, அவற்றுக்கு இதுவரை செலுத்தப்பட்டு வந்த மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது.
மின் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின் இந்த பயோகேஸ் திட்டத்தின் பயன் பன்மடங்காக இருக்கும்.
உணவுக் கழிவுகளிலிருந்து மின்சாரம் பெறப்பட்ட பின்னர், அதிலிருந்து வெளியாகும் திரவக் கழிவை வேளாண்மைக்குப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். ஆற்காடு பயோகேஸ் ப்ளான்ட் திட்டத்தில், அதே தண்ணீர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் கழிவுநீர் வெளியாவதில்லை.
தொலைவிலிருந்தால் செலவும், அவதியும் அதிகரிக்கும்:
பயோகேஸ் ப்ளான்ட்டிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தெருவிளக்குகளுக்குப் பயன்படுத்துவதானால், ப்ளான்ட்டும், வினியோகமும் மிக அருகில் இருப்பதே நல்லது. ட்ரான்ஸ்ஃபார்மரிலிருந்து 100 மீட்டருக்குள் வினியோகம் துவங்குமானால், இத்திட்டத்திற்கான பராமரிப்புச் செலவு குறையும். இல்லையெனில், கேபிள் லைன் இழுக்க இழுக்க அதற்கான செலவும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அருகில் இருந்தால், 20 லட்சம் செலவாகும் இடத்தில் 10 லட்சம் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
அது மட்டுமின்றி, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இது அமைந்தால், பொருட்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். அல்லாமல், தொலைவில் அமைந்தால், கேபிள்கள் திருட்டுப் போகலாம். அதனால் மின் வினியோகம் பாதிக்கப்படும்.
கள உதவி & ஒளிப்பதிவில் உதவி:
ஃபுவைஸா ஷேக்
பயோகேஸ் திட்டம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|