காயல்பட்டினம் நகராட்சியில் பயோ காஸ் திட்டம் அமைத்திட, ஏப்ரல் 2013இல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது என்றாலும், இது குறித்து வந்த முன் தகவல் அடிப்படையில், காயல்பட்டினம்
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - இத்திட்டத்திற்கு தேவையான இடம் கோரி, பொது மக்களிடமும், பொது நல அமைப்புகளிடமும் கோரிக்கை வைத்து ஆகஸ்ட் 2012இல் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.
பல மாதங்கள் ஆகியும் இத்திட்டத்திற்கு இடம் தர எவரும் முன்வராத நிலையில், நவம்பர் 30, 2012
கூட்டத்தில், அதிகாரிகள் வழங்கிய ஒரு சில இடங்கள், நகர்மன்றத்தின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டது.
இவ்விடங்களைப் பரிசீலனை செய்யலாம் என நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றினாலும், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 5 நாட்கள் கழித்து - டிசம்பர் 05, 2012 அன்று, நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும், இடம் கோரி காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு கடிதம் வழங்கினர்.
உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் டிசம்பர் 19, 2012 அன்று கூடிய காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் - 3 தீர்மானங்களை நிறைவேற்றினர். தீர்மானம் 2இன் படி குப்பை கொட்டுவதற்கு முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர் ரஹ்மான் - கடையக்குடி பகுதியில் ஐந்து ஏக்கர் நிலத்தைத் தர முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீர்மானம் 3 கீழ்க்காணுமாறு அமைந்திருந்தது:
கொட்டப்படும் குப்பைகளிலிருந்து எந்திரங்கள் மூலம் எரிவாயு தயாரிப்பதற்கு நமது நகராட்சிக்கு தமிழக அரசு ரூபாய் தொன்னூறு இலட்சம் ஒதிக்கீடு செய்துள்ளது, மேற்படி குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்ற எரிவாயுவால் சுற்றுச்சூழல் மாசுபடுமா? மக்கள் நலம் பாதிக்கப்படுமா? என்பன போன்ற விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி மூலமாகவும், பயோ எரிவாயு தயாரிக்கப்படுகின்ற ஆலைகளுக்கு
நேரில் சென்று ஆய்வு செய்வதற்கும், பேரவையால் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு குழுவை அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்டது.
இத்தீர்மானப்படி, இவ்வமைப்பு - ஐவர் குழு அமைத்ததா, பயோ காஸ் திட்டம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றதா, இத்திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களைப் பார்வையிட்டதா என்ற தகவல் இல்லை.
இருப்பினும் - இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 22 மாதங்கள் கழித்து, முன்னாள் நகர்மன்றத் தலைவர், அவரது மகளின் பெயரில் இருக்கும்
காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தின் ஒரு பகுதியை, அக்டோபர் 09, 2014 தேதியிட்ட பத்திரங்கள் மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கினார்.
[இடைப்பட்ட காலத்தில் - 2013ஆம், 2014ஆம் ஆண்டுகளில் - இரு மாவட்ட ஆட்சியர்கள், வட்டாசியர்கள் பல இடங்களை - பயோ காஸ் திட்டத்திற்குப் பரிந்துரை செய்தனர். அவையனைத்தும் நகர்மன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது. இது குறித்த முழு விபரம் தனிச் செய்தியாக வெளியிடப்படும்.]
ஒரு பத்திரம் மூலம் - உரக்கிடங்கு மற்றும் அதைச் சார்ந்த நகராட்சிப் பணிகளுக்கு என 4 ஏக்கர் நிலமும், மறு பத்திரம் மூலம் - 1.5 ஏக்கர் நிலம் பொது பாதைக்கும் என வழங்கப்பட்டது.
நகராட்சிக்கு உரக்கிடங்கு மற்றும் அதைச் சார்ந்த நகராட்சிப் பணிகளுக்கு 4 ஏக்கர் வழங்கப்பட்ட விபரங்கள் கொண்ட பத்திரத்தின் நகல்
நகராட்சிக்கு பொதுப்பாதைக்கு 1.5 ஏக்கர் வழங்கப்பட்ட விபரங்கள் கொண்ட பத்திரத்தின் நகல்
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தைக் காண்பிக்கும் செயற்கைக்கோள் படம்
தமிழக சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள CRZ வரைபடம், சர்வே எண் 278இன் பெருவாரியான பகுதிகள் CRZ எல்லைக்குள் வருவதாக
தெரிவிக்கின்றன. அதன்படி வடக்கு மற்றும் கிழக்கு, பகுதிகள் CRZ - 1 (Ecologically Sensitive Area) என்றும், தென் கிழக்கு கோடியின் சிறு பகுதி CRZ - 3 என்றும்
வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் - வடக்கில் ஓடும் நீரோடையின் உச்ச அலை (HIGH TIDE LINE), இந்த (சர்வே எண் 278) நிலத்தினுள்
வருவதாகவும், CRZ வரைபடம் தெரிவிக்கிறது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள Coastal Zone Management Plan வரைபடம்
சுற்றுச்சூழல் துறை வரைபடம் - சர்வே எண் 278இன் தென் மேற்கு கடைப் பகுதி, CRZக்கு அப்பாற்பட்டதாகக் காட்டுகிறது. பத்திரங்கள் கூறும் விபரப் படி, நகராட்சிக்கு வழங்கப்பட்ட இடம் - சர்வே எண் 278இல் தென் மேற்கு கோடியில் உள்ளது. நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள இடம் இவ்விடத்தினுள் அடங்கி விடும் என்றே, மேலோட்டமான பார்வை தெரிவிக்கிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள இவ்விடத்திற்கு அநேகமாக - CRZ பிரச்சனை எழ வாய்ப்புகள் குறைவு.
