காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW ஆலையை மூடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி, கடந்த 2014 டிசம்பர் மாதம் 30ஆம் நாளன்று காயல்பட்டினத்தில் SDPI கட்சியினர் DCW ஆலை முற்றுகை போராட்டத்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 07ஆம் நாள் புதன்கிழமை (நேற்று) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அருகே பல வருடங்களாக தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW) என்ற அமில ஆலை செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையானது பாதரசத்தை அடிப்படையாகக் கொண்டு - காஸ்டிக் சோடா மற்றும் பி.வி.சி, சி.பி.வி.சி போன்ற பல்வேறு பொருட்களை முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி சர்வதேச, இந்திய விதிமுறைகளை மீறி உற்பத்தி செய்து வருகின்றது. மேலும் தற்போது அரசின் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக தனது ஆலையை விரிவாக்கம் செய்து வருகின்றது.
இவ்வாலைக்குள் தேக்கி வைக்கப்படும் டிரை குளோரோ எதிலின், அயன் ஆக்ஸைடு, காட்மியம் போன்ற செந்நிற ஆபத்தான ரசாயன கழிவுகளை ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆலைக்கு அருகே உள்ள காயல்பட்டணம் கடலில் இரகசியமாக கலக்கின்றனர்.
மேற்கண்ட ஆபத்தான உணவுகளை வாழும் மீன்கள் உணவாக உட்கொள்கின்றன. ஆலையை சுற்றியுள்ள காயல்பட்டணம், ஆறுமுகநேரி, புன்னக்காயல், சேர்ந்தமங்கலம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிக மோசமான புற்றுநோய்கள், சுவாசக் கோளாறுகள், மன நோய்கள் மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதை கண்டித்து 30.12.2014 அன்று DCW ஆலையை மூட வலியுறுத்தி மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 700-க்கும் மேற்பட்ட நபர்கள் கைதாகினர்.
DCW ஆலையை மூட வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து SDPI கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் M. அஸரப் அலி பைஜி அவர்கள் தலைமையில் காயல்பட்டினம் ஊர் மக்கள் மற்றும் கட்சியினர், நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
SDPI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |