மக்களின் கல்வி தேவைக்கும், மருத்துவ தேவைக்கும், அரசு அனுமதித்துள்ள இன்னும் பிற தேவைகளுக்கும் செலவிட நகராட்சி நிதி
ஒதுக்கப்படவேண்டும் என்றும், அந்த அடிப்படையில் 2015-16 நிதியாண்டிற்கான நகராட்சி பட்ஜெட்டினை தயாரிக்க அனைவரும் ஒத்துழைக்க
வேண்டும் என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்க பதிவில்
தெரிவித்திருப்பதாவது:
புதிய நிர்வாகம் பதவிக்கு வந்து மூணேகால் வருடங்கள் ஆகிறது. இக்காலகட்டத்தில் பல பணிகள் நகராட்சியில் நடந்துள்ளன. இருப்பினும் - ஒரு
சிலரின் மனதில், நகராட்சியில் எந்தப் பணியும் நடக்கவில்லை என்ற எண்ணம் உள்ளது. இந்த எண்ணத்திற்கு காரணம் - நகராட்சியில் நடந்த /
நடக்கும் சில கசப்பான விஷயங்கள், நடந்த / நடக்கும் நல்ல காரியங்களை அவர்களின் கண்ணில் இருந்து மறைப்பதாகவே நான்
கருதுகிறேன்.
2011-12, 2012-13, 2013-14 காலகட்டத்தில், நகராட்சியில் நடந்த முக்கிய பணிகள் (சாலை, பைப் லைன், மழை நீர் வடிகால், கழிவறை)
குறித்த விபரங்களை அதிகாரிகள் எனக்கு தந்தார்கள். வார்டு வாரியாக இந்த தகவல் உள்ளது. அவற்றை இணைத்துள்ளேன். சாலை, பைப் லைன்,
மழை நீர் வடிகால், கழிவறை வகைகளுக்குள் அடங்காத பல பணிகளும் நடந்துள்ளது. நடக்க வேண்டிய பல பணிகளும் உள்ளன.
எனது விருப்பம் - பணிகள் சரிசமமாக, எந்த பாகுபாடுமின்றி, அனைத்து வார்டு மக்களுக்கும் நடக்க வேண்டும். அதுமட்டுமன்றி, நகராட்சி நிதியை
- சாலை போன்ற விஷயங்களுக்கு மட்டும் இல்லாமல், மக்களின் கல்வி தேவைக்கும், மருத்துவ தேவைக்கும், அரசு அனுமதித்துள்ள இன்னும் பிற
தேவைகளுக்கும் செலவிட வழிகள் உண்டு. அது போன்ற காரியங்களுக்கும் நகராட்சி நிதி ஒதுக்கப்படவேண்டும்.
மக்களிடமும், பொது நல அமைப்புகளிடமும் கலந்தாலோசனை செய்து - 2015-16 நிதியாண்டிற்கான நகராட்சி பட்ஜெட் தயார் செய்ய அனைவரும்
ஒத்துழைக்க வேண்டும். இறைவன் நாடினால், 2015-16 நிதியாண்டிற்கான பட்ஜெட் மட்டுமன்றி, இனி வருங்காலங்களில் காயல்பட்டினம்
நகராட்சியின் ஒவ்வொரு ஆண்டின் பட்ஜெட்டும், மக்கள் பட்ஜெட்டாக வடிவம் பெற வேண்டும்.
இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் பதிவு செய்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik |