காயல்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வரும் கே.ஆறுமுகம் என்பவர் இன்று அதிகாலையில் நகராட்சி துப்புரவுப் பணியிலிருக்கையில், அவரை காயல்பட்டினம் புறவழிச்சாலையில் வசித்து வரும் சங்கரன் என்பவர் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், அவரைக் கூட்டிச் சென்றுவிட்டதாகவும் கூறி, நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் துப்புரவு வாகனங்களுடன் காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கி முனையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களுடன், ஆதித்தமிழர் பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் செ.அருந்ததி அரசு, மாவட்டச் செயலாளர் முருகேசன், மாணவரணி செயலாளர் செ.சந்தனம், ஒன்றிய செயலாளர் வசந்த், நகரச் செயலாளர் வள்ளுவன், சிவக்குமார், பீ.செல்வம் உட்பட அவ்வமைப்பின் அங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவலறிந்து அங்கு வந்த ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின், மாயமானதாகக் கூறப்பட்ட கே.ஆறுமுகம் என்பவரை அழைத்து வந்தனர்.
எதிராளி மீது நடவடிக்கை எடுக்க முறைப்படி காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என காவல்துறையினர் அப்போது கூறியதையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
கூடுதல் தகவல்:
M.ஜஹாங்கீர் |