காயல்பட்டினத்தில் இது திருமண சீஸன். பள்ளிவாசல்கள், திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்கள் ஒருபுறமிருக்க, வழமை போல நகரின் பல பகுதிகளில் சாலைகளை அடைத்து பந்தல் போட்டு திருமணம் நடத்தும் வழமையும் இருந்தே வருகிறது.
இப்பழக்கம், நகர மக்களுள் பெரும்பான்மையோரால் சகித்துக்கொள்ளப்பட்டதுதான் என்றாலும், இவற்றால் ஆதங்கப்படுவோரும் இருக்கவே செய்கின்றனர்.
சாலைகளில் பந்தல் போட்டு திருமணம் நடத்துவோர் பலர், குறைந்தபட்சம் ஒரு ஆட்டோ அல்லது இரு சக்கர வாகனமேனும் கடந்து செல்ல பக்கவாட்டில் பாதை விட்டிருப்பர். அதுபோல, திருமண நிகழ்ச்சிகள் நிறைவுற்ற உடன், பணியாட்களைத் துரிதப்படுத்தி சாலையை அடைத்திருக்கும் பந்தல் கீற்றை உடனடியாக அகற்றி, போக்குவரத்துக்கு வழிவிடுவர். ஆனால், சில இடங்களில் இந்த நடைமுறையும் மீறப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் குறுக்கத் தெரு ஒரு குறுகிய தெருவாகும். வாகனங்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் பல்வேறு தேவைகளுக்காக இந்த முக்கிய தெருவைக் கடந்தே செல்ல வேண்டிய நிலையுள்ளது. இன்று (டிசம்பர் 31 புதன்கிழமை) இத்தெருவின் மேற்கு - கிழக்குத் திசைகளிலுள்ள இரு முனைகளிலும் திருமணப் பந்தல் அமைத்து, சாலையும் தென்னங்கீற்றுகளால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. ஒரேயொருவர் மட்டும் கடந்து செல்லும் வகையில் சிறிய பாதை விடப்பட்டுள்ளது.
எந்த நிகழ்ச்சியும் நடைபெறாத நிலையிலும், 13.00 மணி வரை - சாலையை அடைத்த நிலையில் இப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவ்வழியே கடந்து செல்ல வந்த வாகன ஓட்டிகள், திருமண வீட்டாரை வசைபாடியவர்களாக வேறு பாதையில் திரும்பிச் சென்றனர்.
பந்தல் கோளாறு குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |