தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் வழமை போல விற்பனை சூடு பிடித்துள்ளது. கரும்பு, பனங்கிழங்கு, வாழைத் தார், இஞ்சி, மண் பாண்டங்கள் என அனைத்தும் குவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்து செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கண்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சூரியன் மறையும் நேரத்தில் கரும்புக் கட்டுகளில் இருவரின் கைகள் தென்படும். காசு கொடுத்து வாங்குவோருக்காக கடைக்காரர் ஒரு கை கொண்டு கட்டிலிருந்து கரும்பை உருவிக் கொடுக்க, பொங்கல் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கும் வாண்டுகள், கரும்புக் கட்டுகள் சாய்க்கப்பட்டிருக்கும் கட்டிடங்களின் பின்புறமாக மேலேறி தேவைக்கு உருவிக் கொண்டிருக்கும். சாதனை விபரங்கள் தெருக்களின் ஓரங்களில் நடைபெறும் ஒன்றுகூடலின்போது பரிமாறப்படும். காலப்போக்கில் இப்பழக்கம் காணாமல் போய்விட்டது. |