காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - நகரில் நலப்பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை, தமிழக அமைச்சர்களிடம் சென்னையில் வழங்கியுள்ளார். இது குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
கடந்த வாரமும், இவ்வாரமும் சென்னையில் அமைச்சர் பெருமக்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளேன். பல சந்திப்புகளின் போது நமது 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் அவர்கள் உடன் வந்தார்கள்.
(1) காயல்பட்டினம் கடற்கரையை நமதூர் கலாச்சாரத்திற்கு உட்பட்டு சீர்படுத்திட சுற்றுலாத்துறை அமைச்சர் திரு எஸ். பி. சண்முகநாதன் அவர்களிடம் கோரிக்கை வழங்கியுள்ளேன்
(2) நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசுவாமி அவர்களிடம் - காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறை நிறைவு செய்யவேண்டிய CULVERT பணிகள் குறித்தும், காயல்பட்டினம் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் கோரிக்கை கொடுத்துள்ளேன்
(3) போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு வி. செந்தில் பாலாஜி அவர்களிடம் - காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள், குறுக்கு வழிகளில் செல்வது குறித்தும், அப்பேருந்துகள் காயல்பட்டினம் வழியாக செல்வதை உறுதி செய்ய காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் TIME
KEEPER நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்துள்ளேன்
(4) காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் அம்மா உணவக பணிகள் நிறைவுற்றுள்ளதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு செல்லூர் கே. ராஜு அவர்களிடமும், அத்துறை அரசு செயலாளர் முஹம்மது நசீமுதீன் IAS அவர்களிடமும், கூட்டுறவு துறை பதிவாளரிடமும் - காயல்பட்டினத்தில், அம்மா மருந்தகம் மற்றும் பசுமை அங்காடி திறந்திட கோரிக்கை வைத்துள்ளேன்
(5) பள்ளிக்கல்வி அரசு செயலாளர் திருமதி சபிதா IAS அவர்களிடமும், இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்களிடமும் - காயல்பட்டினம் பொது நூலகம் குறித்தும், தைக்கா பள்ளி குறித்தும் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளேன்
(6) காயல்பட்டினம் அரசு பொது மருத்துவ மனையின் கட்டிடங்களை இணைக்கும் வகையில் மேல் கூரை (ROOFED CORRIDOR) அமைத்திட சில மாதங்களுக்கு முன் கோரிக்கை வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் - மாவட்ட சுகாதார நிர்வாகம், மதிப்பீடு தயார் செய்துள்ளது. அத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜய பாஸ்கர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன்
(7) காயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் நியமனம் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன்
(8) காயல்பட்டினம் மீனவ சமுதாய நலன் கருதி தூண்டில் பாலமும், மீனவர் அங்காடியும் அமைத்திட மீன்வளத்துறை அமைச்சர் திரு
கே.ஏ. ஜெயபால் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தியுள்ளேன்
(9) நகரில் அதிகமாக விற்கப்படும் கலப்படப் பொருட்கள், காலாவதியான பொருட்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்க கோரி உணவுத் துறை அமைச்சர் திரு ஆர். காமராஜ் அவர்களிடமும், உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்களிடமும் வலியுறுத்தியுள்ளேன்
நகர் நலன் கருதி வைக்கப்பட்ட இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட, நமது மாவட்ட அமைச்சரான மாண்புமிகு எஸ். பி. சண்முகநாதன் அவர்கள் - அமைச்சர் பெருமக்களிடம் பரிந்துரையும் செய்துள்ளார்கள். அவர்களுக்கு - காயல் நகர் மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
இக்கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறிட வல்ல இறைவன் துணை புரிவான்.
இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|