மக்களின் உடல்நலனைப் பாதிக்கும் DCW ஆலையை இழுத்து மூடக் கோரியும், ஆலை குறித்து தமிழக சட்டப்பேரவையில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யக் கோரியும், இன்று (டிசம்பர் 30) ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
திட்டமிட்ட படி, இன்று 11.00 மணியளவில், காயல்பட்டினம் அஞ்சல் நிலையம் அருகில் - வள்ளல் சீதக்காதி திடலில் மக்கள் திரண்டனர். துவக்கமாக, DCW ஆலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்களைக் கண்டித்தும், அந்த ஆலையை இழுத்து மூடக் கோரியும் - திரண்டிருந்த பொதுமக்கள் ஒரே குரலில் முழக்கங்களை எழுப்பினர். கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அப்துர்ரஹ்மான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு, எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் மாவட்ட பொறுப்பு தலைவர் மவ்லவீ அஷ்ரஃப் அலீ ஃபைஜீ தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் அறிமுகவுரையாற்றினார்.
‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், அதன் நிர்வாகி முகிலன், எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவீ, கூடங்குளம் போராட்டக் குழு மகளிரணி நிர்வாகி சுந்தரம்மாள், ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் – பொதுமக்களையும், சுற்றுச்சூழலையும் பாதித்து வரும் DCW ஆலைக்கெதிராக கண்டன உரையாற்றினர்.
பின்னர், DCW ஆலையை நோக்கி முற்றுகைப் பேரணி கண்டன முழக்கங்களோடு துவங்கியது. காயல்பட்டினம் பெரிய தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தபோது, திருச்செந்தூர் டி.எஸ்.பி. எஸ்.கோவிந்தராஜ் தலைமையில், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், ஆத்தூர் ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோரடங்கிய காவலர்கள் DCW ஆலையை முற்றுகையிட பேரணியாகச் சென்ற பொதுமக்களைக் கைது செய்தனர். சுமார் 25 வாகனங்களில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் தனி வாகனங்களில் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பெண்கள் உட்பட மொத்தம் 708 பேர் கைது செய்யப்பட்டதாகவும், ஆறுமுகநேரியிலுள்ள வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், ரத்னா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், பேச்சாளர்களும், காயல்பட்டினம் நகர பிரமுகர்களும் திருமண மண்டபங்களிலும் எழுச்சியுரையாற்றியதாகவும், 17.10 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் எஸ்.டி.பீ.ஐ. மாநில செய்தி தொடர்பாளர் உஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் உயிர் - உடல்நலனுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையை இழுத்து மூட வேண்டும் என்றும், அந்த ஆலை குறித்து, தமிழக சட்டமன்றத்தில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இக்கோரிக்கைகள் மீது விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்காவிடில், நாட்டிலுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் திரட்டி - தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
DCW ஆலை முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு, எவ்வித வேண்டுகோளும் விடுக்கப்படாத நிலையிலும் - காயல்பட்டினம் பிரதான வீதி, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார், பேருந்து நிலைய வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போராட்டத்தில் எஸ்.டி.பீ.ஐ. மாநில செயற்குழு உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான உஸ்மான் கான், நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாஃபர் உஸ்மானீ, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜுல்ஃபிகார் அலீ, காயல்பட்டினம ்நகர தலைவர் கிரசண்ட் ஷேக், செயலாளர் அப்துர்ரஹ்மான் உள்ளிட்ட - கட்சியின் நிர்வாகிகள், அங்கத்தினர், காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கள உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
படங்களுள் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
[கூடுதல் படங்களுடன், விரிவான தகவல்கள் விரைவில்...]
எஸ்.டி.பீ.ஐ. தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |