காயல்பட்டினம் சித்தன்தெருவைச் சேர்ந்த ஸூஃபீ ஹுஸைன் என்பவரின் மகன் அபூபக்கர் ஸித்தீக் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த - மார்பிள் கல் வணிகம் செய்து வரும் ஒருவர் தன் மனைவியுடன் குடியிருந்து வருகிறார்.
இன்று 20.30 மணியளவில், அவர்கள் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி பயங்கர ஒலியுடன் வெடித்துச் சிதறியதில், அவ்விருவருக்கும் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதிக காயமுற்ற மனைவியை அவர் உடனடியாக தூக்கிக்கொண்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றதாகவும் தெரிகிறது.
தொலைக்காட்சிப் பெட்டி வெடித்ததில், அதிலிருந்த உட்பாகங்கள் எரிந்து சிதறி, அருகிலிருந்த சுவர் கரும்படலமாகக் காட்சியளித்தது. சுற்றில் தொங்கிக்கொண்டிருந்த உடைகளும் எரிந்த நிலையில் காணப்பட்டது.
இவ்விபத்து குறித்து, அக்கம்பக்கத்திலுள்ளோர் தகவல் தெரிவித்ததன் பேரில், திருச்செந்தூர் தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் வந்து, எரிந்துகொண்டிருந்த கருவியை நீரூற்றி அணைத்துச் சென்றனர்.
அதே நேரத்தில், திருச்செந்தூர் டி.எஸ்.பி. எஸ்.கோவிந்தராஜ், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியம், துணை ஆய்வாளர்களான ஷ்யாம் சுந்தர், கணபதி ஆகியோர் நிகழ்விடம் விரைந்து வந்து விசாரித்ததில், வீட்டில் குடியிருந்த ஆண் பெயர் கோஷபாய் பிஸ்வாஸ் என்று தெரிகிறது. கூடுதல் விபரங்கள் குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
தொலைக்காட்சியில் நீண்ட நேரம் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்ததில், அது சூடேறி வெடித்துச் சிதறியிருக்கலாம் என்று உணரப்படுகிறது. இந்நிகழ்வு காரணமாக அப்பகுதி மக்கள் திரளால் பரபரப்புடன் காணப்பட்டது.
தகவல் உதவி:
தமீம் (சித்தன் தெரு) |