காயல்பட்டினம் நகர்மன்றத்தில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டம், நடப்பு நகர்மன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக - துவங்கி இருபதே நிமிடங்களில் நிறைவுற்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 2014 டிசம்பர் மாதத்திற்கான சாதாரண கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகராட்சி அலுவலக வெளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் நடைபெற்றது.
பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில், 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தவிர இதர உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
கூட்டப் பொருட்கள்:
இக்கூட்டத்தில், 44 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் இயற்றப்படவிருந்தன:-
அனைத்து தீர்மானங்களும் பாஸ்!
கூட்டப் பொருட்களை நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் வாசிக்கத் துவங்கியபோது, தனவந்தர் ஒருவரால் நகராட்சிக்கு அளிக்கப்பட்ட புல எண் 278க்கு அணுகுசாலை அமைத்து, சுற்றுச்சுவர் எழுப்புவது குறித்தும்,
நகர்மன்றக் கூட்டங்களை வீடியோ பதிவு செய்தல், கூட்டங்களில் பார்வையாளர்கள் பங்கேற்பு ஆகியவற்றைத் தடை செய்யக் கோரும் மனுவை கூட்டப் பொருளில் சேர்க்காதது குறித்தும் - 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
நகரில் சேரும் குப்பைகளைக் கொட்டுவதற்காக தனவந்தரிடமிருந்து பெறப்பட்ட புல எண் 278இல், மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி Buffer Zone அமைத்த பின்னர் அணுகுசாலை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைச் செய்தால் மட்டுமே மக்கள் பணம் வீணாகாமல் காக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் கூறினார்.
தமது மேற்படி 2 கோரிக்கைகளையும் நடப்பு கூட்டத்தில் மேசைப்பொருளாகக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூட்டப்பொருள் வாசிக்கப்படாமலும், வாக்குவாதம் முடிவுக்கு வராமலும் நேரம் கடந்துகொண்டே சென்ற நிலையில், மக்கள் நலன் கருதி அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், அத்துடன் கூட்டம் முடிவுற்றதாகவும் அறிவித்துவிட்டு, நகர்மன்றத் தலைவர் இருக்கையை விட்டும் எழுந்து சென்றுவிட்டார்.
பின்னர், துணைத்தலைவரை தலைவராகக் கொண்டு கூட்டத்தை நடத்தலாம் என்றும், அதற்கான வழிமுறைகள் குறித்து உயரதிகாரிகளிடம் விசாரிக்குமாறும் ஆணையரிடம் உறுப்பினர்கள் கேட்டனர்.
தொலைபேசி உரையாடலுக்குப் பின் உறுப்பினர்களிடம் பேசிய ஆணையர், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக நகர்மன்றத் தலைவர் கூறிச் சென்றுவிட்டதால், மேற்கொண்டு கூட்டத்தைத் தொடர வாய்ப்பில்லை என்று கூறிச் சென்றுவிட்டார்.
ஆணையர் கருத்து:
இதுகுறித்து, ஆணையரை காயல்பட்டணம்.காம் அவரது அறையில் சந்தித்துக் கேட்டபோது, நகர்மன்றத் தலைவர் கூட்டம் முடிந்துவிட்டதாகச் சொல்லிவிட்டதால் அதுவே முடிவு என்று கூறினார்.
இவ்வாறாக, டிசம்பர் மாத நகர்மன்றக் கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன. இக்கூட்டத்தில் சுமார் 20 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
அசைபடப் பதிவு:
இக்கூட்டத்தின் முழு அசைபடப்பதிவைக் காண கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
கள உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முந்தைய (நவம்பர் 2014) கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |