கேரளாவிலிருந்து வருகை தந்த செய்யித் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙளுக்கு, கன்னியாகுமரி காயல்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மஹல்லா ஜமாஅத்தினர் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்தியாவில் கல்வி காவிமயமாக்கப்படுவதையும், கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதையும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வையும் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 30.12.2014 அன்று காயல்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுவதற்காக - மலேஷிய நாட்டிலுள்ள இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர் பேரவை முன்னாள் இயக்குநரும், இந்திய சமய நல்லிணக்கப் பேரவையின் தலைவரும், கல்வியாளருமான பானக்காடு செய்யித் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் கேரள மாநிலத்திலிருந்து வருகை தந்திருந்தார்.
துவக்கமாக கன்னியாகுமரி சென்ற அவருக்கு அங்கு கட்சியின் சார்பிலும், மஹல்லா ஜமாஅத்தினர் சார்பிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
30.12.2014 செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் வந்தடைந்த அவருக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மஹல்லா ஜமாஅத்தினர் சார்பில், இளம் மாணவர்கள் தஃப்ஸ் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அவருக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து, வள்ளல் சீதக்காதி திடலில், கட்சியின் பிறைக்கொடியை அவர் ஏற்றிவைத்தார்.
அன்று 19.00 மணியளவில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மறுநாள் - 31.12.2014 புதன்கிழமையன்று, காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபைக்குச் சென்ற அவருக்கு, மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வரும் - தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ துஆ இறைஞ்சினார்.
தொடர்ந்து, ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிறுவனத்திற்குச் சென்ற அவருக்கு, அந்நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று உரையாற்றினார். அண்மையில் நடைபெற்ற - தமிழகம் தழுவிய கிராஅத்துல் குர்ஆன் போட்டியில் பரிசு பெற்ற மாணவரைப் பாராட்டி, சிறப்பு விருந்தினர் சால்வை அணிவித்தார்.
சிறப்பு விருந்தினருடன், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோரும் உரையாற்றினர்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், அதன் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் - அப்பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு தரமான பள்ளிக்கல்வியை வழங்கும் நோக்குடன் - ரூபாய் 50 லட்சம் செலவு மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பள்ளிக்கூடத்தின் அஸ்திவாரம் தவிர்த்த கட்டிடப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி, உரையாற்றினார்.
இப்பள்ளியின் கட்டுமானத்திற்காக, காயல்பட்டினத்திலிருந்து 25 லட்சம் ரூபாயும், தூத்துக்குடி மாவட்டத்தின் இதர பகுதிகளிலிருந்து 25 லட்சம் ரூபாயும் திரட்டிக் கொடுப்பதென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்னர், திருநெல்வேலி பேட்டை நகரில் உள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனர் காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்துப் பேசினார்.
இவ்வனைத்து நிகழ்ச்சிகளிலும், கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட பொருளாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் மாவட்ட - நகர நிர்வாகிகளான ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், ஏ.கே.மஹ்மூத் சுலைமான், எம்.எச்.அப்துல் வாஹித், எம்.இசட்.சித்தீக், பெத்தப்பா சுல்தான், இப்றாஹீம் இப்னு அத்ஹம், எம்.எல்.ஷேக்னா லெப்பை, அரபி ஷாஹுல் ஹமீத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறாக, கேரள தலைவர் செய்யித் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் அவர்களின் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
படங்களில் உதவி:
S.A.இப்றாஹீம் மக்கீ
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |