காயல்பட்டினத்தில் மது விற்பனை கடைகள் கிடையாது. இருப்பினும் - தனி நபர் ஒருவர் பல ஆண்டுகளாக, தனது வீட்டில் இருந்து மது விற்பனை செய்து வருவதாக புகார்கள் இருந்து வந்துள்ளன. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
காயல்பட்டினத்தின் பல பெருமைகளில் ஒன்று இங்கு மது கடைகள் இல்லாதது ஆகும். இந்த நற்பெயரை கெடுக்கும் விதத்தில், சில காலமாக, தனி நபர் ஒருவர் - நகரில் - மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
மக்களுக்கு - குறிப்பாக அப்பகுதி பெண்களுக்கு - அதனால் பெரிய சிரமம் ஏற்பட்டு வந்தது. அம்மக்களின் புகாரின் அடிப்படையில், அவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக கடை நடத்தும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி - தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், சென்னையில் உள்ள DGP அலுவலகத்திலும் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தேன்.
இன்று காலை - ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இருந்து எனக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்தது. அதில் - அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இனி நகரில் மது விற்பனை நடக்காது என்றும் தகவல் வழங்கப்பட்டது. மேலும் - பேருந்து நிலைய வளாகத்தில் மது அருந்தி, பிரச்சனைகள் செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் தெரிவிக்கப்பட்டது.எல்லாப்புகழும் இறைவனுக்கே.
மக்களின் நலன் கருதி இது குறித்து நடவடிக்கை எடுத்த தமிழக DGP அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை - காயல் நகர் மக்களின் சார்பாக - பதிவு செய்கிறேன்.
பொது மக்களும், பொது நல அமைப்புகளும் இவ்விசயத்தை தொடர்ந்து கண்காணித்து வரும்படி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|