காயல்பட்டினம் நகரின் மேற்குப் பகுதியில் தேங்கும் மழை நீரை வழிந்தோடச் செய்வதற்காக, புதுப்பள்ளியில் துவங்கி, புறவழிச்சாலை வழியாக பேருந்து நிலையத்தின் எதிர்புறம் வரை நகராட்சியால் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை குறுக்கே செல்வதால், அங்கிருந்து கூலக்கடை பஜாரிலுள்ள வடிகாலுக்கு மழை நீர் செல்ல வழியில்லா நிலையிருந்தது. இதுகுறித்து நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நெடுஞ்சாலைத் துறையிடம் தொடர்ந்து முறையிட்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில், நடப்பாண்டு பெய்த அளவுக்கதிகமான வட கிழக்குப் பருவமழை காரணமாக, நகர் முழுக்க வெள்ளக்காடானதையடுத்து, வடிகாலையொட்டிய சாலை போர்க்கால அடிப்படையில் வெட்டி விடப்பட்டு, மழை நீர் வழிந்தோட வழி ஏற்படுத்தப்பட்டது. மழைப் பொழிவு நின்றுவிட்ட நிலையிலும் தோண்டப்பட்ட சாலை மூடப்படாததால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், மிதிவண்டியில் செல்வோர் கூட பேருந்து நிலையத்திற்குள் சென்றே கடக்க வேண்டியிருந்தது.
இவ்வாறிருக்க, இச்சாலையின் குறுக்கே பதிப்பதற்காக, மகாத்மா காந்தி நினைவு வளைவின் கீழ் சில நாட்களுக்கு முன் 5 குழாய்கள் கிடத்தப்பட்டிருந்தது. அக்குழாய்களைப் பதிக்கும் பணி இன்று காலையில் நெடுஞ்சாலைத் துறையால் துவக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறை திருச்செந்தூர் மண்டல ஆய்வாளர்களான வசந்தி, அம்பிகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இப்பணி, மாலையில் நிறைவுற்றது.
சாலையைப் அகலமாகத் தோண்டி, குழாய்களை உள்ளே பதித்த பின், தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது. விரைவில் அதன் மீது தார் சாலை அமைக்கப்படவுள்ளது.
முன்னதாக, நீண்ட நாட்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இப்பணி கிடப்பில் போடப்பட்டிருந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், பேருந்து நிலையம் பகுதியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர், இம்மாதம் 09ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை சென்னையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்களுள் உதவி:
M.S.M.ஷம்சுத்தீன் (நகர்மன்ற உறுப்பினர்)
மற்றும்
A.S.புகாரீ |