காயல்பட்டினம் சித்தன்தெருவைச் சேர்ந்த ஸூஃபீ ஹுஸைன் என்பவரின் மகன் அபூபக்கர் ஸித்தீக் என்பவருக்குச் சொந்தமான வீட்டில், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் - ஜலங்கி நகரைச் சேர்ந்த குஷ்பர் பிஸ்வாஸ் (வயது 28), தன் மனைவி ஒஜீஃபா (வயது 25) உடன் குடியிருந்து வந்தார்.
இம்மாதம் 01ஆம் நாள் வியாழக்கிழமையன்று 20.30 மணியளவில், அவர்கள் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி பயங்கர ஒலியுடன் வெடித்துச் சிதறியதில், அவ்விருவருக்கும் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதிக காயமுற்ற மனைவியை அவர் உடனடியாக தூக்கிக்கொண்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றதாகவும் தெரிகிறது.
அக்கம்பக்கத்திலுள்ளோர் தகவல் தெரிவித்ததன் பேரில், திருச்செந்தூர் தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் வந்து, எரிந்துகொண்டிருந்த கருவியை நீரூற்றி அணைத்துச் சென்றனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மறுநாள் வெள்ளிக்கிழமை 13.30 மணியளவில், மாவட்ட தடய அறிவியல் துறை இணை இயக்குநர் விஜயலதா நிகழ்விடம் வந்து, இவ்விபத்தின் தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டார்.
விபத்திற்கான காரணம் உறுதியாகக் கண்டறியப்படாவிட்டாலும், சமையல் கேஸ் கசிவு காரணமாகவோ, மின் கசிவு காரணமாகவோ இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறிருக்க, தீக்காயமுற்ற பெண் ஒஜீஃபா சிகிச்சை பலனின்றி, இம்மாதம் 06ஆம் நாளன்று காலமானார். அவரது உடல், மறுநாள் அஸ்ர் தொழுகைக்குப் பின் காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது கணவர் குஷ்பர் பிஸ்வாஸ் 07ஆம் நாளன்று மதியம் உயிரிழந்தார். அவரது உடல், நேற்று (ஜனவரி 08) அஸ்ர் தொழுகைக்குப் பின், குத்பா பெரிய பள்ளி மையவாடியில், மனைவியின் மண்ணறைக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்விரு நல்லடக்க நிகழ்ச்சிகளிலும், மரணித்தவர்களின் குடும்பத்தினர், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பெரிய குத்பா பள்ளி ஜமாஅத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். மரணித்த இருவருக்காகவும், கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
இவ்விருவரும் தீக்காயமுற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது முதல், மரணித்த அவ்விருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டு, காயல்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாநகர இளைஞரணி செயலாளர் பாஷா தலைமையில், அக்கட்சியினர் முழுமையாக நின்று களப்பணியாற்றினர்.
காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியில், இருவரது உடல்களும் நல்லடக்கம் செய்யப்படுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை தலைமையில் அவ்வமைப்பினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்களுள் உதவி:
S.A.இப்றாஹீம் மக்கீ
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |