காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெரு - ரெட் ஸ்டார் சங்கம் மற்றும் மாட்டுக்குளம் (சுலைமான் நகர்) முனையில் பல நாட்களாக கண்டுகொள்ளப்படாமலிருந்த குடிநீர் குழாய் உடைப்பு, பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளையடுத்து, நகராட்சி நிர்வாகத்தால் அவசர கதியில் சரிசெய்யப்பட்டது. பின்னர், மீண்டும் மீண்டும் உடைப்பேற்படுவதும், நகராட்சியால் தற்காலிகமாக சரி செய்யப்படுவதும் வாடிக்கையாகிப் போனது.
இந்த தொடர் பழுது குறித்து, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் - நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸாரிடம் வினவியபோது, தொழில்நுட்ப ரீதியாக சில கூடுதல் ஏற்பாடுகளுடன் அக்குழாய் சரிசெய்யப்பட வேண்டுமெனவும், விரைவில் அது செய்து முடிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
சுமார் இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், தற்போது இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நேற்று (ஜனவரி 10 சனிக்கிழமை), நகராட்சி பொருத்துநர் நிஸார் மேற்பார்வையில் அங்கு பழுதை சரிசெய்யும் பணிகள் துவங்கின. அவ்விடத்தில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டது. அருகிலிருக்கும் மின்கம்பம் சரிந்துவிடாதிருப்பதற்காக, திருச்செந்தூரிலிருந்து நீளமான இரும்புத் தகடுகள் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் - மின்கம்பம் நிற்கும் பகுதியில் மண் சரிவு ஏற்படாதவாறு அத்தகடுகளை பூமிக்குள் சொருகி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நீண்ட நேரத் தேடலுக்குப் பின் பிரதான குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு சரி செய்யப்பட்டது. இதனால், தேங்காய்ப் பண்டக சாலையிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டிக்கு இதுகாலம் வரை தடைபட்டிருந்த குடிநீர் வினியோகம் சீரானது.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காணஇங்கே சொடுக்குக! |