குப்பைகள் கொட்ட இடம் தேர்வு விஷயத்தில் - CRZ விதிமுறைகள் என்பது ஓர் அம்சமே. தேர்வு செய்யப்படும் இடம் - Municipal Solid Wastes (Management and Handling) Rules, 2000 விதிமுறைகள் படியும் அமைந்த்திருந்தால்தான், அரசு ஒப்புதல் வழங்கும்.
சர்வே எண் 278இல் குப்பைகள் கொட்ட அரசு முடிவில் தாக்கங்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ள சில Municipal Solid Wastes (Management and Handling) Rules, 2000 விதிமுறைகள்
...
2. Selection of landfill sites shall be based on examination of environmental issues...
...
7. The landfill site shall be large enough to last for 20-25 years
8. The landfill site shall be away from habitation clusters, forest areas, water bodies, monuments, national parks, wetlands
and places of important cultural, historical or religious interest
9. A buffer zone of no-development shall be maintained around landfill site and shall be incorporated in the Town Planning
Department's land use plans
...
செயற்கைக்கோள் படங்கள் தெளிவுபடுத்துவது போல், அருகில் உள்ள DCW தொழிற்சாலை - ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளாக கழிவுகளை
கடலுக்கு அனுப்ப பயன்படுத்திய நீரோடையை ஒட்டி இவ்விடம் அமைந்துள்ளது. இவ்விடத்தில் ஏற்கனவே மாசு அதிகமாக ஏற்பட்டுள்ள காரணமும், ஒப்புதல் கொடுப்பதற்கு முன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருத்தில் கொள்ள வேண்டிய ஓர் அம்சமாக இருக்கும். இதற்கு அனுமதி கொடுப்பதற்கு முன் முழு பரிசோதனை / ஆய்வு போன்றவை இதற்குத் தீர்வாகக் காணப்படலாம்.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் (4 ஏக்கர்) 20 - 25 ஆண்டுகளுக்கு போதுமானதா என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
இருப்பினும், சர்வே எண் 278 இடத்தில் குப்பை கொட்ட அனுமதி வழங்கப்படுமா / வழங்கப்படாதா என்ற கேள்விக்கு, BUFFER ZONE குறித்த முடிவே விடை தரும்.
சர்வே எண் 278 இடத்தில் குப்பைகள் கொட்ட நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள இடத்திற்கு வடக்கிலும், கிழக்கிலும் - சர்வே எண் 278 உள்ளது. மேற்கில் சர்வே எண் 285ம், தெற்கில் சர்வே எண்கள் 284 மற்றும் 279 உள்ளன.
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தைத் தவிர - சர்வே எண் 278 இன் ஏனைய பகுதிகள் (20 ஏக்கருக்கும் மேல்) CRZ எல்லைக்குள் வருகிறது.
எனவே - அப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்கு வாய்ப்புகள் மிக குறைவு.
BUFFER ZONE அமைய வேண்டிய இதர இடங்களான - சர்வே எண் 285 மற்றும் சர்வே எண் 279 ஆகியவற்றின் பெருவாரியான பகுதிகளும் CRZ எல்லைக்குள் வருகின்றன. சர்வே எண் 284 மட்டும் CRZ எல்லைக்குள் முற்றிலும் அப்பாற்பட்டு உள்ளது.
இது ஒருபுறமிருக்க, நகரில் பயோ காஸ் திட்டத்திற்குத் தோதுவாக பல இடங்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மை நகர்மன்ற உறுப்பினர்கள் சர்வே எண் 278க்கு
ஆதரவு தெரிவித்து செயல்பட்டதற்குக் கூறிய முக்கிய காரணம் - இவ்விடத்தில் குப்பையும் கொட்டலாம் என்பதே. இவ்விடத்தில் குப்பைகள் கொட்ட நகராட்சி அதிகாரிகள் - இதுவரை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய வாரியம் தெரிவித்துள்ளது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 15.1.2015 / 2:10 pm] |