மருத்துவ விழிப்புணர்வுத் துறையில் புதிய பாதையில் பயணிப்பதென கத்தர் காயல் நல மன்றத்தினரால் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட ஒன்றுகூடலில் தீர்மான முன்வடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கத்தர் காயல் நல மன்றத்தின் அங்கத்தினர் ஏராளமானோர் விடுமுறையில் தாயகம் வந்ததையொட்டி, சிறப்பு கலந்தாலோசனைக் கூட்டம், மன்ற செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் தலைமையில், மூத்த உறுப்பினர் கே.வி.ஏ.டீ.கபீர் முன்னிலையில், காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவிலுள்ள கண்ணாடி ஆலிம் இல்லத்தின் முதல் தளத்தில், இம்மாதம் 03ஆம் நாள் சனிக்கிழமை நண்பகல் 11.00 மணியளவில் நடைபெற்றது.
கிராஅத்துடன் துவங்கிய இக்கூட்டத்தில், மன்றத்தின் இதுநாள் வரையிலான நடவடிக்கைகள் - சேவைத் திட்டங்கள், வருங்கால செயல்திட்டங்கள், காயல்பட்டினம் துளிர் பள்ளிக்கு உதவுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கத்தர் காயல் நல மன்ற பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், எழுத்தாளர் சாளை பஷீர் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நகர் மற்றும் நகர மக்கள் நலன் கருதி உலக காயல் நல மன்றங்கள் மேற்கொண்டு வரும் சேவை நடவடிக்கைகளைப் புகழ்ந்துரைத்த அவர்கள், மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரே திசையிலேயே கொண்டு செல்வதைத் தவிர்த்து, பயனுள்ள புதுப்புது அம்சங்களையும் உள்ளெடுத்து செயல்படுத்த வேண்டும் என்று கூறினர்.
இதுகாலம் வரை நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் அனைத்துமே ஆங்கில மருத்துவ வழியில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், பாரம்பரிய மருத்துவமான தமிழ் சித்த மருத்துவம், நாட்டு வைத்தியம், ஹோமியோ, அக்குபஞ்சர், அக்குப்ரஷர் உள்ளிட்ட துறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், இதனால் பல லட்சங்கள் செலவழித்து அல்லல் படுவதைத் தவிர்த்து, மிகக் குறைந்த செலவில் நோயாளிகள் பயன்பெற இயலும் என்றும் அவர்கள் கூறினர்.
“நோய் வந்த பின் உதவுவதை விட வருமுன் காப்பதே சிறந்தது” என்ற முழக்கத்தின் அடிப்படையிலேயே கத்தர் காயல் நல மன்றம் இதுகாலம் வரை செயல்திட்டங்களைத் தீட்டி சேவையாற்றி வருவதாகவும், அந்த வகையில் இப்புதிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, மன்றத்தின் முழக்கத்திற்கு வலுவூட்ட முனையலாம் என்றும் கூறிய அவர்கள், துவக்கத்தில் சிறிய அளவில் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செய்யலாம் என்றும், பின்னர் அனைத்துலக காயல் நல மன்றங்களது ஆர்வத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்கலாம் என்றும் கூறினர்.
அஞ்சறைப் பெட்டியின் அவசியம், இயற்கை மருத்துவ முகாம்கள், பாரம்பரிய உணவுக் கண்காட்சிகள், இயற்கை வாழ்வியலை வலியுறுத்தும் செயல்திட்டங்கள், இவையனைத்தையும் உள்ளடக்கிய நூல் கண்காட்சி - விற்பனை முகாம்களை ஒவ்வொன்றாகவோ, ஒரே நேரத்தில் மொத்தமாகவோ - காலத்தையும், சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு நடத்தலாம் என அவர்கள் மேலும் கூறினர்.
இக்கருத்துக்களை கருத்தளவில் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய பங்கேற்பாளர்கள், இவ்வம்சங்களில் பொதுமக்களை முழு ஈடுபாட்டுடன் இயங்கச் செய்திடும் நோக்குடன், அவர்களுக்கு மூலிகைச் செடிகள், சிறுதானிய செடிகள், மாடித் தோட்டத்திற்குத் தேவையான விதைகள் என இவையனைத்தையும் ரசாயணம் கலக்காத நாட்டுப் பொருட்களாக (ஆர்கானிக் முறையில்) வழங்கலாம் என கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துக் கூறினர்.
நிறைவுரையாற்றிய கூட்டத் தலைவர் ‘கவிமகன்’ காதர், சிறப்பழைப்பாளர்களின் இவ்வரிய கருத்துக்கள் தற்காலத்தில் மிகவும் அவசியமாகக் கருத்திற்கொள்ளத்தக்கது என்றும், நடப்பு கூட்டத்தில் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லையென்பதால், இவ்வம்சத்தை தீர்மான முன்வடிவமாக மட்டும் எடுத்துக்கொண்டு, கத்தரில் அடுத்து நடைபெறும் முறைப்படியான கலந்தாலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
அதற்கு முன்பாக - இந்நிகழ்ச்சிகளை எவ்வாறெல்லாம் வடிவமைத்து நடத்தலாம் என்பது குறித்து ஒரு மாதிரி செயல்திட்டத்தை சிறப்பழைப்பாளர்கள் இருவரும் உருவாக்கித் தருமாறு அவர் கேட்டுக்கொள்ள, அவர்கள் அதற்கு ஒப்புதலளித்தனர்.
புது மணவாழ்வு காணும் கத்தர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர்களான
(1) பொக்கு ஹுஸைன் ஹல்லாஜ்
(2) தாவூத்
(3) மஹ்மூத் மானாத்தம்பி
ஆகியோருக்கு இக்கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களது நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், கத்தர் காயல் நல மன்றத்தின் சுமார் 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும், மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 14:42 / 10.01.2015] |