காயல்பட்டினம் சித்தன்தெருவைச் சேர்ந்த ஸூஃபீ ஹுஸைன் என்பவரின் மகன் அபூபக்கர் ஸித்தீக் என்பவருக்குச் சொந்தமான வீட்டில், மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவைச் சேர்ந்த - மார்பிள் கல் வணிகம் செய்து வரும் ஒருவர் தன் மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார்.
இம்மாதம் 01ஆம் நாள் வியாழக்கிழமையன்று 20.30 மணியளவில், அவர்கள் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி பயங்கர ஒலியுடன் வெடித்துச் சிதறியதில், அவ்விருவருக்கும் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதிக காயமுற்ற மனைவியை அவர் உடனடியாக தூக்கிக்கொண்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றதாகவும் தெரிகிறது.
அக்கம்பக்கத்திலுள்ளோர் தகவல் தெரிவித்ததன் பேரில், திருச்செந்தூர் தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் வந்து, எரிந்துகொண்டிருந்த கருவியை நீரூற்றி அணைத்துச் சென்றனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மறுநாள் வெள்ளிக்கிழமை 13.30 மணியளவில், மாவட்ட தடய அறிவியல் துறை இணை இயக்குநர் விஜயலதா நிகழ்விடம் வந்து, இவ்விபத்தின் தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டார்.
இவ்வாறிருக்க, நேற்று (ஜனவரி 06) - தீக்காயமுற்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, இன்று 13.00 மணியளவில், அவரது கணவர் கோஷபர் பிஸ்வாஸும் உயிரிழந்துவிட்டார். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பின், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் உதவி:
S.A.இப்றாஹீம் மக்கீ
மற்றும்
‘FM ஸ்டோர்’ மஹ்மூத் லெப்பை
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 13:40 / 07.01.2015] |