காயல்பட்டினம் 01ஆவது வார்டுக்குட்பட்ட கடையக்குடி (கொம்புத்துறை) பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் எதிர்புறத்தில் குடிநீர் வினியோகக் குழாய் அமைந்துள்ள இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்ததை, இம்மாதம் 24ஆம் நாளன்று காண முடிந்தது.
சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர், புதிதாகக் கட்டப்பட்டு வரும் தன் வீட்டிற்குக் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கடந்த அக்டோபர் மாதம் டெப்பாசிட் - வைப்புத்தொகை கட்டியதாகத் தெரிகிறது. இருப்பினும், நகராட்சி அலுவலர்கள் கள ஆய்வு செய்து புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கான சென்டேஜ் தொகையைக் கட்டச் சொல்லும் அனுமதியை அதுவரை வழங்கவில்லை என்றும் தெரிகிறது.
அனுமதி பெறாமலேயே, அவ்விடத்தில் 3 பேர் பணி செய்ததும், மெய்ன் லைன் மூலம் குடிநீர் இணைப்பு கொடுக்க முயற்சித்ததில், அக்குழாய் உடைபட்டதும், அதன் காரணமாக, அப்பகுதி மக்களுக்கு இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டதும் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, நகராட்சியின் முறையான அனுமதியைப் பெறாமல் அப்பகுதியில் சாலையைத் தோண்டி குடிநீர் இணைப்பு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், விசாரிப்பதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயல்பட்டினம் நகராட்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. அவற்றைத் தாண்டி, நூற்றுக்கணக்கான இணைப்புகள் அதிகாரப்பூர்வமற்றவையாகவும், பல இணைப்புகள் - வீடுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கும் வினியோகக் குழாய்க்குப் பகரமாக, நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குத் தண்ணீர் அனுப்பப்படும் மெய்ன் லைன் இணைப்புகளில் சட்டத்திற்குப் புறம்பாக தண்ணீர் பெறும் இணைப்புகளாகவும் பல ஆண்டுகளாக முறையற்ற வகையில் இருந்து வருகிறது. இதனை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சில மாதங்களுக்கு முன் காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கிய அறிக்கையும் உறுதி செய்கிறது.
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இதுபோன்ற முறையற்ற பல இணைப்புகள் - நகராட்சி அதிகாரிகளுக்குத் தெரிந்தே வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வு குறித்து, 01ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஐ.அஷ்ரஃபிடம் காயல்பட்டணம்.காம் வினவியபோது, சம்பந்தப்பட்ட வீட்டினர் முறையாக பணம் செலுத்தி, புதிய குடிநீர் இணைப்பு பெற அனுமதி பெற்றுள்ளதாகவும், குடிநீர் இணைப்பிற்காக பள்ளம் தோண்டியபோது வினியோகக் குழாயில் எதிர்பாராதவிதமாக பழுது ஏற்பட்டுள்ளதாகவும், விரைவாக அது சரிசெய்யப்பட்டதாகவும் கூறினார்.
காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸாரிடம் வினவுகையில், தான் ஒரு வார காலமாக விடுமுறையில் இருந்ததாகவும், அக்காலத்தில் பாஸ்கர் என்ற ஊழியர் பொறுப்பிலிருந்ததாகவும் கூறினார்.
நகராட்சிக்குத் தெரியாமலேயே இந்நிகழ்வு நடைபெற்றுள்ளதாகவும், தற்போது அது கண்டறியப்பட்டு நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறிய அவர், இதில் தொடர்புடைய ப்ளம்பர் பணியாட்களும், வீட்டு உரிமையாளரும் மன்னிப்புக் கேட்டு கடிதம் தருவதாகக் கூறியிருப்பதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மெய்ன் லைன் உடைப்பு தற்போது சரி செய்யப்பட்டுவிட்டதாக அவர் மேலும் கூறினார்.
மெய்ன் லைன் மூலமாக இணைப்பு பெற முயற்சித்தமைக்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜிடம் வினவியபோது, நகராட்சியில் தனக்குக் கீழுள்ள அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்நிகழ்வு தொடர்பானவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |