காயல்பட்டினம் 07ஆவது வார்டுக்குட்பட்ட கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுக்கும் முயற்சி நகராட்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியின் 7வது வார்டு பகுதியில் அனுமதி பெறப்படாத கட்டிடத்திற்கு, அரசு சட்ட விதிகளுக்குப் புறம்பாக நகராட்சியால் வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அக்கட்டிடத்தின் உரிமையாளர் ஏ.ராணி என்பவர் 07ஆவது வார்டு உறுப்பினரின் மனைவி என்றும், இந்த வரி விதிப்பைப் பெற்றிட நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியிருந்ததாகவும், நகராட்சியின் 05ஆவது வார்டு உறுப்பினர் எம். ஜஹாங்கிர் - மாவட்ட ஆட்சியரிடம் 27.01.2014 அன்று, மாவட்ட ஆட்சியகரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தில் மனு அளித்திருந்தார்.
அக்கோரிக்கை மீதான நடவடிக்கையாக, மனுதாரர் கோரிய இடங்களை வருவாய் ஆய்வாளர் நேரடி ஆய்வு செய்து வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இது போன்று - நகராட்சியின் வரிவிதிப்பு அனுமதி பெறப்படாமல் இப்பகுதியில் வீடுகள் ஏராளமாக உள்ளன என தெரிகிறது. வீட்டு வரி விதிப்பு பெறும் முயற்சியும் தடுக்கப்பட்டு, அதனால் குடிநீர் இணைப்பு பெறுவதும் இயலாமல் போனதையடுத்து, அந்த வீடுகளைச் சேர்ந்தவர்கள், நகராட்சி குடிநீர் வினியோகப் பொறுப்பிலிருக்கும் அலுவலரின் துணையுடன் இன்று தம் வீடுகளுக்கு முறைகேடாகக் குடிநீர் இணைப்பு பெற முயற்சி மேற்கொண்டதாகத் தெரிகிறது.
வீட்டிலிருந்து சாலையை நோக்கித் தோண்ட முற்பட்டபோது, நகராட்சி குடிநீர் குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களைத் தடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, பொருத்துநர் நிஸாரிடம் காயல்பட்டணம்.காம் வினவியபோது, கற்புடையார்பள்ளி வட்டத்தில் முறைகேடாகக் குடிநீர் இணைப்பு பெற சிலர் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், சாலை வரை பள்ளம் தோண்டிய நிலையில் குடிநீர் வினியோகக் குழாயைத் தொடுவதற்கு முன்பாக அவர்களின் முயற்சி தடுக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
பள்ளம் தோண்டிய பணியாளர்கள், தொடர்புடைய வீட்டினரின் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், வரும் திங்கட்கிழமையன்று அவர்கள் மீது நகராட்சி மூலமோ அல்லது காவல்துறை மூலமோ நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முறைகேடாகக் குடிநீர் இணைப்பு பெற முயற்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 5:00 pm / 10.01.2015] |